பதிவு செய்த நாள்
10
ஏப்
2014
12:04
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நேற்று நடந்தது. கடந்த, 20ம் தேதி பூச்சட்டுதலுடன் துவங்கி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று காலை, 11 மணிக்கு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்த பின், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த, 60 அடி நீள தீ குண்டத்துக்கு, கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர். அந்தியூர், தவுட்டுப்பாளையம், சின்னதம்பிபாளையம், புதுப்பாளையம், என்னமங்கலம், பூனாச்சி, வெள்ளித்திருப்பூர் என, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள், விதவிதமான அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். பாதுகாப்பு பணியில், பவானி டி.எஸ்.பி., அறுமுகம் தலைமையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், பவானி இன்ஸ்பெகடர் சண்முகம் உட்பட, 50க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுகின்றனர்.