பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
12:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாமல்லபுரம் ஸ்தயசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு, தாயார் சன்னிதி மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு செல்வம், வளம் ஆகிய மேம்பாட்டிற்காக, ஸ்ரீசுக்த ஹோமம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி வீதியுலா சென்றார். இரவு, 7:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. ஊஞ்சல் மண்டபத்தில் ஸ்தலசயன பெருமாள் மற்றும் நிலமங்கை தாயார் ஆகியோர் எழுந்தருளி, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பள்ளியறையில் தம்பதி சமேதராய் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று காலை, புத்தாண்டு சிறப்பு வழிபாடு ஹோமத்துடன் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிணற்று நீரில் அபிஷேகம்: கோவில் வளாகத்தில் உள்ள பழமையான தீர்த்த கிணறு, நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிணற்றை, தனியார் நிறுவனம் சீரமைத்து புதுப்பித்தது. இதன் துவக்க விழா, நேற்று முன்தினம காலை நடந்தது. ஹோமம் நடத்தி, கிணற்று நீர் புனிதமடைய செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேள தாள வாத்தியங்களுடன், கிணற்று நீரை வீதியுலாவாக கொண்டு சென்று, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.