Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » நரஸிம்ஹ பாரதி சுவாமிகள்
நரஸிம்ஹ பாரதி சுவாமிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2014
02:04

ஸ்ரீசாரதா பீடத்தை தமக்குப் பின் சிறப்புடன் நிர்வகிக்க, தக்கதொரு சீடர் தேடியும் கிடைக்காத நிலையில், அம்பிகையைச் சரணடைந்த நரஸிம்ஹ பாரதி சுவாமிகள், ஸ்தலத்தை விட்டுச் செல் என்ற அம்பிகையின் மொழியைக் கேட்டு, அதன் பொருள் என்னவாக இருக்கும் எனச் சிரித்தார். மகான்களைப் பொறுத்தவரை, ஸ்தலம் என்பது அவர்களுடைய தூல சரீரத்தையும் குறிப்பதாகும். எனில், தம்முடைய தூல சரீரத்தை விட்டுவிடச் சொல்லுகிறாளா அம்பிகை? அப்படி நினைத்தபொழுதில் சரீரத்தை உடனே துறந்துவிடுவது என்பது சாத்தியம் இல்லையே! அப்படியே, தம் யோக பலத்தால் அது சாத்தியப்பட்டாலும்கூட, சாந்நித்தியம் நிரம்பப் பெற்ற பீடமாம் சாரதா பீடத்தை நிர்வகிக்கத் தக்கதொரு சீடர் கிடைக்க வேண்டுமல்லவா? அதற்குத்தானே இத்தனை பிராயத்தனமும் பிரார்த்தனையும்! இப்படி அவர் மிகுந்த பிரயத்தனம் செய்வதற்கும், அம்பிகையைப் பிரார்த்தனை செய்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் தமது 21-வது வயதிலேயே சாரதா பீடத்தின் பீடாதிபதி ஆனபடியாலும், தொடர்ந்து வந்த ஆறாவது நாளிலேயே அவருடை குரு அபிநவ ஸச்சிதானந்த பாரதி சுவாமிகள் ஸித்தி அடைந்துவிட்டபடியாலும், பீடத்திற்குரிய சம்பிரதாயங்களை நன்கு தெரிந்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாமலே போய்விட்டது. இருந்தாலும், விவரம் தெரிந்தவர்களிடம் இருந்து அனைத்துச் சம்பிரதாயங்களையும் தெரிந்து தெளிவு பெற்றார். தமக்குப் பின் பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்பவருக்கு அப்படி ஒரு சிரமமான நிலை இருக்கக் கூடாது என்று நினைத்தார். அதனால்தான் தாம் தேக ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே, தக்கதொரு சீடரைத் தேர்வு செய்யத் தொடங்கினார். ஆனால், அம்பிகையோ அவரை ஸ்தலத்தை விட்டுச் செல் என்கிறாளே! மேலும் சிந்தித்தவருக்கு, ஸ்தலத்தை விட்டுச் செல் என்பதற்கு மற்றுமொரு பொருளும் விளங்கியது. சாரதா பீடத்தை விட்டுச் சிறிது காலம் வெளியே செல்ல வேண்டும் என்பது அம்பிகையின் விருப்பம்போலும் என்று பொருள் விளங்கிக்கொண்டவர். தாம் சிறிது காலம் மைசூர் சமஸ்தானத்தில் தங்கி வரலாம் என்று முடிவு செய்தார்.

அப்போது, மைசூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்தவர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார். சிருங்கேரி சாரதா பீட ஆச்சார்யர்களை ராஜ குருவாகப் போற்றி வழிபட்ட வம்சம் மைசூர் அரச வம்சம். வம்ச வழி மாறாமல் கிருஷ்ணராஜ உடையாரும் நம் நரஸிம்ஹ பாரதி சுவாமிகளிடம் அளவற்ற பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்தார். சுவாமிகள், சாரதா மடத்துக்கு தக்கதொரு சீடரைத் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிந்து கொண்டவர், ஜோதிடர்களின் ஆலோசனையுடன் பல ஜாதகங்களைப் பெற்று சுவாமிகளுக்கு அனுப்பி வைத்தார். ஒன்றும் சரிவரப் பொருந்தி வராததால்தான் இத்தனை பிரயத்தனம்! நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் மைசூர் சமஸ்தானத்துக்கு விஜயம் செய்ய இருப்பதாக ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது. ஆசார்ய சுவாமிகளின் வருகை பற்றித் தெரிய வந்ததும், சர்வ சக்தியும், யோக ஸித்தியும் பெற்றிருந்த மகானை சாஸ்த்ரோக்தமாக பூரண கும்ப மரியாதைகளுடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டார் மைசூர் மன்னர்.

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள், ராமேஸ்வரத்தில் சர்வதீர்த்தத்துக்கு மகிமை சேர்த்தவர் அல்லவா! அவரை வரவேற்க, மந்திர புஷ்ப மந்திரத்தால் புனிதம் பெற்ற தீர்த்தம் நிரம்பிய பூரண கும்ப மரியாதை பொருத்தம்தானே! அது என்ன சர்வதீர்த்தத்துக்கு மகிமை சேர்த்த சம்பவம்? நரஸிம்ஹ பாரதி சுவாமிகள், சாரதா பீடத்தின் பீடாதிபதியானதும், தேசத்தின் பல இடங்களுக்கும் யாத்திரை சென்றார். அந்த வகையில், ஒருமுறை சிருங்கேரியில் இருந்து விஜய யாத்திரை மேற்கொண்டவர் காளஹஸ்தி, திருப்பதி, காஞ்சி, சிதம்பரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் போன்ற திவ்விய ÷க்ஷத்திரங்களைத் தரிசித்தபடி, 1838-ம் ஆண்டு ராமேஸ்வரத்துக்கு விஜயம் செய்தார்.  ராமேஸ்வர கோயிலின் வடக்குப் பக்கத்தில் கோடி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. ராமேஸ்வர யாத்திரை மேற்கொள்பவர்கள், கோயிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து, நிறைவாக இந்த கோடி தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்வதுடன், அந்தத் தீர்த்த நீரை சிறிது எடுத்துக்கொண்டு, தங்கள் ஊருக்குச் சென்று, கோடி தீர்த்த சமாராதனை என்று செய்வது மரபு!

இந்த கோடி தீர்த்தம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வருபவர்களிடம் காலணா பெற்றுக்கொண்டு, அவர்களாகவே ஒரு குடம் நீரை எடுத்து யாத்ரீகர்களிடம் கொடுப்பார்கள். ராமேஸ்வர விஜயத்தின்போது நம்முடைய மகான் நரஸிம்ஹ பாரதி சுவாமிகள், கோடி தீர்த்தத்துக்குச் சென்றபோது, அவரிடமும் அதேபோல் காலணா கொடுக்க வேண்டும். என்றும், தாங்கள்தான் நீரை எடுத்துக்கொடுப்போம் என்றும் கூறினார்கள். சுவாமிகளுடன் வந்தவர்கள், சுவாமிகளைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்கூட, அவர்கள் கேட்பதாயில்லை. சுவாமிகள் எதையும் பொருட்படுத்தவில்லை. அவருடைய பார்வையில், சற்றுத் தொலைவில் இருந்த சர்வதீர்த்தம் தென்பட்டது. அதுவும் சாரதையின் திருவுள்ளம்தான் போலும்! உடனே தம்முடன் வந்த பரிவாரங்களைப் பார்த்து, ஏன் வீணாக வீவாதம் செய்ய வேண்டும்? அதோ பாருங்கள், சர்வ தீர்த்தம்! கோடி தீர்த்தம் என்பது கோடி என்ற எண்ணிக்கைக்குள் அடங்கிவிட்டது ஆனால், சர்வ தீர்த்தமோ எல்லைகள் அற்றது அல்லவா! கோடி தீர்த்தமும் அதனுள் அடக்கதான். எனவே, வாருங்கள், நாம் எல்லோரும் சர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யலாம். என்று கூறவே, சுவாமிகளும் அவருடன் வந்தவர்களும் மட்டுமல்லாது, மற்றவர்களும் சர்வ தீர்த்தத்துக்கே சென்று ஸ்நானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி எங்கும் பரவிவிட்டது. அதன்பின், ராமேஸ்வர யாத்திரை மேற்கொள்பவர்கள் எல்லோரும் சர்வ தீர்த்தத்தில் நீராடுவதையே வழக்கமாகக் கொண்டதால், கோடி தீர்த்தம் தன்னுடைய முக்கியவத்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது. கோடித் தீர்த்தத்தின் மூலம் தங்கள் ஜீவனத்தை நடத்தி வந்த அந்தக் குறிப்பிட்ட பிரிவினர் மிகுந்த சிரம நிலைக்கு ஆட்பட்டார்கள். அத்துடன், கோடி தீர்த்தத்திலும் புதர்கள் மண்டி மூடத் தொடங்கிவிட்டது. ஆனால், இந்த நிலை வெகு காலம் நீடிக்கவில்லை. காரணம், கோடி தீர்த்தமும் ஒரு புண்ணிய தீர்த்தம் அல்லவா? யாரோ சிலரின் அறியாமை காரணமாக அது தன் மகிமையை, முக்கியத்துவத்தை இழக்கலாமா? நம் சுவாமிகள் மூலமாக சர்வ தீர்த்தத்துக்குப் பெருமை சேர்த்த சாரதாம்பிகை, மீண்டும் நம் சுவாமிகளைக் கொண்டே, கோடி தீர்த்தமும் மங்கிய தன் மகிமையையும் பொலிவையும் திரும்பப் பெறும்படியாகச் செய்தாள்.

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் சர்வதீர்த்தத்துக்கு ஒரு மகிமை சேர்த்துச் சென்றதில் இருந்து சுமார் 35 வருடங்கள் கோடி தீர்த்தமானது தன் மகிமையையும் பொலிவையும் இழந்தே காணப்பட்டது. இந்த நிலையில்தான், 1873-ம் வருடம் மதுரைக்கு விஜயம் செய்தார் நரஸிம்ஹ பாரதி சுவாமிகள். கோடி தீர்த்தத்துக்கு உரிமை கொண்டாடிய அந்தக் குறிப்பிட்ட பிரிவினர், தங்கள் சிரமநிலை தீரவேண்டுமானால், உடனே மதுரைக்குச் சென்று சுவாமிகளைத் தரிசித்து, தங்கள் வழி என்று முடிவுசெய்து, மதுரைக்குச் சென்றார்கள். சுவாமிகளை நேரில் தரிசித்ததும் அவருடைய திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டார்கள். நடப்பது எல்லாமே சாரதாம்பிகையின் லீலைதான் என்பது சுவாமிகளுக்குத் தெரியாதா என்ன? தாம் விரைவிலேயே ராமேஸ்வரம் வருவதாகக் கூறியவர். அதேபோல் ராமேஸ்வரத்துக்கு வருகை புரிந்தார். நேராக சர்வ தீர்த்தத்துக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு, தம் கமண்டலத்தில் சிறிது சர்வ தீர்த்தத்தையும் எடுத்துக்கொண்டு, தமது பரிவாரங்களுடன் கோடி தீர்த்தத்துக்கு வந்தார். அதற்குள் கோடி தீர்த்தத்தில் மண்டிக்கிடந்த புதர்களெல்லாம் களையப்பட்டு, சீர்செய்யப்பட்டிருந்தன.

கோடி தீர்த்தத்தின் அருகில் சென்ற சுவாமிகள், அம்பிகை சாரதையை தியானித்தபடி, தம் கமண்டலத்தில் இருந்த சர்வ தீர்த்த நீரை கோடி தீர்த்தத்தில் ப்ரோக்ஷணம் செய்தார். பின்னர், தாம் அருகில் ஸ்நானம் செய்வதுடன், தம்முடைய பரிவாரங்களையும் ஸ்நானம் செய்ய வைத்தார். இவ்விதமாக, கோடி தீர்த்தமானது இழந்த தன் பொலிவையும் மகிமையையும் முன்னிலும் அதிகமாகப் பெற்றது. சர்வ தீர்த்தத்துக்கு மகிமை சேர்த்தவரும், கோடி தீர்த்தம் தன் இழந்த பெருமையை மீண்டும் பெறச் செய்தவருமான சுவாமிகளை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மைசூர் மன்னர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். அந்த மைசூரில்தான் சுவாமிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த சாரதா பீடத்துக்கான வாரிசைச் சந்திக்க நேர்ந்தது?                              

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar