பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
10:04
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை அவிநாசியப்பர் சன்னதி முன்புள்ள நந்தியம் பெருமானை சுற்றி, தொட்டி கட்டப்பட்டது. நந்தி மூழ்கும் அளவுக்கு நீர் நிரப்பி, பூஜை நடத்தப்பட்டது. சிவக்குமார குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள், வருண சுத்தி ஜெபத்தை பாராயணம் செய்தனர். கோவில் ஓதுவா மூர்த்தி, சுந்தரமூர்த்தி நாயனார், அப்பர் சுவாமி ஆகியோர் பாடிய மழை பதிகத்தை பாராயணம் செய்தார். நாதஸ்வர கலைஞர்கள், அமிர்ஷவர்ஷினி, ஏக ராக குறிஞ்சி ஆகிய மழை ராகங்களை இசைத்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. சிவக்குமார குருக்கள் கூறுகையில், ""மழை வேண்டி சிறப்பு பூஜை இன்று (நேற்று) நடத்தப்பட்டது. நாளை (இன்று) காலை 8.00 மணி முதல், அவிநாசியப்பருக்கு அபிஷேகம் செய்வித்து, வருண ஜெப பாராயணம் நடத்தப்படும், என்றார்.