பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
12:04
நாமக்கல்: மாவட்டத்தில் மழை பெய்யவில்லை என்பதற்காக, கடவுள் பெயரை சொல்லி அதிகாரிகள் தப்பிக்காதீர்கள், என மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி எச்சரித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று, கோடை வறட்சியில் குடிநீர் பிரச்னை தீர்ப்பது தொடர்பான, பல்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம், குடிநீர் ஆதாரங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன, எனக் கேட்டார். அப்போது, கொல்லிமலை யூனியன் அதிகாரிகள், கொல்லிமலை மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. நீராதாரங்கள் வறண்டு கிடப்பதால், ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்னை தீர்க்க, மலை மேல் வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எனவே, "கடவுள் பார்த்து மழை பெய்ய வைத்தால், பிரச்னையை தீர்க்க முடியும் என தெரிவித்தனர். அதே போல், ஒவ்வொரு அதிகாரிகளும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் உள்ள பிரச்னை, நிதி, புதிய போர்வெல் அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து பேசினர்.
அப்போது, கலெக்டர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது: அதிகாரிகள், குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கூறுவதை விட்டு விட்டு, கடவுள் பெயரை சொல்லி தப்பிக்க வேண்டாம். குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து, மக்களிடம் இருந்து, குடிநீர் பிரச்னை தொடர்பாக புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும், இரண்டு மாதங்களுக்கு, வாரம் ஒருநாள் குடிநீர் பிரச்னை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அதில், முந்தைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத அதிகாரி மற்றும் அலுவலர்கள் மீது, கூட்டரங்கிலேயே "சார்ஜ் மெமோ வழங்கப்படும். பழுதான போர்வெல்களை பழுது நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்காக, பல்வேறு திட்டங்களில் இருந்தும் நிதி எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நிதி இல்லை என்றால், என்னிடம் அணுகி பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று, குடிநீர் பிரச்னையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், பஞ்சாயத்து அளவில் இருந்தே, பிரச்னைகளை களைய முடியும். புதிய போர்வெல் அமைப்பது தேவையென்றால், உடனடி அனுமதி பெற்று, மக்களுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். மேலும், மே, 8ம் தேதி நடக்கும் சிறப்பு முகாமிற்குள், ஆபத்தான போர்வெல் கிணறுகள் அடையாளம் கண்டு, மூடிவிட வேண்டும். வருங்காலங்களில், ஆழ்குழாய் கிணறு அமைக்க விரும்புவோர், வட்டார அலுவலரிடம், 15 நாட்களுக்கு முன்னதாக, மனு அளித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உதவி கலெக்டர் கோபாலசுந்தரராஜ், திட்ட இயக்குனர் மாலதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் மனோகரன், கோட்டாட்சியர்கள் செங்கோட்டையன், காளிமுத்து, ஆர்.டி.ஓ., ரஜினிகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.