பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
கம்பம்: கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு முதல், அலை அலையாய் ஆயிரக்கணக்கான பக்தர்கள்,அக்னி சட்டி எடுத்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த 16 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமூகத்தவர்கள், மண்டகப்படி நடத்தி வருகின்றனர். விதவிதமான அலங்காரத்தில், அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதி உலா வருகிறார்.சித்திரை திருவிழாவின், முக்கிய நிகழ்வான அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை துவங்கியது. ஒவ்வொன்றாக வந்த அக்னி சட்டிகள், நள்ளிரவில் நூற்றுக்கணக்காகி, அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகம் திணறியது.
நான்கு திசைகளில் இருந்து கொட்டு மேளத்துடன், அக்னி சட்டிகள் எடுத்து பக்தர்கள் ஆடி வந்தனர். அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பிறந்த குழந்தைகளை முதுகிலும், வயிற்றிலும் கட்டிக் கொண்டும், அக்னி சட்டி எடுத்து தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.மாலையில், சாரல் மழை பெய்ததால்,கோயில் வளாகத்தில் உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண்பானை எடுத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் பக்தர்களால் எளிதாக நிறைவேற்றப்பட்டது.அக்னி சட்டியுடன் பூக்குழி : கடந்த 40 ஆண்டுகளாக பூக்குழி இறங்கியு கோடாங்கி பெரியசாமியின் மகன் வாசு.
இவர், கடந்த ஆண்டு முதல், பூக்குழி இறங்கி வருகிறார்.நேற்று,இரவு 10 மணியளவில் கோயிலிற்கு முன்பாக வாசு, கையில் அக்னிசட்டியுடன் பூக்குழி இறங்கினார், சுற்றி நின்ற பக்தர்கள் பரவசம் அடைந்தனர். நேற்று, காலை கம்பராயப் பெருமாள் வேளாளர் சங்கம் சார்பில், மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கில், டிராக்டர்களில் வேளாளப் பெருமக்கள் மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிற்பகலில் ஆயிரக்கணக்கான பெண்கள், முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.