பதிவு செய்த நாள்
03
மே
2014
03:05
செஞ்சி,: பழமை வாய்ந்த செவலபுரை அகத்தீஸ்வரர் கோவிலில் தடைபட்டுள்ள திருப்பணிகள் விரைவாக நடக்க இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செஞ்சி தாலுகா செவலபுரை கிராமத்தில் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. வராக நதிக்கு மேலே உள்ள இந்த ஊரை சிவாலயத்தின் பெயராலேயே சிவாலயபுரி என அழைத்தனர். பிற்காலத்தில் இந்த ஊர் செவலபுரையாக மாறியுள்ளது.தெற்கு புறத்தில் இருந்து வந்த அகத்திய மாமுனி இங்கு தங்கி சுயம்புவான சிவலிங்கத்தை வணங்கிய தால் இங்குள்ள மூலவரை அகத்தீஸ்வரர் என அழைக்கின்றனர்.
14ம் நூற்றாண்டுசோழர்களின் கட்டட கலையுடன் கட்டிய இக்கோவில் அம்மனை பிரகன்நாயகி என்கின்றனர். கோவிலில் உள்ள 13 மற்றும் 14ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்களில் கோவிலுக்கு வழங்கிய கொடைகள் பற்றியும், இதில் முறைகேடு செய்தால் ஏற்படும் பாவங்கள் குறித்தும் விளக்கி உள்ளனர்.
70 சென்ட் நிலப்பரப்பில் உள்ள இக்கோவில் சுவர்கள் முழுவதையும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கருங்கற்களால் கட்டியுள்ளனர்.
மகா மண்டபம், உற்சவ மண்டபம், கருவறை என மூன்று பிரிவுகளாக உள்ளன. மகா மண்டபத்தில் நடுவில் நான்கு உருளை வடிவ தூண்கள் அமைந்த மேடை உள்ளது.மேடையின் எதிரே நந்தியும், வலது புறம் விநாயகர், இடப்புறம் முருகன் சன்னதியும் உள்ளன. கோவி லுக்கு வெளியே பிரகன்நாயகிக்கு தனி சன்னதி அமைத்துள்ளனர். பிற்காலத்தில் கோவிலின் நுழைவு வாயிலில் பிள்ளையார் கோவிலும், ஈசானிய மூலையில் நவக்கிரக கோவிலும் அமைத்துள்ளனர்.
1904ல் கும்பாபிஷேகம்
கோவிலின் எதிரே கருவறையை நோக்கி நந்தியும், பலி பீடமும், இதன் பின் பக்கம் சதுர வடிவ மேடை மீது 30 அடி உயர தீப ஸ்தம்பமும் உள்ளது. கோவில் திருச்சுற்று மதிலுக்கு வெளியே கிழக்கில் குளம் அமைந்துள்ளனர்.கோவில் சுற்றுப்பாதையில் பலகை கல்லில் ஜேஸ்டா தேவி சிலை உள்ளது. நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீப விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி மற்றும் பிரதோஷ வழிபாடுகள் நடக்கின்றன.
பழமையால் பலவீன மடைந்த கோவிலை ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1904ல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது.
1913ம் ஆண்டு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பிறகு திருப்பணிகள் செய்யாமலும், கும்பாபிஷேகம் செய்யாமலும் இருந்து வந்தது.
திருப்பணி துவக்கம்
கோவிலில் பூஜைகளை செய்து வந்த பரம்பரை அறங்காவலர் முத்துகுமாரசாமி குருக்கள் மற்றும் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 2010 ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகளை துவங்கினர்.
இதில் பொதுமக்களின் பங்காக 5.10 லட்சம் செலுத்த வேண்டும். முதல் கட்டமாக இந்து சமய அற நிலையத் துறை ஒதுக்கிய 4 லட்சம் நிதியிலிருந்து 2 லட்சம் செலவில் திருச்சுற்று மதிலை புதுப்பித்தனர். அடுத்த பணிகள் துவங்கும் முன்பு முத்து குமாரசாமி குருக்கள் இறந்ததால் திருப்பணிகள் நின்றன.
மீதமுள்ள தொகையும் வங்கி கணக்கில் முடங்கி கிடக்கிறது. அடுத்துள்ள பரம்பரை அறங்காவலர் களை அங்கீகாரம் செய்யாமல் கால தாமதம் செய்து வருவதால் திருப்பணிகள் முடங்கி கிடக்கின்றன.வராகநதி கரையோரம் உள்ள செவலபுரையை சுற்றியுள்ள கிராமங்கள் செழிப்புடன் இருந்தவை, சில ஆண்டுகளாக மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. அகத்தியர் வழிபட்ட சிவாலயத்தின் திருப்பணிகள் தடைபட்டதே இதற்கு காரணம் என கிராம மக்கள் கருதுகின்றனர்.திருப்பணிகள் தொடர்ந்து நடக்க தேவையான நடவடிக்கைகளை இந்து சமய அறநியைத்துறையினர் விரைந்து எடுக்க வேண்டும்.