பதிவு செய்த நாள்
05
மே
2014
10:05
சிவகங்கை அருகே, விவசாய நிலத்தில், 100 ஆண்டுகள் பழமையான, 14 வெண்கல சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை, கண்ணங்குடி அருகே உள்ள, துணை நிலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லையா, 55; விவசாயி. இவர், சில நாட்களாக, தன் நிலத்தை, மண்அள்ளும் இயந்திரம் மூலம், சமப் படுத்தி வந்தார். அப்போது, 5 அடி ஆழத்தில், வித்தியாசமான சத்தம் கேட்டது. இதையடுத்து, அந்த இடத்தை, முழுவதுமாக தோண்டிய போது, 100 ஆண்டு கள் பழமையான, தலா, இரண்டரை அடி உயரமுள்ள பெருமாள், அம்மன் சிலைகள், ஒரு அடி உயரமுள்ள, பரிவார மூர்த்தி சிலைகள் என, மொத்தம், 14 சிலைகள் கிடைத்தன. இது குறித்து, கிராம மக்கள், வருவாய் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தேவகோட்டை தாசில்தார் கயல்விழி, சிலைகளை கைப்பற்றி, தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். தாசில்தார் கயல்விழி கூறுகையில், ""சிலைகளை, தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரிடம் ஒப்படைக்க உள்ளோம், என்றார். அவர்கள் ஆய்வு செய்த பின் இச்சிலைகள் பற்றி முழுவிவரம் தெரியும்.