பதிவு செய்த நாள்
05
மே
2014
10:05
திருப்பதி: திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 25 மணி நேரம் காத்திருக்க வேண்டிஉள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, கோடை விடுமுறையில் பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளனர். அதனால், கடந்த, மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் திருமலையில் அலைமோதுகிறது. நேற்று தர்ம தரிசனத்தில், பக்தர்கள், 25 மணிநேரமும், பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு, 16 மணிநேரமும் காத்திருந்தனர். ஏழுமலையானை மதியத்திற்குள், 15 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டதால், நேற்று மதியத்துடன், 300 ரூபாய் விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணிவரை, 48,600 பக்தர்களும், சனிக்கிழமை, 73,500 பக்தர்களும், ஏழுமலையானை தரிசித்தனர். நேற்று மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளை கடந்து, 2 கி.மீ., தொலைவிலும், பாதயாத்திரை பக்தர்கள், 15 காத்திருப்பு அறைகளை கடந்து, 1 கி.மீ., தொலைவிலும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர். இன்று காலை, 8:00 மணிக்கு, 300 ரூபாய் விரைவு தரிசனம் துவங்க உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.