பதிவு செய்த நாள்
06
மே
2014
11:05
கேதார்நாத்: உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் சிவன் கோவில், நேற்று முன்தினம் தரிசனத்திற்கு திறக்கப்பட்ட போது, ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்களே வந்திருந்தனர். காங்கிரசை சேர்ந்த முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோவில். ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படும், 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவில், பனி சூழ்ந்த குன்றுகளுக்கு அடியில், மந்தாகினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூன் 15ல், இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கோவில் பலத்த சேதமடைந்தது. சாலைகள் சிதைந்து போனதால், கோவிலுக்கு வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சிக்கித் தவித்தனர். மிகுந்த சிரமங்களுக்கு நடுவே, கோவில் சீரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. சரியான பாதையில்லாமல், 12 கி.மீ., கரடுமுரடான பாதையில் நடந்து வந்த, ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.