பதிவு செய்த நாள்
06
மே
2014
05:05
கரூர்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரரின், 100 வது ஆராதனை விழா துவங்கியது. இதில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். கரூர் மாவட்டம் நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் ஆராதனை விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு, 100 வது ஆராதனை விழா, கடந்த, 4 ம் தேதி காலை, 8 மணிக்கு லட்சார்ச்சனையுடன் துவங்கியது. இதையடுத்து , நேற்று காலை, 11 மணிக்கு நெரூர் அக்ரஹார தெருவில் இருந்து சதாசிவ பிரமேந்திரர் உருவப்படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது ஜீவசமாதியில் வைத்து லட்சார்ச்சனை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மஹன் யாஸ அபிஷேகம், வேதபாராயணம் ஆகியவை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு, மாலை, கர்நாடகா இசை கச்சேரி, உபன்யாசம், வளர் இளம் கலைஞர்கள் அரங்கேற்றம் ஆகியவை நடந்தது. வரும் 9 ம் தேதி சதாசிவ பிரமேந்திரர் உற்சவம் சிறப்பாக நடக்கிறது. அலங்கரிப்பட்ட படம் விழா பந்தலுக்கு வந்ததும், சிறப்பு ஆராதனை நடைபெறும். பிறகு, அன்று மதியம் 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு, இலையில் அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் சாப்பிட்டு முடித்த இலையில் ஆண், பெண் பக்தர் கள் அங்கபிரதட்சணம் செய்வார்கள். அப்போது, சதாசிவ பிரமேந்திரரின் கீர்த்தனைகள் பாடப்படுகிறது. ஆராதனை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கும் போது, அதில், எதாவது ஒரு ரூபத்தில் சதாசிவ பிரமேந்திரர் அமர்ந்து சாப்பிடுவதாக ஐதீகம் உள்ளது. இதனால், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.