லாலாப்பேட்டை: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த சிந்தலவாடி மகாமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா கடந்த, 4ம்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. அன்று காலை லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து லாலாப்பேட்டை, மேலசிந்தலவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூச்சொரிதல் விழாக்குழு மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வண்ண, வண்ண பூக்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் சிறியவர் முதல் பெரியவர் வரை தீர்த்தக்குடம் எடுத்து வரத் தொடங்கினர்.தேரோட்டம் வரை தீர்த்தக்குடம் எடுத்தல் வைபவம் மற்றும் நாள்தோறும் மண்டகப்படி நிகழ்ச்சியும், தொடர்ந்து நடக்கிறது. வரும் 14ம்தேதி முதல் 17ம்தேதி வரை பால்குட விழாக்கள் நடக்கும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சித்திரை தேரோட்டம் வரும், 18ம்தேதி நடக்கிறது. வரும் 19ம் தேதி அக்னிசட்டி, அலகு, தொட்டில் குழந்தை உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.