செஞ்சி: கும்பாபிஷேகம் நடக்க உள்ள செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் . செஞ்சி பீரங்கிமேட்டில்உள்ள ஐநூறு ஆண்டுகள் பழமையான அருணாசலேஸ்வரர் கோவிலில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடத்தாமல் இருந்தனர். இக்கோவிலை 7 ஆண்டுகளாக 3 கோடி ரூபாய் மதிப்பில் பழமையான முறையில் புதுப்பித்துள்ளனர். புதிதாக தியான மண்டபம், ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று நிலை வாயில் கோபுரம் மற்றும் சீனுவாச பெருமாள் சன்னதி அமைத்துள்ளனர். ஜூன் 1ம் தேதி 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. கோவிலின் எதிரே உள்ள பழமையான கோவில் குளம் சாக்கடை குட்டையாக மாறியது. முள் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி பொது கழிப்பிடமாக உள்ளது. இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கேட்டதால் பேரூராட்சி மூலம் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க முன்மொழிவை அரசுக்கு அனுப்பினர். இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் பணிகளை செய்ய உள்ளனர். முறைப்படி இப்பணிகள் துவங்க மூன்று மாதங்கள் வரை தாமதமாகும். ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்தில் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக குளக்கரையில் உள்ள முள் புதர்களை அகற்றி சுத்தம் செய்து, துர்நாற்றம் வீசுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.