பதிவு செய்த நாள்
07
மே
2014
02:05
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக் காக, நான்கு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மலைக் கோவிலில், மூன்று இடங்களில், குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் : தற்போது, கோடை காலம் என்பதால், பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில், கூடுதலாக நான்கு இடங்களில், புதிதாக தண்ணீர் தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.டிராக்டர் மூலம்...: தண்ணீர் தொட்டிகளுக்கு, டிராக்டர் மூலம் நீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. நான்கு கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளதால், பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது. குளிக்க தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படுமா? : திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடிக்கின்றனர். இவர்கள் குளிப்பதற்காக, மலைக் கோவிலில் உள்ள, தேவஸ்தான குளியல் அறைக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு, தண்ணீர் வசதியில்லை. இதனால், பக்தர்கள் அருகில் உள்ள, டீக்கடை மற்றும் ஓட்டல்களில், பணம் கொடுத்து, தண்ணீர் வாங்கி குளிக்கும் அவலம் தொடர்கிறது. குடிநீர் வசதி ஏற்படுத்திய நிர்வாகம், குளிப்பதற்கும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.