டேராடூன்: கேதார்நாத் யாத்திரைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததால், பக்தர்கள் கேதார்நாத்திற்கு புனிய யாத்திரை மேற்கொள்வதை, ஒரு வாரத்திற்கு தள்ளிப்போட வேண்டும், என, அக்கோவிலின் தலைமை பூசாரி பீமாசங்கர் லிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. இந்தத் தருணத்தில் கோவிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது பிரச்னையை உருவாக்கும். லிஞ்சவுலியிலிருந்து கேதார்நாத் செல்லும் பாதை, மிகவும் சரிவானது. அப்பகுதியில் பனி நிறைந்துள்ளது. மண்ணும் ஈரப்பதமாக உள்ளது. இன்னும் ஏழு, எட்டு நாட்களில் பனி உருகத் துவங்கி விடும். அப்படி உருகி விட்டால், பாதை தெளிவாக, பக்தர்கள் பயணிக்க ஏதுவாக இருக்கும். அதனால், ஒரு வாரம் கழித்து, கேதார்நாத் யாத்திரை மேற்கொள்ளும்படி பக்தர்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, பீமாசங்கர் லிங் கூறினார்.