பதிவு செய்த நாள்
12
மே
2014
12:05
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, 32 அடி உயரமுள்ள மாகாளியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ப.வேலூர் அடுத்த புலவர்பாளையத்தில், செல்வ விநாயகர், மாரியம்மன், வெள்ளையம்மா, பொம்மியம்மா சமேத மதுரைவீரன் பரிவாக சகித, 32 அடி உயர பிரம்மாண்ட ரூப மாகாளியம்மன் சிலையுடன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை, விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை, அஷ்ட பந்தனம், நாடி சந்தானம் நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு வெற்றி கணபதி பூஜை, 108 மூலிகை த்ரவிய ஹோமம், காலை, 8 மணிக்கு கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து, 8.30 மணிக்கு மாரியம்மன், விநாயகர், மதுரைவீரன் ஸ்வாமி, பிரம்மாண்டமான, 32 அடி உயர மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.