பதிவு செய்த நாள்
12
மே
2014
12:05
நாமக்கல்: சின்னமுதலைப்பட்டி அமச்சி அம்மன் கோவிலில், மே, 14ம் தேதி, திருத்தேர் பெருவிழா, கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த சின்னமுதலைப்பட்டியில், அமச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 6ம் தேதி இரவு, காப்புகட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. நாளை (மே, 13) காலை, 8 மணிக்கு அமச்சி அம்மனுக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புனித காவிரி தீர்த்தம் அழைத்து வரப்படுகிறது. இரவு, 8 மணிக்கு மறு காப்பு கட்டுதல், திருத்தேர் அலங்காரம் செய்யப்படுகிறது. மே, 14ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு, திருத்தேர் பெருவிழாவும், பழனியாண்டவர் பூஜை, நாகர்பாலி பூஜை, வடிசோறு மாவிளக்கு பூஜை, எல்லை கருப்பணார் ஸ்வாமி பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை, 4 மணிக்கு, பொங்கல் வைத்து பூஜை செய்தல், இரவு, 8 மணிக்கு குண்டம் இறங்கும் விழா, மாவிளக்கு பூஜை, வாணவேடிக்கையும் நடக்கிறது. மே, 15ம் தேதி காலை, 7 மணிக்கு கிடா வெட்டு பூஜை, வேஷங்கள், 16ம் தேதி காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராடல், அம்மன் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே, 17ம் தேதி இரவு, 11 மணிக்கு, கருப்பண்ணார் ஸ்வாமிக்கு அடசல் பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, குடிபாட்டுக்காரர்கள் சேவை அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.