பதிவு செய்த நாள்
13
மே
2014
12:05
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் சுவாமி கோவில் திருத்தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ராஜ அலங்காரம் : மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், கடந்த 5ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது.தினமும் காலை மற்றும் இரவில், ஸ்தலசயனப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, ரத பிரதிஷ்டை யாக சாலை வழிபாடு நடந்தது.தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் ஸ்தலசயனப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன், 6:00 மணிக்கு, அலங்கார தேரில் எழுந்தருளினார். அவருக்கு, பூதத்தாழ்வார் அளித்த ஆடையை சாற்றி, தேரில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவிந்தா... கோவிந்தா... : 9:00 மணிக்கு, மங்கல வாத்திய இசை, வேதபாராயண முழங்க, தேர் நிலையிலிருந்து புறப்பட்டது.பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என, முழங்கி, மாடவீதிகள் வழியாக தேரை இழுத்துச் செல்ல, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். பிற்பகல், 12:00 மணிக்கு, தேர், நிலையை அடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.