பதிவு செய்த நாள்
13
மே
2014
12:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பெருமாள் திருமலையிலிருந்து இறங்கி, வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீப ஆராதனைகள் செய்யப்பட்டு, அதிகாலை 4:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது.பின்னர், காலை 4:25 மணிக்கு தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் திருவீதி உலா புறப்பட்டார். கோவில் ஆழ்வார் பிரகாரம் சுற்றி, ஆஞ்சநேயர் கோவில் வழியாக செட்டித்தெரு, விளக்கடி கோவில் தெரு, காமராஜர் சாலை, நான்கு ராஜவீதி வழியாக உலா வந்த பெருமாள், காலை 9:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தார்.காலை 11:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. கண்ணாடி அறையில் வீற்றிருந்த பெருமாள் நேற்று மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் வீதியுலா சென்றார்.