பதிவு செய்த நாள்
15
மே
2014
03:05
உலகம், அதாவது இயற்கையும் மனிதனும் படைக்கப்பட்டது பற்றி முதல் அத்தியாயத்தில் கண்டோம். இங்கே அவை ஒன்றுக்கொன்று சார்ந்து வாழ்கின்ற தன்மைபற்றி பேசப்படுகிறது.
தா ஏதா தேவதா: ஸ்ருஷ்ட்டா அஸ்மின் மஹத்யர்ணவே
ப்ராபதன் தம் அசனாபிபாஸாப்யாம் அன்வவார்ஜத் தா ஏமைப்ரு- வன்னாயதனம் ந: ப்ரஜானீஹி யஸ்மின் ப்ரதிஷ்ட்டிதா அன்ன- மதாமேதி (1)
தா:- அவை; ஏதா:- இந்த; தேவதா:- உயிரினங்கள்; ஸ்ருஷ்ட்டா:- படைக்கப்பட்ட; அஸ்மின்- இந்த; மஹதி- பெரிய; அர்ணவே- கடலில்; ப்ராபதன்- விழுந்தார்கள்; தம்- அவர்களை; அசனா பிபாஸாப்யாம்- பசி தாகத்திற்கு; அன்வவார்ஜத்- உள்ளாக்கினார்; தா:- அவர்கள்; ஏனம்- அவரிடம்; அப்ருவன்- கூறினார்கள்; ந:- எங்களுக்கு; ஆயதனம்- இடம்; ப்ரஜானீஹி- தெரிவியுங்கள்; யஸ்மின்- எங்கே; ப்ரதிஷ்ட்டிதா:- தங்கி; அன்னம்- உணவை; அதாம- உண்போம்; இதி- என்று.
1. படைக்கப்பட்ட உயிரினங்கள் இந்தப் பெரிய
கடலில் விழுந்தார்கள். பிரம்மதேவன் அவர்களைப் பசி
தாகத்திற்கு உள்ளாக்கினார். நாங்கள் தங்கி, உணவை
உண்பதற்கு எங்களுக்கு ஓர் இடத்தைக் காட்டுங்கள்
என்று அவர்கள் பிரம்மதேவனிடம் கேட்டார்கள்.
படைப்பு பற்றிய விளக்கம் தொடர்கிறது. படைக்கப் பட்டவர்களிடம் பசி மற்றும் தாக உணர்ச்சியை ஏற்படுத்தினார் பிரம்மதேவன். அவர்கள் கடலில் வீழ்ந்தார்கள். எந்தக் கடலில்?
வாழ்க்கைக் கடலில் என்று இதற்கு அற்புதமான விளக்கம் தருகிறார் ஸ்ரீசங்கர். அவர் கூறுகின்ற ஒவ்வொரு வாக்கியமும் பலமுறை படித்து, ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான பொருள் நிறைந்தது. அதன் திரண்ட பொருளை இங்கே தருகிறோம்:
அது வாழ்க்கை என்னும் பெரிய கடல். அறியாமை, ஆசை, செயல்கள் ஆகியவற்றின் காரணமாக எழுகின்ற துக்கமே அந்தக் கடலிலுள்ள தண்ணீர். கொடிய நோய், மூப்பு, மரணம் ஆகிய பயங்கர ஐந்துக்கள் அந்தக் கடலில் உலவுகின்றன. ஆரம்பமோ முடிவோ எல்லைகளோ இல்லாமல் அந்தக் கடல் பரந்து கிடக்கிறது. இளைப்பாறுவதற்கு ஓர் இம்மியளவு இடம்கூட அங்கே இல்லை. உலகத்துடன் தொடர்புகொண்டு, புலன்கள் கொண்டுவருகின்ற அற்ப சுகங்களே ஏதோ ஆறுதலாக உள்ளன. ஆயிரமாயிரம் தீமைகள் அலைகளாகச் சுழன்று அடிக்கின்றன. உலக இன்பங்களை அனுபவிப்பதற்கான தாகம் அந்த அலைகளின் வேகத்தை மேலும் கூட்டுகிறது. அந்த அலைகளால் அடியுண்டு, உயிரினங்கள், ஐயோ, ஐயோ என்று அலறி எழுப்புகின்ற கூக்குரல் எங்கும் நிறைந்துள்ளது. இந்த அவலங்கள் போதாதென்று அவர்கள் சிலவேளைகளில் நரகத்திலும் தள்ளப்படுகிறார்கள்.
ஆனாலும், இந்த வாழ்க்கைக் கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி உள்ளது. உண்மை, நேர்மை, தானம், கருணை, அஹிம்சை, புலனடக்கம், சுயக்கட்டுப்பாடு, பொறுமை ஆகியவை அதன் துடுப்புகளாக உள்ளன. தூயவர்களின் தொடர்பும் தியாகமும் அந்தத் தோணியில் ஏறிச் சென்றால் மறுகரையாகிய மீண்டும் பிறப்பற்ற நிலையை அடையலாம்.
படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி, தாகம் போன்ற தேவைகளும் துன்பங்களும் நிறைந்த வாழ்க்கையைப் பெற்றார்கள் என்பது கருத்து.
தாப்யோ காமானயத் தா அப்ருவனன் வை நோஸயமலமிதி
தாப்யோ ஸச்வமானயத் தா அப்ருவன்ன வை நோஸயமலமிதி (2)
தாப்ய:- அவர்களுக்கு; காம்- பசுவை; ஆனயத்- கொண்டுவந்தார்; தா:- அவர்கள்; அப்ருவன்- கூறினார்கள்; அயம்- இது; ந:- எங்களுக்கு; ந அலம் வை- போதாது; இதி- என்று; அச்வம்- குதிரை.
1. ஸம்ஸார ஸமுத்ரே மஹதி அவித்யா காம ப்ரபவ துக்க உதகே, தீவ்ரரோக ஜரா ம்ருத்யு மஹாக்ராஹே அனாதாவனந்தே அபாரே நிராலம்பே விஷயேந்த்ரிய ஜனித ஸுகலவ லக்ஷண விச்ராமே, பஞ்சேந்த்ரிய அர்த்த த்ருண்மாருத வி÷க்ஷõய உத்தித அனர்த்த சதமஹோர்மௌ மஹாரௌரவாதி அனேக நிரயகத ஹாஹேதி கூஜித ஆக்ரோசன உத்பூத மஹாரவே, ஸத்ய ஆர்ஜவ தான தயா அஹிம்ஸா சம தம த்ருத்யாதி ஆத்மகுணபாதேய பூர்ணஜ்ஞான உடுபே ஸத்ஸங்க ஸர்வ த்யாக மார்கே மோக்ஷதீரே ஏதஸ்மின் மஹதி அர்ணவே ப்ராபதன் பதிதவத்ய:
2. மற்ற வார்த்தைகளின் பொருள் முதல் வாக்கியத்தைப் போன்றதே.
2. பிரம்மதேவன் அவர்களுக்கு ஒரு பசுவைக்
கொண்டு வந்தார். இது எங்களுக்குப் போதாது
என்று அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு குதிரையைக் கொண்டு வந்தார். அதற்கும் அவர்கள், இது
எங்களுக்குப் போதாது என்று கூறினார்கள்.
தாப்ய: புருஷமானயத் தா அப்ருவன் ஸுக்ருதம் பதேதி புரு÷ஷா வாவ ஸுக்ருதம் தா அப்ரவீத் யதாயதனம் ப்ரவிசதேதி (3)
தாப்ய:- அவர்களுக்கு; புருஷம்- மனிதனை; ஆனயத்- கொண்டுவந்தார்; தா:- அவர்கள்; அப்ருவன்- கூறினார்கள்; பத- ஆகா; ஸுக்ருதம்- சிறப்பாகப் படைக்கப்பட்டவன்; புரு:- மனிதன்; வாவ- நிச்சயமாக; தா:-அவர்களிடம்; அப்ரவீத்- கூறினார்; யதா ஆயதனம்- உரிய இடங்களில்; ப்ரவிசத:- புகுந்துகொள்ளுங்கள்; இதி- என்று.
3. பிறகு பிரம்மதேவன் அவர்களுக்காக ஒரு மனிதனைக் கொண்டு வந்தார். அவனைக் கண்டதும்
அவர்கள், ஆகா! இவன் மனிதன். நிச்சயமாக இவன்
சிறப்பாகப் படைக்கப்பட்டவன் என்று கூறினார்கள்.
அவர்களிடம் பிரம்மதேவன், அவரவர்க்கு உரிய
இடங்களில் புகுந்துகொள்ளுங்கள் என்றார்.
அக்னிர்வாக்பூத்வா முகம் ப்ராவிசத் வாயு: ப்ராணோ பூத்வா நாஸிகே ப்ராவிசத் ஆதித்யச்சக்ஷúர்பூத்வா அக்ஷிணீ ப்ராவிசத் திச: ச்ரோத்ரம் பூத்வா கர்ணௌ ப்ராவிசன் ஓஷதிவனஸ்பதயோ லோமானி பூத்வா த்வசம் ப்ராவிசம்ச்சந்த்ரமா மனோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசன் ம்ருத்யுராபானோ பூத்வா நாபிம் ப்ராவிசதாபோ ரேதோ பூத்வா சிச்னம் ப்ராவிசன் (4)
அக்னி: - நெருப்பு; வாக்- பேச்சு; பூத்வா- ஆகி; முகம்- வாயில்; ப்ராவிசத்- புகுந்தது; வாயு:- காற்று; ப்ராண:- பிராணன்; நாஸிகே- மூக்கில்; ஆதித்ய:- சூரியன்; சக்ஷú:- பார்வை; அக்ஷிணீ- கண்கள்; திச:- திசைகள்; ச்ரோத்ரம்- கேட்கும் தன்மை; கர்ணௌ- காதுகளில்; ஒஷதி வனஸ்பதய:- மூலிகைகளும் செடிகொடிகளும்; லோமானி- முடிகள்; த்வசம்- தோலில்; சந்த்ரமா-சந்திரன்; மன:- மனம்; ஹ்ருதயம்- இதயத்தில்; ம்ருத்யு:- மரணம்; அபான:- அபானன்; நாபிம்- தொப்புளில்; ஆப:- தண்ணீர்; ரேத:- விந்து; சிச்னம்- குறி.
4. நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது. காற்று
பிராணனாகி மூக்கில் புகுந்தது. சூரியன் பார்வையாகி
கண்களில் புகுந்தது. திசைகள் கேட்கும் தன்மையாகி
காதுகளில் புகுந்தது. மூலிகைகளும் செடிகொடிகளும் முடிகளாகி தோலில் புகுந்தன. சந்திரன் மனமாகி
இதயத்தில் புகுந்தது. மரணம் அபானனாகி தொப்புளில் புகுந்தது. தண்ணீர் விந்துவாகி குறியில் புகுந்தது.
தமசனாயாபிபாஸே அப்ரூதாமாவாப்யாம் அபிப்ரஜானீஹீதி தே அப்ரவீதேதாஸ்வேவ வாம் தேவதாஸு ஆபஜாமி ஏதாஸு பாகின்யௌ கரோமீதி தஸ்மாத் யஸ்யை கஸ்யை ச தேவதாயை ஹவிர்க்ருஹ்யதே பாகின்யாவேவ அஸ்யாம் அசனாயாபிபாஸே பவத: (5)
தம்- அவரிடம்; அசனாயா பிபாஸே- பசியும் தாகமும்; அப்ரூதாம்- கூறின; ஆவாப்யாம்- எங்கள் இருவருக்கும்; அபிப்ரஜானீஹி- தெரிவியுங்கள்; தே- அவர்களிடம்; அப்ரவீத்- கூறினார்; ஏதாஸு- இந்த; தேவதாஸு ஏவ- தேவர்களிடமே; வாம்- உங்கள் இருவருக்கும்; ஆபஜாமி- அளிக்கிறேன்; ஏதாஸு- அவர்களின்; பாகின்யௌ- பங்குதாரர்களாக; கரோமி- செய்கிறேன்; இதி- என்று; தஸ்மாத்- அதனால்; யஸ்யை கஸ்யை ச- எந்த; தேவதாயை - தேவர்களுக்கு; ஹவி:- உணவு; க்ருஹ்யதே- கொடுக்கப்பட்டாலும்; அசனாயா பிபாஸே- பசியும் தாகமும்; அஸ்யாம்- அதில்; பாகின்யௌ ஏவ- பங்குதாரர்களாகவே; பவத:- ஆவார்கள்.
5. பசியும் தாகமும் பிரம்மதேவனை அணுகி, நாங்கள்
இருவரும் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தெரிவியுங்கள்
என்று கேட்டுக்கொண்டன. அதற்கு பிரம்மதேவன்,
இந்தத் தேவர்களிடமே உங்களுக்கு இருப்பிடம்
அளிக்கிறேன். அவர்களின் உணவில் பங்குதாரர்களாகவும் ஆக்குகிறேன் என்றார். அதனால், எந்த தேவனுக்கு உணவு அளிக்கப்பட்டாலும், பசியும் தாகமும் அதில் பங்கேற்கின்றன.
உபநிஷதங்களின் மொழி மிகவும் புராதனமானது, பூடகமானது. எனவே சில பகுதிகளின் பொருள் என்ன என்பதைச் சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இந்த மந்திரங்கள் பல இடங்களில் புதிர்போல் காணப்படுகின்றன.
ஆனால் முதல் மற்றும் இந்த அத்தியாயங்களுக்கு இடையில் ஒரு தொடர்பைக் காண முடிகிறது. 1:1.4- இல் பிரம்ம தேவனிலிருந்து இயற்கையின் பல்வேறு அம்சங்கள் தோன்றியதாகக் கண்டோம். இயற்கையின் அதே அம்சங்கள் எதிர்வரிசைக் கிராமத்தில் மனிதனில் புகுவதாக இங்கே 1:2.4-இல் கூறப்படுகிறது. உதாரணமாக பிரம்ம தேவனின் வாயிலிருந்து பேச்சு வெளிவந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வந்தது. (1:1.4) தேவர்களின், அதாவது இயற்கையின் அம்சமாகிய நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது. (1:2.4)
இறைவனிலிருந்து பிரம்மதேவன், பிரம்ம தேவனிலிருந்து இயற்கை, இயற்கையிலிருந்து மனிதன் என்று படைப்பு நிகழ்ந்ததாக நாம் கொள்ளலாம்.
படைப்பில் மனிதன் சிறந்தவன் என்ற கருத்தையும் இங்கே நாம் காண்கிறோம். 1:2.4 மனிதன் சிறப்பாகப் படைக்கப்பட்டவன் என்கிறது. கட்டிடங்களுள் தாஜ்மகால் போல் கோயில்களுள் மனிதனே சிறந்தவன் என்று சுவாமி விவேகானந்தர் கூறுவது இங்கு நினைவுகூரத் தக்கது.
இதி ஐதரேயோபநிஷதி ப்ரதமாத்யாயே த்விதீய: கண்ட: