பதிவு செய்த நாள்
15
மே
2014
03:05
கடவுள் உலகைப் படைத்து, அதனை வழிநடத்தவே தேவசக்திகளையும் படைத்து, மனிதனையும் படைத்ததை கவிதை நயத்துடன் இந்த அத்தியாயம் விளக்குகிறது.
உணவைப் படைத்தல்: 1-10
ஸ ஈக்ஷதேமே நு லோகாச்ச லோகபாலாச்ச அன்னமேப்ய: ஸ்ருஜா இதி (1)
ஸ:- அவர்; ஈக்ஷத- நினைத்தார்; இமே நு- இவையே; லோகா: ச- உலகங்களும்; லோகபாலா: ச- உலகக்காவலர்களும்; ஏப்ய:- இவர்களுக்கு; அன்னம்- உணவை; ஸ்ருஜை- உண்டாக்குவேன்; இதி- என்று.
1. உலகங்களையும் அதன் காவலர்களையும்
படைத்துவிட்டேன். இனி அவர்களுக்கு உணவை
உண்டாக்குவேன் என்று கடவுள் நினைத்தார்.
ஸோஸபோஸப்யதபத் தாப்யோஸபிதப்தாப்யோ மூர்த்திரஜாயத யா வை ஸா மூர்த்திரஜாயதான்னம் வை தத் (2)
ஸ:- அவர்; அப:- தண்ணீர்; அப்யதபத்-சிந்தித்தார்; தாப்ய:- அதிலிந்து; அபிதப்தாப்ய:- சிந்தித்ததிலிருந்து; மூர்த்தி:- உருவம்; அஜாயத- தோன்றியது; யா- எது; ஸா- அது; மூர்த்தி:- உருவம்; அஜாயத வை- தோன்றியதோ; தத்- அது; அன்னம் வை- உணவே.
2. கடவுள் தண்ணீரைப்பற்றிச் சிந்தித்தார். தண்ணீரிலிருந்து ஓர் உருவம் தோன்றியது. அது உணவே.
ததேததபிஸ்ருஷ்ட்டம் பராஙத்யஜிகாம்ஸத் தத்வாசா- ஜிக்ருக்ஷத் தன்னாசக்னோத்வாசா க்ரஹீதும் ஸ யத்தைனத் வாசா ஸக்ரஹைஷ்யத் அபிவ்யாஹ்ருத்ய ஹைவான்னம் அத்ரப்ரஸ்யத் (3)
தத்- அது; ஏதத்- இந்த; அபிஸ்ருஷ்ட்டம்- தோன்றிய; பராக்- திரும்பி; அத்யனிகாம்ஸத்- ஓட முயற்சித்தது; தத்- அதனை; வாசா- வாக்கினால்; அஜிக்ருக்ஷத்- பிடிக்க முயற்சித்தான்; தத்- அது; வாசா- வாக்கினால்; க்ரஹீதும்- பிடிக்க; ந அசக்னோத்- முடியவில்லை; ஸ: -மனிதன்; வாசா- வாக்கினால்; ஏனம்- இதனை; யத் ஹ அக்ரஹைஷ்யத்- பிடிக்க முடிந்திருந்தால்; அன்னம்- உணவு; அபிவ்யாஹ்ருத்ய- பெயரைச் சொல்வதால்; ஏவ ஹ- மட்டுமே; அத்ரப்ஸ்யத்- திருப்தி அடைந்திருப்பான்.
3. கடவுள் படைத்த உணவு திரும்பி ஓட
ஆரம்பித்தது. மனிதன் அதனை வாக்கினால் பிடிக்க
முயற்சித்தான். முடியவில்லை. வாக்கினால் பிடிக்க
முடிந்திந்தால் உணவு என்று சொல்வதாலேயே
அவன் திருப்தி அடைந்திருப்பான்.
தத் ப்ரணேனாஜிக்ருக்ஷத் தன்னாசக்னோத் ப்ராணேன க்ரஹீதும் ஸ யத்தைனத் ப்ராணேன அக்ரஹைஷ்யத் அபிப்ராண்ய ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் (4)
4. ஓட முயற்சித்த உணவை மனிதன் முகர்வதன்
மூலம் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை.
முகர்வதால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை
முகர்வதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.
தச்சக்ஷúஷாஜிக்ருக்ஷத் தன்னாசக்னோச்சக்ஷúஷா க்ரஹீதும் ஸ யத்தைனத் சக்ஷúஷா அக்ரஹைஷ்யத் த்ருஷ்ட்வா ஹைவானன்னம் அத்ரப்ஸ்யத் (5)
சக்ஷúஷா- பார்வையால்.
5. ஓட முயற்சித்த உணவை மனிதன் பார்வையால்
பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. பார்வையால்
பிடிக்க முடிந்திருந்தால் உணவைப் பார்ப்பதாலேயே
அவன் திருப்தி அடைந்திருப்பான்.
தச்சரோத்ரேணாஜிக்ருக்ஷத் தன்னாசக்னோத் ச்ரோத்ரேண க்ரஹீதும் ஸ யத்தைனத் ச்ரோத்ரேண அக்ரஹையஷ்யத் ச்ருத்வா ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் (6)
ச்ரோத்ரேண- கேட்பதால்.
6. ஓட முயற்சித்த உணவை மனிதன் கேட்பதன்மூலம்
பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. கேட்பதால்
பிடிக்க முடிந்திருந்தால் உணவைப்பற்றி பேசுவதைக்
கேட்பதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.
தத் த்வசாஜிக்ருக்ஷத் தன்னாசக்னோத் த்வசா க்ரஹீதும் ஸ யத்தைனத் த்வசா ஸக்ரஹைஷ்யத் ஸ்ப்ருஷ்ட்வா ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் (7)
த்வசா- தொடு உணர்ச்சியால்; ஸ்ப்ருஷ்ட்வா- தொடுவதால்.
7. ஓட முயற்சித்த உணவை மனிதன் தொடு
உணர்ச்சியால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை.
தொடு உணர்ச்சியால் பிடிக்க முடிந்திருந்தால்
உணவைத் தொடுவதாலேயே அவன் திருப்தி
அடைந்திருப்பான்.
தன்மனஸாஸஜிக்ருக்ஷத் தன்னாசக்னோன் மனஸா க்ரஹீதும் ஸ யத்தைனன் மனஸா ஸக்ரஹைஷ்யத் த்யாத்வா ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் (8)
மனஸா- மனத்தால்; த்யாத்வா- நினைப்பதால்.
8. ஓட முயற்சித்த உணவை மனிதன் மனத்தால்
பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. மனத்தால்
பிடிக்க முடிந்திருந்தால் உணவை நினைப்பதாலேயே
அவன் திருப்தி அடைந்திருப்பான்.
தச்சிச்னேன அஜிக்ருக்ஷத் தன்னாசக்னோத் சிச்னேன க்ரஹீதும் ஸ யத்தைனத் சிச்னேன ஸக்ரஹைஷ்யத் விஸ்ருஜ்ய ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் (9)
சிச்னேன- குறியால்; விஸ்ருஜ்ய- வெளிப்படுத்துவதால்.
9. ஓட முயற்சித்த உணவை மனிதன் குறியின்மூலம்
பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. குறியின் மூலம்
பிடிக்க முடிந்திருந்தால் உணவை வெளிப்படுத்துவதாலேயே
அவன் திருப்தி அடைந்திருப்பான்.
ததபானேனாஜிக்ருக்ஷத் ததாவயத் ஸை÷ஷாஸன்னஸ்ய க்ரஹோ யத்வாயுரன்னாயுர்வா ஏஷ யத்வாயு: (10)
தத்- அதனை; அபானேன- அபானனால்; அஜிக்ருக்ஷத் - பிடிக்க முயற்சித்தான்; தத்- பிறகு; ஆவயத்- பிடித்தான்; ஸ:- அது; ஏஷ:- இந்த; அன்னஸ்ய- உணவின்; க்ரஹ:- பிடிப்பது; யத்- எது; வாயு:- அபானன்; ஏஷ:- இது; யத்- எது; வாயு:- அபானன்; அன்னாயு: வை- உணவால் வாழ்க்கையைத் தாங்குவது.
10. ஓட முயற்சித்த உணவை மனிதன் அபானனால்
பிடிக்க முயற்சித்தான். அப்போது அவனால் பிடிக்க
முடிந்தது. அபானன்தான் உணவைப் பிடிக்கிறது.
எனவே அபானனே உணவின்மூலம் வாழ்க்கையைத்
தாங்குகிறது.
பிராண சக்தியின் ஓர் அம்சமே அபானன். வாய் வழியாக உள்ளே செல்கின்ற சக்தி இது. வாய் வழியாக உள்ளே செல்கின்ற உணவை ஏற்றுக்கொண்டு, உரிய அவயவங்களுக்குத் தேவையான அளவு பகிர்ந்து அளிப்பது அபானன் ஆகும். எனவேதான் அபானனால் உணவைப் பிடிக்க முடிந்தது, அபானனே வாழ்க்கையைத் தாங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
கடவுள் மனிதனுள் புகுதல்: 11- 12.
உலகையும், அதனை வழிநடத்துவதற்காக தேவர்களையும், உணவையும் படைத்த கடவுள் மனிதனில் புக நினைத்தார். எங்கும் நிறைந்தவரான கடவுளே மனிதனில் ஆன்மாவாக உள்ளார் என்பதை, அவர் மனிதனில் புகுந்ததாக, கவிதைநயத்துடன் விவரிக்கின்றன இந்த மந்திரங்கள்.
ஸ ஈக்ஷத கதம் ந்விதம் மத்ரிதே ஸ்யாதிதி ஸ ஈக்ஷத கதரேண ப்ரபத்யா இதி ஸ ஈக்ஷத யதி வாசா ஸபிவ்யாஹ்ருதம் யதி
ப்ராணேனாபிப்ராணிதம் யதி சக்ஷúஷா த்ருஷ்ட்டம் யதி ச்ரோத்ரேண ச்ருதம் யதி த்வசா ஸ்ப்ருஷ்ட்டம் யதி மனஸா த்யாதம் யத்யபானேனாப்யபானிதம் யதி சிச்னேன விஸ்ருஷ்ட்டமத கோஸஹமிதி (11)
ஸ:- கடவுள்; ஈக்ஷத- நினைத்தார்; மத்- என்னை; ரிதே-தவிர; கதம் நு- எப்படி; இதம்- இது; ஸ்யாத்- இருக்க முடியும்; இதி- என்று; கதரேண- எந்த வழியில்; ப்ரபத்யை- புகுவேன்; வாசா- வாக்கினால்; யதி அபிவ்யாஹ்ருதயம்- பேச முடியுமானால்; ப்ராணேன- மூச்சினால்; சக்ஷúஷா- பார்வையால்; யதி த்ருஷ்ட்டம்- பார்க்க முடியுமானால்; ச்ரோத்ரேண- கேட்கும் தன்மையால்; யதி ச்ருதம்- கேட்க முடியுமானால்; த்வசா- தொடு உணர்ச்சியால்; யதி ஸ்ப்ருஷ்ட்டம்- தொட முடியுமானால்; மனஸா- மனத்தால்; யதி த்யாதம்- நினைக்க முடியுமானால்; அபானேன- அபானனால்; யதி அப்யபானிதம்- ஜீரணிக்க முடியுமானால்; சிச்னேன- குறியால்; யதி விஸ்ருஷ்ட்டம்- வெளித்த முடியுமானால்; அத-பிறகு; அஹம் - நான்; க:- யார்; இதி- என்று.
11. கடவுள் நினைத்தார்:
நான் இல்லாமல் இது எப்படி இயங்க முடியும்? எந்த வழியில் நான் இதனுள் புகுவேன்? வாக்கினால் பேசவும், மூச்சினால் சுவாசிக்கவும், பார்வையால் பார்க்கவும், கேட்கும் தன்மையால் கேட்கவும், தொடு உணர்ச்சியால் தொடவும், மனத்தால் நினைக்கவும், அபானனால் ஜீரணிக்கவும், குறியால் வெளிப்படுத்தவும் முடியுமானால் நான் எதற்கு?
உடம்பு- உயிர்த் (மனம்+பிராணன்) தொகுதி இங்கு இது என்று கூறப்பட்டுள்ளது. உடம்பும் மனமும் ஜடப்பொருட்கள். இவற்றால் இயங்க முடியாது. இறைவன் மட்டுமே உணர்வுப்பொருள். அவரது ஆற்றல் இருந்தால் மட்டுமே உடம்பும் மனமும் இயங்க முடியும். மின்விசிறி, பல்பு, மின்அடுப்பு, குளிர்சாதனப்பெட்டி என்று எத்தனையோ பொருட்கள் இருக்கலாம். ஆனால் மின்சாரம் இருந்தால் மட்டுமே இவை அத்தனையும் இயங்க முடியும். அதுபோல், இறைவனின் ஆற்றல் உள்ளே புகுந்தால் மட்டுமே உடம்பும் மனமும் புலன்களும் இயங்க முடியும். வாய் பேசுகிறது, மூக்கு சுவாசிக்கிறது என்றெல்லாம் கூறினாலும் உண்மையில் இவற்றைச் செய்வது இறைவனின் சக்தியே.
ஜடப்பொருளாக இருக்கின்ற உடம்பு- உயிர்த் தொகுதியில் எந்த வழியாக நுழைந்து அதனை இயங்க வைப்பது என்று கடவுள் நினைத்தார்.
ஸ ஏதமேவ ஸீமானம் விதார்யைதா த்வாரா ப்ராபத்யத ஸைஷா வித்ருதிர்நாம த்வாஸ்ததேதன்னாந்தனம் தஸ்ய த்ரய ஆவஸதா: த்ரய: ஸ்வப்னா: அயமாவஸதோ ஸயமாவஸதோ ஸயமாவஸதே (12)
ஸ:- கடவுள்; ஏதம் ஏவ- இதுவே; ஸீமானம்- உச்சியை; விதார்ய- பிளந்துகொண்டு; ஏதயா- அந்த; த்வாரா - வாசல் வழியாக; ப்ராபத்யத- புகுந்தார்; ஸா ஏஷா த்வா:- அந்த வாசல்; வித்ருதி:- வித்ருதி; நாம- பெயர்; தத் ஏதத்- அந்த; நாந்தனம்- ஆனந்தத்தின் உறைவிடம்; தஸ்ய- அவருக்கு; த்ரய:- மூன்று; ஆவஸதா:- உறைவிடங்கள்; ஸ்வப்னா:- கனவுகள்; அயம்- இது; ஆவஸத:- உறைவிடம்.
12. உச்சியைப் பிளந்துகொண்டு, கடவுள் அந்த வாசல் வழியாக உள்ளே புகுந்தார். அந்த வாசலின் பெயர் வித்ருதி. அது ஆனந்தத்தின் உறைவிடம். அவருக்கு உறைவிடங்கள் மூன்று; கனவுகள் மூன்று. இது உறைவிடம், இது உறைவிடம், இது உறைவிடம்.
உடம்பு- உயிர்த் தொகுதியான ஜடப்பொருளில் இறைவனாகிய உணர்வுப்பொருள் சேரும்போது மட்டுமே வாழ்க்கை நடைபெறும். உடம்பினுள் அவர் உச்சந்தலை வழியாக உள்ளே நுழைந்தார் என்று மந்திரம் கூறுகிறது.
இந்த உடம்பு 11 வாசல்களை உடைய நகரம். என்கிறது கட உபநிஷதம். 2 கண்கள், 2 காதுகள், 2 நாசித்துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம் மற்றும் உச்சந்தலையிலுள்ள பிரம்ம ரந்திரம் ஆகியவையே அந்த 11 வாசல்கள். இந்த பிரம்ம ரந்திரத்தை இறைவழி, அதாவது இறைவனை அடைவதற்கான வழி, மீண்டும் பிறப்பற்ற வழி என்று தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது.
இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன்வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான் என்கிறது கட உபநிஷதம்.
இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்படுகின்றன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன, அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்குப் புலனாகாதவை. பிரார்த்தனை, தெய்வீக வாழ்க்கை போன்றவை மூலம் தூய்மையும் ஆற்றலும் வாய்ந்த மனத்தினால் மட்டுமே அறியத் தக்கவை.
1. புரம் ஏகாதச த்வாரம்- கட உபநிஷதம், 2:2.1.
2. ஸ இந்த்ரயோனி: - தைத்திரீய உபநிஷதம், 1:6.2.
3. சதம் சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய:
தாஸாம் மூர்தானமபி நி: ஸ்ருதைகா
தயோர்த்வமாயன் அம்ருதத்வமேதி
விஷ்வங்ஙன்யா உத்கரமணேபவந்தி- கட உபநிஷதம், 2:3.16.
உச்சந்தலையிலுள்ள பிரம்ம ரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது. இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும் மீதி பத்து வாசல்களுள் ஏதாவது ஒன்றில் நிறைவு பெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகளற்ற யோகியால் மட்டுமே பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திங்கள் கூறுகின்றன.
வித்ருதி என்றால் பிளக்கப்பட்டது என்று பொருள். இதுவே பிரம்மரந்திம். இந்த பிரம்ம ரந்திரத்தையே இறைவன் புகுந்த வழியாக இந்த மந்திரம் கூறுகிறது.
உடம்பு- உயிர்த் தொகுதியான ஜடப்பொருளில் உணர்வு புகுவதையே இறைவன் புகுவதாக இந்த மந்திரம் கூறுகிறது. உடம்பு- உயிர்த் தொகுதியான ஜடப்பொருளில் எப்போது உணர்வு புகுகிறது? தாயின் கருவில் இருக்கும்போது.
தந்தையின் உடம்பில் விந்துவாக இருக்கின்ற உயிர் தாயின் உடம்பை அடைகிறது. பிறகு சொந்த உடம்பில் தங்குகிறது. தந்தையின் உடம்பு, தாயின் உடம்பு, சொந்த உடம்பு ஆகிய மூன்று உறைவிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மூன்று கனவுகள் என்றால் மூன்று நிலைகள். விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்று மூன்று நிலைகளில் மனிதன வாழ்கிறான். இதுவே மூன்று கனவுகள் என்று கூறப்பட்டது. மூன்று நிலைகளையும் கனவு என்று குறிப்பிடுவது கருத்தில் கொள்ளத் தக்கது.
நிலையாமை என்ற பண்பே கனவை நிர்ணயிக்கிறது. கனவிலிருந்து விழித்தால் கனவில் கண்டவை அனைத்தும் இல்லாமல் போய்விடுகின்றன. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கும்போது, அந்த நிலையில் பெற்ற இன்பம் மறைந்துவிடுகிறது. அதுபோலவே, இன்று நாம் விழிப்பு நிலை என்று கருதுகின்ற நிலையும் இறையனுபூதி பெறும்போது மறைந்துவிடுகிறது. எனவே இதுவும் நிலையற்றது. அன்னை ஸ்ரீசாரதா தேவியின் உரையாடல் ஒன்று இதனை விளக்குகிறது:
அன்னை. ... உலகமே ஒரு கனவுதான். இதுவும்கூட (விழிப்புநிலை) ஒரு கனவுதான்.
பக்தர்: இல்லை, இது கனவல்ல. கனவானால் கணநேரத்தில் கலைந்து போயிருக்கும். ஆனால் இது பல பிறவிகளாக தொடர்கிறதே!
அன்னை: இருக்கலாம். ஆனாலும் அது கனவே தவிர வேறல்ல. இதோ, இரவில் நீ கனவு கண்டாய், இப்போது அது இல்லை. மகனை இழந்த விவசாயி ஒருவன் தான் ஓர் அரசன், எட்டு மகன்களுக்குத் தந்தை என்று கனவு கண்டான். கனவு கலைந்து எழுந்த அவன், அந்த எட்டு குழந்தைகளுக்காக அழுவதா, இந்த ஒரு குழந்தைக்காக அழுவதா? என்று கேட்டான்.
எனவே அறுதி நிலையாகிய அனுபூதி நிலையிலிருந்து பார்க்கும்போது மூன்று நிலைகளுமே கனவுதான்.
அனுபூதி: மனிதன் கனவுமயமான இந்த உலகை நாடாமல், தன் சொந்த இயல்பான ஆன்மாவை நாடி அனுபூதி பெற வேண்டும் என்று இந்த மந்திரம் கூறுகிறது; அனுபூதியின் விளைவையும் தெரிவிக்கிறது.
ஸ ஜாதோ பூதான்யபிவ்யைக்யத் கிமிஹான்யம் வாவதிவஷதிதி ஸ ஏதமேவ புருஷம் ப்ரஹ்ம ததமமபச்யத் இதமதர்சமிதீ 3 (13)
ஜாத: ஸ:- பிறந்த அவன்; பூதானி- உயிரினங்கள்; அபிவ்யைக்யத்- ஆலோசித்தான்; இஹ- இங்கே; அன்யம்- வேறு; கிம்- என்ன; வாவதிஷத்- ஆலோசிப்பதற்கு; இதி- என்று; ஸ:- அவன்; ஏதம்- இந்த; புருஷம்- உடம்பில் உறைபவன்; ஏவ- மட்டுமே; ததமம்- எங்கும் நிறைந்த; ப்ரஹ்ம- கடவுள்; அபச்யத்- கண்டான்; இதம்- இது; அதர்சம்- கண்டன்; இதி- என்று.
13. மனிதனாகப் பிறந்த அவன் மற்ற உயிரினங்களைப்பற்றி ஆலோசிக்கத் தொடங்கினான். ஆலோசிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? உடம்பில் உறைகின்ற ஆன்மாவே எங்கும் நிறைந்து கடவுளாக இருப்பதை அவன் கண்டான். இதை நான் கண்டுகொண்டேன் என்று ஆச்சரியத்துடன் கூறினான்.
கடவுள் உலகைப் படைத்தார்; அதைக் காப்பதற்காக தேவர்களைப் படைத்தார் (1). அவர்களுக்கான உணவைப் படைத்தார் (2). பிறகு உடம்பு- உயிர்த் தொகுதியில் தாமே புகுந்து மனிதனாகப் பிறந்தார் (12).
அவ்வாறு பிறந்த மனிதன் அறியாமையால் தன் உண்மை இயல்பை மறந்தான். மற்ற உயிரினங்களையும் உலகத்தையும் பற்றி சிந்திப்பதில் நாட்களைச் செலவிட்டான். இதனை இந்த மந்திரத்தின் முதற்பகுதி கூறுகிறது.
ஆனால் அறியாமை மறைகின்ற, அனுபூதி பெறுகின்ற காலம் வந்தது. அப்போது தன்னுள் உறையும் ஆன்மாவை மனிதன் கண்டான். அந்த ஆன்மாவை மனிதன் கண்டான். அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த கடவுளாக இருப்பதையும் கண்டான். மகிழ்ச்சியால், நான் உண்மையைக் கண்டுகொண்டேன் என்று கூறினான்.
மந்திரத்தின் கடைசி வார்த்தைக்கு அருகில் 3 என்ற எண் உள்ளது. தீ என்ற கடைசி எழுத்தை மூன்று மாத்திரை நீட்டி உச்சரிக்க வேண்டும் என்பது இதன் பொருள். அனுபூதி பெற்றதன் காரணமாக எழுந்த ஆனந்தத்தின் எழுச்சியைக் குறிப்பிடுகிறது இது.
எதையும்விட அருகில் இருப்பவர் கடவுள்:
தஸ்மாதிதந்த்ரோ நாமேதந்த்ரோ ஹ வை நாம தமிதந்த்ரம் ஸ்ந்தமிந்த்ர இத்யாசக்ஷதே பரோ÷க்ஷண பரோக்ஷப்ரியா இவ ஹிதேவா: பரோக்ஷிப்ரியா இவ ஹி தேவா: (14)
தஸ்மாத்- அதனால்; இதந்த்ர:- இதந்திரன்; நாம- பெயர்; ஹ வை- நிச்சயமாக; இதம் த்ரம்- இதோ என்று காணப்படுவராக; ஸந்தம்- இருக்கின்ற; தம்- அவரை; இந்த்ர:- இந்திரன்; இதி- என்று; பரோ÷க்ஷண- மறைமுகமாக; ஆசக்ஷதே- அழைக்கின்றனர்; ஹி- ஏனெனில்; தேவா:- தேவர்கள்; பரோக்ஷப்ரியா:- மறைவாக இருப்பதை விரும்புபவர்கள்.
14. கடவுள் இதந்திரன் என்று அழைக்கப்படுகிறார். நிச்சயமாக அவர் இதந்திரன்தான். ஏனெனில் இதோ என்று காணப்படுவராக இருக்கிறார் அவர். அவரை இந்திரன் என்று மறைமுகமாக அழைக்கின்றனர். ஏனெனில் தேவர்கள் மறைவாக இருப்பதை விரும்புபவர்கள்; தேவர்கள் மறைவாக இருப்பதை விரும்புபவர்கள்.
வேத காலத்தில் இந்திரன் தேவர்களுக்குத் தலைவனாக மட்டுமின்றி, தலைமைத் தெய்வமாகவும் கருதப்பட்டான். இந்திரன் தனது மாய சக்தியால் பல தெய்வங்களாக உருவெடுத்தான் என்பன போன்ற கருத்துக்களை வேதங்களில் காண்கிறோம்.
1. இந்த்ரோ மாயாபி: பஹுரூப ஈயதே- ரிக் வேதம், 6.47.18.
இந்திரன் அல்ல, இதந்திரன் என்பதே உண்மைப் பெயர் என்று இந்த உபநிஷதம் கூறுகிறது. இதம்+த்ர: என்று பிரிகின்ற இந்தச் சொல்லிற்கு, கடவுள் நம் அருகில், இதோ என்று கூறத்தக்க வண்ணம் அருகில், நம்முள்ளே இருக்கிறார் என்பது பொருள். நம்முள் இருக்கின்ற அவரை விட்டுவிட்டு உலகை நாட வேண்டியதில்லை என்பதையும் இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது.
நாம் வாழ்வதற்கான இந்த அழகிய உலகையும், அதைப் பாதுகாக்கவும் நடத்திச் செல்லவும் தேவர்களையும் படைத்த இறைவன் தம்மை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
கடவுள் என்ற சொல் கடந்து உள் நிற்பவர் என்று பொருள்படுகிறது. அனைத்திலும் மறைந்திருக்கிறார் அவர். அவரும் சரி, தேவ சக்திகளும் சரி மறைந்திருப்பதையே விரும்புகின்றனர். ஏனெனில் தன்னை மறைத்துக் கொண்டு செய்கின்ற செயல்தான் மிகவுயர்ந்த பலனைத் தருகிறது.
இறைவன் தம்மை நன்றாக மறைத்துக் கொண்டிருக்கிறார்; அதாவது செயல் மகோன்னதமானதாக இருக்கிறது என்று அற்புதமாக விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
இதி ஐதரேயோபநிஷதி ப்ரதமாத்யாயே த்ருதீய: கண்ட: