பதிவு செய்த நாள்
15
மே
2014
03:05
வேதங்கள்!
உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, பாரதத்திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்து கொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்லாமல், பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவி அழைத்தனர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் உலகைப் புனிதம் ஆக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.
வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக
1. வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வாஸதிம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேஸயனாய -சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8.
2. ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா: -சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5.
3. சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம், 5, 260; (சுவாமி விவேகானந்தர் பேசிய மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; 11 பகுதிகள், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து வெளியீடு; இனி ஞானதீபம் என்று குறிக்கப்படும்).
4. ஞானதீபம், 3,219.
உலகின் விதிகளும்... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).
உபநிஷதங்கள்:
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.
வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
உபநிஷதங்கள் பல. அவற்றில் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றுள் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.
14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.
உபநிஷதம் வேதம்
ஐதரேய, கௌசீதகி ரிக்
ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, யஜுர்
மைத்ராயணீ, மஹாநாராயண
கேன, சாந்தோக்கிய சாம
ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய அதர்வண
ஐதரேய உபநிஷதம்: ரிக் வேதத்தைச் சேர்ந்த ஐதரேய ஆரண்யகத்தின் 2-ஆம் பகுதியில் 4-6 அத்தியாயங்களாக அமைந்துள்ளது ஐதரேய உபநிஷதம். இதனை அருளியவர் மஹீதாச ஐதரேயர் என்ற முனிவர் ஆவார். இவர் பூதேவியை வழிபட்டு ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது.
இந்த உபநிஷத்தில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன; மொத்தம் 33 மந்திரங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் கடவுள் உலகையும் மனிதனையும் உணவையும் படைத்தது பற்றி கூறுகிறது. 2- ஆம் அத்தியாயம், கடவுள் மனிதனுள் புகுந்து உயிர் உருவாதல் என்ற அதிசயச் செயலை நிகழ்த்துவதுபற்றி விவரிக்கிறது. 3-ஆம் அத்தியாயம் மனிதனில் ஆன்மாவாக விளங்குகின்ற பேருணர்வுப்பொருளே இறைவனாகப் பிரபஞ்சத்தில் நிலவுகிறார் என்ற கருத்தைக் கூறுகிறது.
ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம (3:3) என்ற மகாவாக்கியம் இந்த உபநிஷத்தில்தான் வருகிறது.
மையக்கரு: உயிர் உருவாதல் என்கிற அதிசயமே இந்த உபநிஷத்தின் மையக்கருவாக உள்ளது. தாயிலிருந்து உடம்பையும், தந்தையிலிருந்து உயிரையும் பெறுகின்ற மனிதனுள் இறைவன் ஆன்மாவாகப் புகுந்து அவனை இயங்க வைக்கிறார் என்பதை இந்த உபநிஷதம் 2-3-ஆம் அத்தியாயங்களில் விவரிக்கிறது.
மொழிபெயர்ப்பு: ஸ்ரீசங்கரர், ஸ்ரீமத்வர் போன்றோர் இந்த உபநிஷதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர்.
இந்த மொழிபெயர்ப்பு, ஐதரேய உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.
1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கு மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.
கீழ்வரும் நூல்களும் கட்டுரைகளும் பொருள் விளக்கத்திற்கு மிகவும் துணை செய்தன:
1. சுவாமி சர்வானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு (சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து வெளியீடு).
2. சுவாமி கம்பீரானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு (கல்கத்தா அத்வைத ஆசிரம வெளியீடு.)
3. சுவாமி பஜனானந்தர் எமது ஆங்கிலப் பத்திரிகையான பிரபுத்தபாரட்டாவில் (1979- 1986) எழுதிய தி இண்டர்கள் விசியன் ஆப் தி வெடிக் சீர்ச் என்ற பகுதியும், அவர் எழுதிய தலையங்கக் கட்டுரைகளும்.
4. ஸ்ரீஅண்ணா எழுதிய தமிழ் விளக்கவுரை.
சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வார்த்தை:
உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவதுபோல் உள்ளது இது.
நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல.
பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனத் தூய்மைபெற்று இறைவனை
1. இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே
- ஈசாவாஸ்ய உபநிஷதம், 10, 13.
நோக்கி நாம் முன்னேறமுன்னேற உபநிஷதங்களின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும்.
மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.
பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சேர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.
சாந்தி மந்திரம்!
எந்த ஒன்றையும் செய்யும்போதும் அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றிவரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாகக் கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும் போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது.
அதுபோல், அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன. உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
ஐதரேய உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் இது:
ஓம் வாங்மே மனஸி ப்ரதிஷ்ட்டிதா மனோ மே
வாசி ப்ரதிஷ்ட்டிதம் ஆவிராவீர்ம ஏதி வேதஸ்ய ம ஆணீஸ்த: ச்ருதம்
மே மா ப்ரஹாஸீ: அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி ரிதம்
வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது
அவது மாமவது வக்தாரமவது வக்தாரம்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
மே- எனது; வாக்- பேச்சு; மனஸி- மனத்தில்; ப்ரதிஷ்ட்டிதா- நிலைபெறட்டும்; மே மன:- எனது மனம்; வாசி- பேச்சில்; ப்ரதிஷ்ட்டிதம்- நிலைபெறட்டும்: ஆவி:- சுடரொளிப் பரம்பொருளே; மே- என்னுள்; ஆவி: ஏதி- ஒளிர்வாயாக; மே- எனக்கு; வேதஸ்ய- வேதங்களின் உண்மையை; ஆணீஸ்த: - கொண்டு வருவீர்களாக; மே ச்ருதம்- என்னால் கேட்கப்பட்டவை; மா ப்ரஹாஸீ- என்னைவிட்டு விலகாதிருக்கட்டும்; அனேன அதீதேன- கற்ற இவற்றை; அஹ: ராத்ரான்- பகலும் இரவும்; ஸந்ததாமி- சிந்திப்பேனாக; ரிதம் வதிஷ்யாமி- நான் வியாவகாரிக உண்மையைச் சொல்வேனாக; ஸத்யம் வதிஷ்யாமி- நான் பாரமார்த்திக உண்மையைச் சொல்வேனாக; தத்- அந்த இறைவன்; மாம்- என்னை; அவது- காக்கட்டும்; அவது மாம்- என்னைக் காக்கட்டும்; அவது வக்தாரம்- குருவைக் காக்கட்டும்.
எனது பேச்சு மனத்தில் நிலைபெறட்டும்; மனம் பேச்சில் நிலைபெறட்டும். சுடரொளிப் பரம்பொருளே, என்னுள் ஒளிர்வாயாக. மனம், பேச்சு ஆகிய இருவரும் வேதங்களின் உண்மையை எனக்குக் கொண்டு வருவீர்களாக. என்னால் கேட்கப்பட்டவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். கற்றவற்றை பகலும் இரவும் நான் சிந்திப்பேனாக. நான் வியாவகாரிக உண்மையைச் சொல்வேனாக, பாரமார்த்திக உண்மையைச் சொல்வேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும்!
உயர் வாழ்க்கையை நாடுபவர்களுக்கு சிந்தனையும் பேச்சு ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம். சாதாரண வாழ்க்கையிம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் வள்ளலார். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கின்ற நிலையைப் பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
1:1 படைப்பு!
படைப்புபற்றி பொதுவாக எல்லா உபநிஷதங்களும் ஆராய்கின்றன. வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி என்ற ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) படைப்பிற்கு அடிப்படை என்ற அளவில் அனைத்து உபநிஷதங்களும் ஒத்திருக்கின்றன. ஆனால் படைப்பு என்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒவ்வோர் உபநிஷதமும் ஒவ்வொரு கோணத்தில் கூடுகிறது. ஐதரேய உபநிஷத்தின் கருத்தை இங்கே காண்கிறோம்.
ஓம் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீன்னான்யத் கிஞ்சன மிஷத் ஸ ஈக்ஷத லோகான்னு ஸ்ருஜா இதி (1)
அக்ரே- ஆரம்பத்தில்; இதம்- இந்த; ஆத்மா- கடவுள்; ஏக ஏவ வை- ஒருவர் மட்டுமே; ஆஸீத்- இருந்தார்; அன்யத்-வேறு; மிஷத்- இமைக்கின்ற; ந கிஞ்சன- எதுவும் இல்லை; ஸ: - அவர்; ஈக்ஷத- நினைத்தார்; லோகான்- உலகங்களை; ஸ்ருஜை- படைப்பேன்; இதி- என்று.
1. ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார்.
இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லை.
நான் உலகங்களைப் படைப்பேன் என்று அவர்
நினைத்தார்.
படைப்பின் ஆரம்பம்பற்றி இங்கே கூறப்படுகிறது. உயிரினங்கள் எதுவும் அப்போது இல்லை. உயிரினங்கள் தான் இமைப்பவை என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. வேறு எதுவும் இல்லாத அந்த ஆரம்பத்தில், உலகங்களைப் படைக்க வேண்டும் என்று கடவுள் நினைத்தார்.
ஸ இமான் லோகானஸ்ருஜத அம்போ மரீசீர்மரமாபோ- ஸதோஸம்ப: பரேண திவம் த்யௌ: ப்ரதிஷ்ட்டாஸந்தரிக்ஷம் மரீசய: ப்ருதிவீ மரோ யா அதஸ்தாத்தா ஆப: (2)
ஸ: அவர்; இமான்- இந்த; லோகான்- உலகங்களை; அஸ்ருஜத- படைத்தார்; அம்ப:- அம்பலோகம்; மரீசீ:- மரீசீலோகம்; மரம்- மரலோகம்; ஆப:- ஆபலோகம்; அத:- அந்த; அம்ப:- அம்பலோகம்; பரேண- மேலே; திவம்- சொர்க்கலோகம்; த்யௌ:- வானம்; ப்ரதிஷ்ட்டா- ஆதாரம்; அந்தரிக்ஷம்- இடைவெளி; மரீசய:- ஒளி உலகங்கள்; ப்ருதிவீ- பூமி; மர:- மரலோகம்; யா:- எவை; அதஸ்தாத்- கீழே; தா:- அவை; ஆப;- ஆபலோகம்.
2. அம்பலோகம், மரீசீலோகம், மரலோகம்,
ஆபலோகம் ஆகிய உலகங்களைக் கடவுள் படைத்தார்.
அம்பலோகம் சொர்க்கலோகத்திற்கு மேலே உள்ளது.
அம்பலோகத்திற்குச் சொர்க்கம் ஆதாரமாக உள்ளது.
மரீசீலோகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடை
வெளியாம். மரலோகம் என்பது பூமி. பூமிக்குக்
கீழே உள்ளது ஆபலோகம்.
புராணங்களில் 14 உலகங்கள் பற்றி கருத்து வருகிறது. அதற்கு மூலமாக உள்ளது இந்த உபநிஷதக் கருத்து. 5 உலகங்கள் இங்கே கூறப்படுகின்றன.
1. அம்பலோகம்: அம்பஸ் என்றால் தண்ணீர். அம்பலோகம் என்றால் தண்ணீர் உலகம். இது சொர்க்கத்திற்கு மேலே உள்ள உலகம். தொலைதூரத்திலிருந்து வானம் நீலக் கடலைப்போல் தெரிவதாலோ, அல்லது மழை வானிலிருந்து வருகிறது என்ற சாதாரண நம்பிக்கையின் காரணமாகவோ, மிகவுயர்ந்ததான அம்பலோகம் தண்ணீர் நிறைந்ததாகக் கூறப்படுகிறது.
2. சொர்க்கலோகம்: புராணங்கள் இதனை ஸுவர்லோகம் என்கின்றன. தேவர்கள் வாழும் உலகம் இது.
3. மரீசீலோகம்: மரீசீ என்றால் ஒளி. பூமிக்கு மேலுள்ள இடைவெளி சூரிய கிரணங்களால் ஒளிமயமாக இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம்.
4. மரலோகம்: மரம் என்றால் மரிப்பவர்கள், அதாவது இறப்பவர்கள், மனிதர்கள். மனிதர்கள் வாழ்கின்ற பூமி.
5. ஆபலோகம்: ஆப என்றால் தண்ணீர், பூமிக்குக் கீழே இருப்பதாகக் கருதப்படுகின்ற பாதாளலோகம். கடல்நீர் கீழ் உலகங்கள் வரை பரந்துள்ளது என்ற கருத்தில் தண்ணீர் உலகம் என்று கூறப்பட்டிருக்கலாம்.
ஸ ஈக்ஷதேமே நு லோகா லோகபாலான்னு ஸ்ருஜா இதி
ஸோஸத்ப்ய ஏவ புருஷம் ஸமுத்தருத்யாமூர்ச்சயத் (3)
ஸ:- கடவுள்; ஈக்ஷத- நினைத்தார்; இமே நு- இந்த; லோகா:- உலகங்கள்; லோகபாலா: நு- உலகின் காவலர்களை; ஸ்ருஜை- படைப்பேன்; இதி- என்று; ஸ:- அவர்; அத்ப்ய:- தண்ணீரிலிருந்து; புருஷம் ஏவ- பிரம்மதேவனை; ஸமுத்த்ருத்ய- திரட்டி; அமூர்ச்சயத்- உருவாக்கினார்.
3. உலகங்களைப் படைத்துவிட்டேன். இனி உலகின்
காவலர்களைப் படைப்பேன் என்று கடவுள்
நினைத்தார். பிறகு தண்ணீரிலிருந்தே திரட்டி பிரம்ம
தேவனை உருவாக்கினார்.
பிரம்மதேவன் என்பவர் அனைத்து உயிரினங்களின் மொத்தத் தொகுதி ஆவார். அவரிலிருந்தே படைப்பு ஆரம்பமாயிற்று.
தண்ணீர் என்பது ஐந்து அடிப்படை மூலங்களையும் குறிக்கிறது. நிலம், நீர், போன்ற அடிப்படை மூலங்களிலிருந்து பிரம்மதேவன் உருவாக்கப்பட்டார். பிரம்மதேவன் உயிரினங்களின் தொகுதி. எனவே மனிதனும் மற்ற உயிரினங்களின் ஐந்து அடிப்படை மூலங்களிலிருந்து உருவாகியவர்கள் என்று இந்த மந்திரம் கூறுகிறது.
தமப்யதபத் தஸ்யாபி தப்தஸ்ய முகம் நிரபித்யத யதாண்டம்
முகாத் வாக் வாசோஸக்னிர்நாஸிகே நிரபித்யேதாம் நாஸி-காப்யாம் ப்ராண: ப்ராணாத் வாயுரக்ஷிணீ நிரபித்யேதாமக்ஷிப்யாம் சக்ஷúச்சக்ஷúக்ஷ ஆதித்ய: கர்ணௌ நிரபித்யேதாம் கர்ணாப்யாம் ச்ரோத்ரம் ச்ரோத்ராத் திசஸ்த்வங் நிரபித்யத த்வசோ லோமானி லோமப்ய ஓஷதிவனஸ்பதயோ ஹ்ருதயம் நிரபித்யத ஹ்ருதயான்மனோ மனஸச்சந்த்ரமா நாபிர்நிரபித்யத நாப்யா அபானோஸபானான் ம்ருத்யு: சிச்னம் நிரபித்யத சிச்னாத் ரேதோ ரேதஸ ஆப: (4)
தம்- அவரைப்பற்றி; அப்யதபத்- சிந்தித்தார்; தஸ்ய- அவரது; அபி தப்தஸ்ய- சிந்தித்தபோது; முகம்- வாய்; நிரபித்யத- பிளந்தது; யதா- எப்படி; அண்டம்- முட்டை; முகாத்- வாயிலிருந்து; வாக்- பேச்சு- வாச:- பேச்சிலிருந்து; அக்னி:- நெருப்பு; நாஸிகே - மூக்கு; நிரபித்யேதாம்- பிளந்தது; நாஸிகாப்யாம்- மூக்குத் துவாரங்களிலிருந்து; ப்ராண:- மூச்சு; ப்ராணாத்- மூச்சிலிருந்து; வாயு:-காற்று; அக்ஷிணீ- கண்கள்; அக்ஷிப்யாம்- கண்களிலிருந்து; சக்ஷú:- பார்வை; சக்ஷúஷ:- பார்வையிலிருந்து; ஆதித்ய:- சூரியன்; கர்ணௌ- காதுகள்; கர்ணாப்யாம்- காதுகளிலிருந்து; ச்ரோத்ரம்- கேட்கும் தன்மை; ச்ரோத்ராத்- கேட்கும் தன்மையிலபிருந்து; திச:- திசைகள்; த்வக்- தோல்; த்வச:- தோலிலிருந்து; லோமானி- முடிகள்; லோமப்ய:- முடிகளிலிருந்து; ஓஷதி வனஸ்பதய:- மூலிகைகள் செடிகள்; ஹ்ருதயம்- இதயம்; ஹ்ருதயாத்- இதயத்திலிருந்து; மன:- மனம்; மனஸ:- மனத்திலிருந்து; சந்த்ரமா:- சந்திரன்; நாபி:- தொப்புள்; நாப்யா:- தொப்புளிலிருந்து; அபான:- அபானன்; அபானாத்- அபானனிலிருந்து; ம்ருத்யு:- மரணம்; சிச்னம்- குறி; சிச்னாத்- குறியிலிருந்து; ரேத:- விந்து; ரேதஸ:- விந்திலிருந்து; ஆப:- தண்ணீர்.
4. கடவுள் பிரம்மதேவனைப்பற்றி சிந்தித்தார்.
அப்போது பிரம்மதேவனின் வாய், முட்டை பிளப்பது
போல், பிளந்தது. வாயிலிருந்து பேச்சு வெளிவந்தது.
பேச்சிலிருந்து நெருப்பு வந்தது.
மூக்கு தோன்றியது. மூக்கு பிளந்தது. மூக்குத்
துவாரங்களிலிருந்து மூச்சு வந்தது. மூச்சிலிருந்து காற்று தோன்றியது.
கண்கள் தோன்றின. கண்கள் பிளந்தன.
அவற்றிலிருந்து பார்வை வந்தது. பார்வையிலிருந்து
சூரியன் தோன்றினான்.
காதுகள் தோன்றின. அவை பிளந்தபோது கேட்கும் தன்மை உண்டாயிற்று. அதிலிருந்து திசைகள் தோன்றின.
தோல் உண்டாகியது. தோல் பிளந்து முடிகளும், முடிகளிலிருந்து மூலிகைகளும் செடிகளும் தோன்றின.
இதயம் தோன்றியது. இதயம் பிளந்தபோது மனமும், மனத்திலிருந்து சந்திரனும் தோன்றின.
தொப்புள் தோன்றியது. பிளந்த தொப்புளிலிருந்து அபானனும், அபானனிலிருந்து மரணமும் தோன்றியது.
குறி தோன்றியது. பிளந்த குறியிலிருந்து விந்துவும், விந்திலிருந்து தண்ணீரும் உண்டாயிற்று.
பிரம்மதேவனிலிருந்து உலகமும் உயிரினங்களும் தோன்றியதை இந்த மந்திரம் கூறுகிறது. நெருப்பு, சூரியன், சந்திரன், செடிகொடிகள் ஆகிய உலகின் பல்வேறு அம்சங்கள் உலகம் படைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. அதுபோலவே, உடல் மற்றும் மனத்தின் பல்வேறு அம்சங்கள் உயிரினங்கள் படைக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது.
இதி ஐதரேயோபநிஷதி ப்ரதமோஸத்யாயே ப்ரதம: கண்ட: