புற அதிசயங்கள் அனைத்தையும் மிஞ்சும் அதிசயம் ஆகிய உயிர் உருவாதல் பற்றி இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.
உடல், உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன். தான் செய்த நல்வினை மற்றும் தீவினைப் பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கை. உயிர், பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு.
உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது. உயிர் தந்தையின் வழியாகத் தாயின் கருப்பைக்குள் புகுகிறது. இந்த உடல்+உயிர்ச்சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாகப் புகுந்து அதனை இயங்கச் செய்கிறார். உயிரின் இந்தப் பயணத்தைப் பற்றிய சில கருத்துக்களை இங்கே காண்கிறோம்.
1. (கர்ப்பிணிகள் வெளியேறவும்.) மனிதன் ஆரம்பத்தில் ஆணிடம் விந்துவாக இருக்கிறான். விந்து என்பது எல்லா உறுப்புக்களின் ஆற்றல் திரண்டு உருவாகியது. ஓர் ஆண் இவ்வாறு தன்னில் தன்னைத் (விந்து வடிவில்) தாங்குகிறான். விந்துவை எப்போது பெண்ணில் விடுகிறானோ அப்போது தன்னைக் (குழந்தையாகப் பிறப்பித்துக்கொள்கிறான். இது அவனது முதற்பிறப்பு.
இந்த மந்திரமும், இந்த அத்தியாயத்தில் தொடரும் மந்திரங்களும் உடலுறவு, கருத்தரித்தல் போன்ற கருத்துக்களைக் கூறுகின்றன. இதிலிருந்து சில உண்மைகளை நாம் அறிந்துகொள்கிறோம்.
1. கர்ப்பிணிகள் வெளியேறவும் என்று ஆரம்பத்தில் வருகிறது. எனவே அரச சபை, பண்டிதர் சபை போன்ற பொது இடங்களில் இந்தக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன என்பது தெரிகிறது.
2. இத்தகைய எல்லா விவாதங்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் பெண்கள் கலந்துகொண்டார்கள் என்பது தெரிகிறது.
3. பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த, ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றை இங்கே காண்கிறோம். உடலுறவு, கருத்தரித்தல் போன்றவை சபைகளில் விவாதிக்கப்பட்டன. குருகுலத்தில் தகுந்த ஒருவரால் சிறுவயதிலேயே இவை கற்பிக்கப்படுவது பற்றி தைத்தீரிய உபநிஷதம் கூறுகிறது. உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை கீதை தெய்வீகமாகப் போற்றுவதும் இங்கு நினைவுகூரத் தக்கது.
இனவிருத்தி என்பது கடவுளின் மிகப் புனிதமான சின்னம்; கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை; நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்குக் கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை. இது என்ன வேடிக்கையா? அல்லது வெறுமனே நரம்புகளுக்குத் திருப்தி அளிக்கின்ற செயலா? மிருகத்தனமான உடலின்ப அனுபவமா? இல்லை, இல்லை யென்று ஆயிரம் தடவை சொல்கிறான் இந்து என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான இவைபற்றி உரிய வேளையில், உரிய முறைப்படி சிந்திப்பதும் கற்பிப்பதும் செயல்படுவதும் நல்ல சமுதாயம் உருவாக வழிகோலுகின்றன.
2. உடலுக்குச் சொந்தமான ஓர் உறுப்புபோல், விந்து பெண்ணுடன் ஒன்றுபட்டுவிடுகிறது. அதனால் அது அவளைத் துன்புறுத்துவதில்லை. விந்துவாகத் தன்னில் புகுந்த உயிரை அவள் கருப்பையில் பாதுகாக்கிறாள்.
3. கருவைப் பாதுகாக்கின்ற பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். (குழந்தை பிறக்குமுன்பு அதனைக் கருவாக பெண் பாதுகாக்கிறாள். பிறந்தபிறகு, ஆரம்பத்திலும் அதன்பிறகும் தந்தை பாதுகாக்கிறான். அந்தக் குழந்தையைத் தானாகவே எண்ணிப் பாதுகாக்கிறான் அவன். உயிர்களின் சந்ததிச் சங்கிலி தொடர்வதற்காகவே அவன் இவ்வாறு செய்கிறான். (இவ்வுலகம், மறுவுலகம் ஆகிய) உலகங்களின் தொடர்பு இவ்வாறு வளர்கிறது. (தாயின் வயிற்றிலிருந்து குழந்தையாகப்) பிறப்பது மனிதனின் இரண்டாம் பிறப்பு.
4. ஒரு மனிதனின் மூன்று பிறப்புகளை 1-4 மந்திரங்கள் கூறுகின்றன. தந்தையிடமிருந்து தாயிடம் புகுந்து முதற்பிறப்பு. தாயிடமிருந்து உலகில் பிறந்தது இரண்டாம் பிறப்பு. இந்த உடம்பிலிருந்து வெளியேறி மீண்டும் பிறப்பது மூன்றாம் பிறப்பு.
மரணத்திற்குப் பிறகு நல்வினை மற்றும் தீவினைப் பயன்களை அனுபவிப்பதற்காக மறு உலகத்திற்குச் செல்வதையே மூன்றாம் பிறப்பாகக் கொள்ளலாம். அல்லது, மீண்டும் பூமியில் பிறப்பதை மூன்றாம் பிறப்பாகக் கருதலாம்.
தந்தையே மகனாகப் பிறக்கிறான். மகனைத் தனது பிரதிநிதியாக உலகில் விட்டுவிட்டு, தந்தை தனது பயணத்தைத் தொடர்கிறான்.
5. அதுபற்றி முனிவரால் சொல்லப்பட்டுள்ளது: கர்ப்பத்தில் இருக்கும்போதே நான் தேவர்களின் பிறப்புகள் அனைத்தையும் அறிந்துகொண்டேன். நூறு இரும்புக் கோட்டைகள் என்னைக் காவல் காத்தன. ஒரு பருந்துபோல் விரைவாக நான் வெளியே வந்தேன். கர்ப்பத்தில் படுத்திருக்கும்போதே வாமதேவர் இவ்வாறு கூறினார்.
தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அனுபூதி பெற்றவர் வாமதேவர். அக்கினி தேவன் முதலான தேவர்களுக்கு மறுபிறவிகள் உண்டு என்பதை அவர் அப்போது அறிந்துகொண்டார். அதனுடன், தமது முற்பிறவி உண்மைகளையும் அறிந்தார். எத்தனையோ பிறவிகள் எடுத்து, அந்தப் பிறவிகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உடம்புகளைத் தாங்கி வாழ்ந்தார். அந்த உடம்புகளையே இங்கு இரும்புக் கோட்டைகள் என்று அவர் கூறுகிறார். உடம்பு ஒவ்வொன்றும் ஓர் இரும்புக் கோட்டையாக உயிரைச் சிறைப்பிடித்து வைப்பதுபோல் வைத்துள்ளன. வலையைக் கிழித்து வெளியேறுகின்ற பருந்துபோல் தாம் இந்தக் கோட்டைகளைக் கடந்து, இந்தப் பிறவியைப் பெற்று, அனுபூதி அடைந்ததாக அவர் கூறுகிறார்.
நாம் ஒவ்வொருவரும் தாயின் கருவில் இருக்கும்போது, இந்த அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் பூமியில் பிறந்ததும் அதனை மறந்துவிடுகிறாம். ஒன்பதாம் மாதத்தில் எல்லா அங்கங்களும் பூர்த்தியாகிறது. முற்பிறவி நினைவு வருகிறது. புண்ணிய பாவங்களின் உணர்வு வருகிறது. ஆனால் பிறந்ததும் கடவுளின் மாய சக்தியால் அவற்றை மறந்து விடுகிறோம் என்கிறது கர்ப்ப உபநிஷதம்.
6. வாமதேவர் இந்த உண்மைகளை அறிந்து, உடம்பு அழிந்ததும் வெளியேறி சொர்க்கலோகத்திற்குச் சென்றார். அங்கே எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெற்று, மரணமிலா நிலையை அடைந்தார்; மரணமிலா நிலையை அடைந்தார்.