கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், வாழும் கலையின் குருஜீ ரவிசங்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த, தெய்வீக இன்னிசை சத்சங்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த சத்சங்கம் கிணத்துக்கடவு, எல்.ஜே.ஜே. திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், வாழும் கலையில் பயிற்சி எடுத்துக் கொண்ட குழந்தைகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து, வாழும் கலை பயிற்சி ஆசிரியர் கவிதா மற்றும் குருஜியின் குழுவினர் மூலம் தெய்வீக பாடல்கள் பாடப்பட்டன. பாடல்களுக்கு இடையே தனித்து தியானித்தல், தவம், சிலர் கூடி தியானித்தல், தன்னை உணர்தல், யாகம், யாகத்திற்கு பின் செய்யும் பிரார்த்தனை போன்றவை பற்றி கூறப்பட்டு, தியானம் செய்யப்பட்டது. பங்கேற்ற பொதுமக்களுக்கு வாழும் கலை குடும்பத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வாழும் கலை குடும்பத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் செய்தனர்.