பதிவு செய்த நாள்
27
மே
2014
01:05
காஞ்சிபுரம் : தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் கோவில் விழா நடத்துவதில், அரசியல் தலையீடு இருப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் கிராமவாசிகள் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட இராமனுஜபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசியல் தலையீடு இருப்பதால், வேலை கிடைப்பதில் பாகுபாடு இருக்கிறது. மேலும், மக்களை இழிவாக பேசி, அசிங்கப்படுத்தப்படுகின்றனர். தொழிலாளிகள் மிரட்டப்படுகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற நிலை நீடித்தால், அவர்களுக்கும் எங்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு சட்டம் -ஒழுங்கு சீர்கெடும் சூழல் உள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு மாவட்ட ஆட்சியர் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், காவாந்தண்டலம் ஊராட்சி மக்கள் அளித்த மனுவில், ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவதற்கு ஊராட்சி தலைவர் மிரட்டுகிறார். போலீசில் பொய்ப்புகார் அளிக்கிறார். கிராம மக்களிடம் வீண் விரோதத்தை வளர்த்து வருகிறார். எனவே, ஊராட்சி தலைவரை அழைத்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.