பதிவு செய்த நாள்
28
மே
2014
10:05
விழுப்புரம்: கூட்டேரிபட்டு ரங்கநாயகி சமேத பள்ளி கொண்ட பெருமாள் கோவில் சுவாமி சிலை, கரிக்கோல ஊர்வலமாக, நேற்று விழுப்புரம் வந்தடைந்தது. கூட்டேரிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாயகி சமேத பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் வரும் 2ம் தேதி கெடிபந்தனம் விழா நடக்கிறது. இதையொட்டி வரும் 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு புண்யாகவாசனம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு பூர்வாங்ககிரியைகள், ஹோமம், மகா பூர்ணாஹூதி, மூலவர் பள்ளிகொண்ட பெருமாள் சிலை, கோவில் சன்னதியில் கர்ப்ப கிரகத்தில் ஸ்தாபனம் நடக்கிறது. பின்னர் 6:30 மணிக்கு பெருமாளுக்கு கொடிபந்தனம் சாற்றுதல், 7:00 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி கடந்த 17ம் தேதி கோவிலிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு சீனுவாச பட்டாச்சாரியார் தலைமையில் புறப்பட்ட பெருமாள் கரிகோல ஊர்வலம் திண்டிவனம், மரக்காணம், புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி வழியாக நேற்று மாலை விழுப்புரம் வந்தடைந்தது. பின்னர், செஞ்சி வழியாக புறப்பட்ட கரிக்கோல ஊர்வலம், கோவிலை நாளை சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ரங்கநாயகி சமேத ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாள் கைங்கர்ய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.