பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
10:06
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில், ரூ.7 லட்சத்தில், புதிய கொடிமரம், நேற்று, பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட வடபத்ரசாயி கோயில் ராஜகோபுரம், தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. இக்கோயில் கொடிமரம் அமைக்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலானதால், கொடிமரம் மேல் பக்கம் வளைந்த நிலையில் இருந்தது. இங்கு கும்பாபிஷேக பணிகள் கடந்தாண்டு முதல் நடந்து வருகிறது. கோயிலின் கொடிரத்தை மாற்றுவதற்கு நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதனடிப்படையில், கோவையை சேர்ந்த தொழிலதிபர் கல்பஜா பிரேம்சந்தர் நிதிஉதவியுடன், புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றாலத்திலிருந்து வனத்துறையினரின் அனுமதியுடன், 7 லட்ச ரூபாய் செலவில், 48 அடி உயரமுள்ள தேக்கு மரம் கொண்டு வரப்பட்டு, கொடிமரம் செய்யும் வேலை, கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. அப்பணி முடிந்து நேற்று காலை, வடபத்ரசாயி கோயில் முன், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான்பட்டர் சுதர்சனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.