பதிவு செய்த நாள்
07
ஜூன்
2014
10:06
சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில், வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமி தினமும், ஊஞ்சலில் புறப்பாடு செய்து, சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருவிழாவையொட்டி கழுகேற்றம் நடந்தது. ஏழாம் திருவிழா நாளில் பிரியாவிடையுடன் தபசு காட்சி அளித்து இரவில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர். நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி அம்மன், பிரியாவிடையுடன் காட்சியளித்தார். நகராட்சி தலைவர் கதிரவன், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், வடம்பிடித்து இழுந்து துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் ‘ ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா’ என்ற திரு மந்திரத்தை கோஷமிட்டவாறு பக்தி பரவசமுடன் தேரை வடம் பிடித்து இழுந்தனர். தேர் கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக நிலைக்கு வந்தது. தேர் வந்த ரதவீதிகளில், கார்கள், டூவீலர்கள் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் தேர் இழுத்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.