பதிவு செய்த நாள்
07
ஜூன்
2014
12:06
குறிச்சி : வெள்ளலுார் பூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ௯ம் தேதி நடக்கிறது. வெள்ளலுார் நொய்யல் நதிக்கரை அருகே ஆயிரமாண்டுகள் பழமையான பூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களால், திருப்பணி மேற்கொள்ளப்பட்ட கோவில் இது. தற்போது பல நுாற்றாண்டுகளுக்கு பின், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவிலில் புதியதாக மகாலட்சுமி, ஆண்டாள், வீர ஆஞ்சனேயர், யோக நரசிம்மர் சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும், ௩௬ அடி உயரத்தில், தேக்கு மரத்தாலான கருட கம்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பலி பீடம், மகா மண்டபம், வசந்த மண்டபம் அமைக்கப்பட்டு, விமானம் மற்றும் மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் ௯ம் தேதி காலை ௧௦.௩௦ மணிக்கு நடக்கிறது. விழா நேற்று முன்தினம் காலை ௭.௩௦ மணிக்கு, மகா சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது. மாலை, நுாதன பிம்பங்களுக்கு பிம்பசுத்தி திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை நுாதன த்வஜஸ்தம்ப பிரதிஷ்டையும், சுமங்கலி பூஜையும் நடந்தது. மாலையில், பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூஜித்த தீர்த்தக்குடங்கள் அனைத்தும், தேனீஸ்வரர் கோவிலிலிருந்து, யானை, குதிரை, பசு மற்றும் மங்கள வாத்தியங்களுடன் கோவிலுக்கு அழைத்து வரும் முக்கிய நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 6.௦௦ மணிக்கு, நித்ய திருவாராதனமும், 8.௦௦ மணிக்கு மகா தீபாராதனையும், மாலை 4.௦௦ மணிக்கு அக்னி ஸங்க்ரஹணமும் நடக்கிறது. நாளை (௮ம் தேதி) விமான கோபுர கலச ஸ்தாபனமும், அஷ்டபந்தன சாற்றுதலும், 108 கலச ஸ்நபனமும் நடக்கிறது. 9ம் தேதி காலை 10.30 மணிக்கு, அவிநாசி முரளிபட்டாசார்யார் தலைமையில், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 4.௦௦ மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் கருட வாகன புறப்பாடும் நடக்கிறது.விழா முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவும் நடக்கின்றன. ஏற்பாடுகளை, கோவில் திருவிழா கமிட்டியினர் செய்துள்ளனர்.