பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
12:06
திருப்பூர் : விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இன்று ஈஸ்வரன் கோவில் மற்றும் நாளை பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. ஆறாம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. நேற்று, மாலை 7.00 மணிக்கு, வீரராகவப் பெருமாள் கோவிலில், பூமி நீளா தேவி தாயார், கனகவல்லி தாயார் மற்றும் வீரராகவப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தாயார் மற்றும் எம்பெருமாளுக்கு புது வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் கிழங்கு அரைத்து, வாரணம் ஆயிரம் பாசுரம் முழங்க, திருக்கல்யாண பூஜை மற்றும் திருமாங்கல்ய தாரணம் நடந்தது. திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த எம் பெருமாள், வீதி உலா நடந்தது. இரவு 8.00 மணிக்கு, விசாலாட்சியம்மன், விஸ்வேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மங்கல வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை 6.00 மணிக்கு, சுவாமிகள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2.00 மணிக்கு, விஸ்வேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம் நடக்கிறது.