மதுராந்தகம் : தொன்னாடு கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மதுராந்தகம் அடுத்துள்ள, தொன்னாடு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 11ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி காலை 8:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம் நடந்தன. பிற்பகல் 1:30 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்தனர். அதனை தொடர்ந்து 3:00 மணிக்கு அம்மன் கரகம் உற்சவம் செல்லுதலும், இரவு 8:00 மணிக்கு இசைநிகழ்ச்சி, ஒயிலாட்டம், மேள கச்சேரி, வாணவேடிக்கைகளுடன், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா சென்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.