மதுரை : சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழாவை, யாருக்கும் முதல்மரியாதை வழங்காமல், போலீஸ் பாதுகாப்புடன் நடத்த, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கண்டதேவியை சேர்ந்த சொர்ணலிங்கம், சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில், 7 ஆண்டுகளாக தேரோட்டத்துடன் திருவிழா நடத்தவில்லை. தேர் பராமரிப்பு பணி நடப்பதாகக்கூறி, நிர்வாகம் தாமதிக்கிறது. விழா நடத்த உத்தரவிட வேண்டும், என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் உத்தரவு: பாரம்பரிய முறையில், விழா நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரை பழுதுபார்க்க வேண்டும். தேரோட்டம் இன்றி விழா நடத்த வேண்டும். நாட்டார்கள் உட்பட யாரும் முதல் மரியாதை கோரக்கூடாது. ஜாதி, இன வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்கலாம். போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து, அரசுத் தரப்பில் ஜூன் 30ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.