தம்மம்பட்டி: தம்மம்பட்டி, உலிபுரத்தில் நடந்த மாரியம்மன் ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தம்மம்பட்டி அருகே, உலிபுரத்தில் பிரசித்த பெற்ற கம்ப பெருமாள், பிடாரி அம்மன், பெரியசாமி மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 14ம் தேதி, கம்பபெருமாள் ஸ்வாமி சக்தி அழைத்தல் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து குண்டம் இறங்கும் விழா நடந்தது. நேற்று முன்தினம், காலை மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தி ஊர்வலம் சென்றனர். பின்னர், மாரியம்மன் ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கி, முக்கிய வீதி வழியாக மாரியம்மன் ஸ்வாமி வீதி உலா வந்து தேர் நிலை நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.