பதிவு செய்த நாள்
26
ஜூன்
2014
11:06
கோவை : கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் வைப்பதற்காக தங்கக்கலசங்கள் தயாரிப்பு பணி நிறைவடைந்து, விரைவில் கோவிலுக்கு வழங்கப்பட உள்ளது.கோவையின் காவல் தெய்வமான, கோனியம்மனுக்கு, ஜூலை 11ல், குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது. இதற்காக, கோவிலை சுற்றி, கட்டட, கட்டுமானம், வர்ணம்பூசுதல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. 93 அடி உயரத்தில், ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது, ராஜகோபுர திருப்பணிக்காக, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கும் ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் வைப்பதற்கான கோபுரக்கலசங்கள் தயாரித்து வழங்கும் பணியை, கோவை தங்கநகை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் உள்ளனர். கோபுரக்கலசங்களை தயாரித்து வழங்கும் பொறுப்பை, கோவையிலுள்ள தங்கநகை உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.கோபுரக்கலசங்கள் தயாரித்து வழங்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்தது; தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை, விரைவில் உபயதாரர்கள் கோவில் நிர்வாகத்திடம் சமர்பிப்பார்கள்.ஜொலிக்கும் தங்கக்கலசம் : கோனியம்மன் கோவிலுக்கு தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒன்பது கோபுரக்கலசங்கள் வழங்கப்பட உள்ளன. இவை செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றேமுக்கால் அடி அகலமும், மூன்றே முக்கால் அடி உயரமும் கொண்டுள்ளது. செம்பு கலசத்தின் மேற்பகுதியில் ஆறு அடுக்குகளில் தங்கதகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஒன்பது கலசத்துக்கும் சேர்த்து, 2,682 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு செம்பு கலசத்தின் எடை 20.5 கிலோ. இவற்றை கோவையிலுள்ள தங்கநகை தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து கோவிலுக்கு உபயமாக வழங்க உள்ளனர்.