பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
11:07
கோவை : கோவை, கோனியம்மன் கோவில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு, நேற்று மங்கல இசையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. கோனியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணி நிறைவடைந்த நிலையில், திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 11 அன்று நடக்கிறது. நாதஸ்வர வித்வான் தருமபுரி ஜெயபாலனின் மங்கல இசையுடன் நேற்று மாலை விழா துவங்கியது. ராஜப்பா குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நேற்று மாலை துவங்கின. கண்ணப்பன் ஓதுவார் குழுவினர், அகண்ட திருமுறை பாராயணம் செய்தனர். இரவு 7.00 மணிக்கு, புதிய ராஜகோபுர அமைப்புத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 9.00 மணிக்கு திருநீறு, திருவமுது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று சிறப்பு யாகவேள்வி, காலை 7.00 மணிக்கு, ஆனைமுகத்தோன் சிறப்பு வேள்வியும், நவகோள்கள், மலைமகள், அலைமகள், கலைமகளுக்கு சிறப்பு வேள்வியும் நடக்கின்றன. காலை 9.00 மணிக்கு ராஜகோபுரத்தில் வைக்கப்பட உள்ள தங்கக்கலசங்களை புனிதமாக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.காலை 10.00 மணிக்கு ராஜகோபுர கலசங்களை, கோவை நகர வீதிகளின் வழியாக திறந்தவெளி வாகனத்தில் பக்தர்கள் பார்வைக்காக கொண்டு செல்கின்றனர். பகல் 1.00 மணிக்கு ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் கோபுரக்கலசங்களை பொருத்தி, சிறப்பு பூஜை செய்து கலசங்களின் கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு 7.00 மணிக்கு முதற்கால வேள்வி துவங்குகிறது.