நெல்லையப்பர் தேரில் பைபர் குதிரைகள்: ஆகம விதிமுறை மீறல் என புகார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2014 10:07
திருநெல்வேலி :நெல்லையப்பர் கோயில் தேருக்கு பைபர் குதிரைகள் பொருத்தப்பட்டது ஆகம விதிக்கு முரணானது என கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா நடக்கிறது. வரும் 10ம் தேதி தேரோட்டம். நெல்லையப்பர் தேர், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும். 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28 அகலமும் கொண்டது . 1505ம் ஆண்டில் முதன்முறையாக இங்கு தேரோட்டம் நடந்துள்ளது. எனவே இந்த ஆண்டு நடப்பது 509வது ஆண்டு தேரோட்டமாகும். சுவாமி தேருக்கு முன்பாக வண்ணமயமான நான்கு குதிரைகள் இணைக்கப்பட்டிருக்கும். மரத்திலான குதிரைகள், பழுதடைந்துவிட்டதால் இந்த ஆண்டு புதிதாக நான்கு குதிரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பைபர் எனப்படும் நெகிழியால் ஆனவை. எனவே நெல்லை விஸ்வகர்ம விடுதலை இயக்கத்தினர் கலெக்டரை சந்தித்து மனுகொடுத்தனர். அதில் நெல்லையப்பர் கோயிலின் அனைத்து அம்சங்களும் ஆகமவிதிமுறைப்படிதான் நடக்கிறது. தேர்சிற்பங்கள் அனைத்தும் மரத்தில் ஆனவை. ஆனால் குதிரைகள் பைபரில் தயாரிக்கப்பட்டிருப்பது ஆகமவிதிமுறையை மீறிச்செயலாகும். எனவே மரச்சிற்ப சிலையையே பயன்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கோயில் செயல்அலுவலர் யக்ஞ நாராயணனிடம் கேட்டபோது, மரக்குதிரை சிற்பங்கள் பழுதானதால், திருப்பூரை சேர்ந்த உபயதாரரிடம் குதிரைகள் செய்துதருமாறு கேட்டுக்கொண்டோம். இதற்கான மூன்றரை லட்சம் ரூபாய் செலவும் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இதில் ஆகமவிதிமுறை மீறல் இருப்பதாக தெரியவில்லை என்றார்.