நிலக்கோட்டை : சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, சித்தர்கள்நத்தம், மல்லியம்பட்டி, விளாம்பட்டி கவுண்டர் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட ஈடாடி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன் தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின. அன்று காலை 7 மணிக்கு அணைப்பட்டி வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலையில் வாஸ்துசாந்தி, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம் நடந்தது. நேற்று காலை 9 மணியளவில் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை, கும்பாபிஷேக பூஜைகளை நிலக்கோட்டை ராஜாபட்டர் செய்தார். கும்பாபிஷேகத்தில் கவுண்டர் சமுதாய தலைவர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் திரளாக பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது.