பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
04:07
இல்லாத பிரச்னைகளை இருப்பதாக நினைத்துக் குழப்பம் அடையத் தூண்டுவதே எதிர்மறைச் சிந்தனைகள்தான். பள்ளிக்குச் சென்ற பிள்ளை உரிய நேரத்தில் வீடு வரவில்லையென்றால், தாய் படும் கவலை சொல்லிமாளாது. வரும் வழியில் சாலையைக் கடக்கும்போது விபத்து ஏதும் ஏற்பட்டிருக்குமோ? அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறாளோ?... இப்படியான எதிர்மறைச் சிந்தனைகள் அவளுள் ஓடிக்கொண்டே இருக்கும்.
மனம் பதைபதைக்கும். உடல் வியர்க்கும். ரத்த அழுத்தம் எகிறும். பலருக்கும். போன் செய்து விசாரிப்பாள். கணவனுக்கும் போன் செய்து அழுது, அவனையும் பதற வைப்பாள். அரை மணி நேரத்துக்குப் பின், அவள் பிள்ளை சிரித்துக்கொண்டே வருவான். வரும் வழியில் மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக்கிட்டிருந்தாங்க. கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்த்துட்டு வந்தேன் என்பான். இப்படித் தேவையற்ற விபரீத கற்பனைகளால் பயம் ஏற்படும்போது, ஆழ் மனத்தின் அற்புத சக்தி அதிக ஆழத்தில் புதைந்துவிடுகிறது. ஓர் இடத்துக்குப் போகிறோம். எதற்காக அந்தப் பிரயாணம், யாரைப் பார்க்கச் சொல்கிறோம். என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும், எப்போது புறப்பட வேண்டும், நாம் பிரயாணம் செய்யும் கார் நல்ல கண்டிஷனில் உள்ளதா என்றெல்லாம் சிந்திப்பது ஆக்கபூர்வமான சிந்தனை.
ஆனால், போகிற காரியம் நடக்காமல் போனால் என்ன செய்வது, போன இடத்தில் பேச்சுவார்த்தையில் சண்டை வந்துவிட்டால் என்ன செய்வது, போகிற வழியில் விபத்து ஏற்பட்டு ஒன்றுகிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன ஆவது என்று நினைப்பதெல்லாம் எதிர்மறைச் சிந்தனைகள். இப்படி நினைப்பதால் ஏற்படுகிற பயத்தில், நம்முள் அடங்கியுள்ள மகத்தான மானிட சக்தி நீறு சக்தி நீறு பூத்த நெருப்பாகிவிடுகிறது. அதனை ஊதி ஊதி சாம்பலை அகற்றினால்தான், நெருப்பின் சக்தி வெளிப்படும். அதைவிட, எதிர்மறைச் சிந்தனைகளே நம்முள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வதே சாலச் சிறந்தது.