பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
01:07
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி, உடனமர்
ஸ்ரீஆதிகேசவபெருமானுக்கு, முதன் முறையாக, 300 கிலோ மலர்களால் ஆன, புஷ்ப யாகம் நடந்தது.ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, பழமையான, பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, உடனமர் ஸ்ரீஆதிகேசவபெருமான் அமைந்துள்ளார். நேற்று காலை, பெருமாள் கோவில் மண்டபத்தில், மல்லிகை, முல்லை, கனகாம்பரம், இருவாச்சி, தாமரை, பிச்சிப்பூ, அரளி, ரோஜா உட்பட, பல வகையில், 300 கிலோ மலர்கள் மூலம் புஷ்ப யாகம் நடந்தது.தரையில் மலர்களால் ஆன, வண்ண கோலம் போடப்பட்டு, புஸ்ப யாகம் துவங்கியது. இதில், 16 வகையான நெய் வேத்தியங்கள், 16 வகையான கனி வகைகள் கொண்டு, பல வகையான விஷேச பூஜை நடத்தி, மலர் அபிஷேகம் நடந்தது. புஷ்ப யாகத்தை, வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில், அனந்தநாராயணன், அனந்தராமன் ஆகியோர் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் செய்தனர். இதுபற்றி, கோவில் பட்டாச்சாரியார் கூறியதாவது: திருப்பதி, காஞ்சிபுரம், மதுரை அருகில் உள்ள திருமோரூர் போன்ற கோவிலில், இந்த வைபவம் நடைபெறும். தற்போது, பவானி கூடுதுறையில், கடந்த சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், உலக மக்கள் நலன் வேண்டியும், நல்ல மழை வளம் வேண்டியும், புஷ்ப யாகம் நடந்தது. ஆதிகேசவ பெருமாள் கோவிலில், முதன் முறையாக, யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த யாகமானது, ஸ்வாமிக்கு ஒரு ஆண்டுக்கு செய்யும் பூஜையின் பலன், ஒரே நாளில் கிடைக்கும். யாகம் முடிந்த பின், சிறப்பு அலங்காரத்தில் உள்ள உற்சவ மூர்த்தி, அலங்காரத்தில் காட்சியளிப்பார், என்றார். ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி, அக்னி ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.