திருப்புவனம் : திருப்புவனத்தில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ராதை -கிருஷ்ணர் திருக்கல்யாணம் நடந்தது.ஸ்ரீசத்குரு நாம ஸங்கீர்த்தன பஜன் மண்டலி சார்பில், ஆடியில் கிருஷ்ணர்-ராதை திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு, 3ம் ஆண்டு துவக்க விழா வெள்ளியன்று திருமஞ்சனத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணர் திருவீதி உலா வந்தார். நேற்று காலை உஞ்சவிருத்தியுடன் விழா துவங்கியது. காலை அலங்கார கோலத்தில் கிருஷ்ணர்-ராதை மற்றும் பாமா-ருக்மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கல்யாண சீர்வரிசைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கிருஷ்ணர்-ராதை சம்பவங்களை எடுத்து கூறும் வண்ணம் சிறுவர், சிறுமியர்கள் ராதை- கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்தனர். கோலாட்டம், வெண்ணை திருடுதல், கும்மி பாடினர். ஞானாநந்தர் சுவாமி, தியாகராஜ சுவாமி, ஸ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீட்சிதரின் பாடல்களை பாடினர். நேற்று பகல் 2 மணிக்கு மேல், ராதை - கிருஷ்ணர் திருக்கல்யாணம் நடந்தது. விழா ஏற்பாட்டை ஸ்ரீசத்குரு நாம ஸங்கீர்த்தன பஜன் அமைப்பினர் செய்திருந்தனர்.