பதிவு செய்த நாள்
07
ஆக
2014
12:08
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே, தமிழ் மற்றும் ரோமன் எண் பொறிக்கப்பட்ட மைல் கல்லும், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி, மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில், தமிழ் மற்றும் அரபு எண் பொறிக்கப்பட்ட மைல்கற்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க குழுவின், புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே, அன்னவாசலில் அரசு மாணவர் விடுதிக்கு எதிரே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மற்றும் ரோமன் எண் பொறிக்கப்பட்ட மைல்கல் உள்ளது.இது போல, இரண்டு மைல்கற்கள், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி மற்றும் மாப்பிள்ளைநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் சாலை ஓரத்தில் கிடந்தது. தமிழ் எண் பயன்பாடு சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளும் எண்ணத்தோடு பல்வேறு கிராமங்களிலும் தகவல் சேகரித்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன், தமிழ் மற்றும் ரோமன் எண் பொறிக்கப்பட்ட மைல்கற்கள், தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலுள்ள கூழியான் விடுதி கிராமத்திலும், விராலிமலை நெடுஞ் சாலையிலுள்ள அன்னவாசலிலும் கண்டறிப்பட்டுள்ளது.
தற்போது, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர் வகோட்டை எல்லைப்பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி மற்றும் மாப்பிள்ளை நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில், தமிழ் அரபு எண் பொறிக்கப்பட்ட மைல்கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மைல்கற்கள், 18ம் நூற்றாண்டில், சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்திய பின், நடப்பட்டடுள்ளது. தஞ்சாவூர் அரண்மனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லோடு, தற்போது அடையாளம் காணப்பட்ட மைல்கற்களின் எழுத்தமைதி எழுத்துருக்கள், கல்லின் வடிவம் ஆகியவை ஒப்புநோக்குப்பட்டது. இந்த மைல்கற்கள், ஒரே காலத்திலானவை என்பது தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து மைல்கற்களும், தமிழ் ரோமன் எண்களுடனும், தஞ்சாவூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மைல்கற்களில் தமிழ் அரபிக் எண்களும் பொறிக்கப்பட்டுள்ளதன் மூலம், புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தமிழ் ரோமன் எண் அலுவலக பயன்பாடுகளில் முதன்மை பெற்றிருந்தது தெரிகிறது. ஆய்வுக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மைல் கற்களை, தமிழ்நாடு தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்களில் ஒப்படைக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழக தொல்லியல் கழகம் மூலமாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.