பதிவு செய்த நாள்
07
ஆக
2014
12:08
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த அத்தியூர் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பாக இடிந்து, மண்ணோடு புதைந்து போன சிவாலயத்தை அப்பகுதி மக்கள் பராமரித்து, மீண்டும் ஆலயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சதுர்வேதி மங்களம் என்னும் உத்திரமேரூர்க்கு தென்பால், 12 கி.மீ., தூரத்தில் உள்ளது அத்தியூர் என்ற கிராமம். இக்கிராமத்தில் மிகவும் பழமையான கைலாசநாதர் கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக இடிந்து மண்ணுக்குள் புதைந்து போனது. இந்நிலையில், கடந்த 2010 ம் ஆண்டு, ஜூன் மாதம் 18ம் தேதி, ஆலயம் மண்ணுக்குள் புதைந்த பகுதிக்கு அருகாமையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஏரி நீர் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி மேற்கொள்ள பட்டது. அப்போது, கால்வாய் வெட்டும் போது, மண்ணில் புதைந்திருந்த, நந்தியம் பெருமாள், திரிபுற சுந்தரி உடனுறை கைலாசநாதர் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அச்சமயம் அந்த வழியில் சென்ற வழி போக்கர் ஒருவர், இறைவன் அருள் பெற்று, அப்பகுதியில் பாழடைந்த ஒரு கிணற்றை குறிப்பிட்டு, அதில் பெருமாள் சிலை புதைந்திருப்பதாக கூறினார்.
அதனை தொடர்ந்து, வழி போக்கர் கூறிய கிணற்று பகுதியில், கிராம மக்கள் தூர் எடுத்தனர். அப்போது, அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அத்தி வரதராஜபெருமாள் மற்றும் விஸ்வசேனர் ஆகிய கற்சிலைகளை கண்டெடுத்தனர். மீண்டும், மீண்டுமாக அக்கிராமத்தில் தெய்வ சிலைகள் கண்டெடுக்கபட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கண்டெடுத்த சிலைகளை அரசு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் வந்து, ஆராய்ச்சி செய்து, அச்சிலைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறினர். இதனிடையே அப்பகுதி கிராம மக்கள் ஒன்று கூடி, அச்சிலைகளை கொண்டு ஆலயம் கட்டிட முடிவெடுத்தனர். அதன் படி, அத்தியூரில் பெருமாள் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2012, பிப்ரவரி மாதம் சிறப்பாக சம்ப்ரோ நடந்து முடிந்தது. தற்போது பெருமாள், கிராம மக்களுக்கு இறையருள் வழங்கி அருள் பாலித்து வருகிறார். பெருமாள் கோவில் அமைந்ததை தொடர்ந்து, அத்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவ பக்தர் பெருமாள் என்பவரின் கனவில், சிவபெருமான் வயோதிகர் வடிவில் தோன்றி, சிவாலயம் கட்டும் படி உத்தரவிட்டார். இதனை அத்தியூர் மக்கள் ஏற்று, அப்பகுதியில் சிவாலயம் அமைக்க தீர்மானித்தனர். அதனை தொடர்ந்து, கைலாசநாதர் கோவில் புதைந்திருந்த இடத்தில் இருந்து, ஆவுடையுடன் கூடிய லிங்கம் மற்றும் அம்பாள், நந்தி பகவான் ஸ்ரீபீடம் ஆகியவை கண்டெடுத்து, அதே இடத்தில் புதியதாக சிவாலயம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரு பணியில் பங்கெடுக்க விரும்புவோர், ரா. பெருமாள் (கை பேசி எண்) 09380542714, முரளி, (கை பேசி எண்) 09787178669 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புடைய கோயில்கள் :