பதிவு செய்த நாள்
11
ஆக
2014
12:08
சென்னை : சகோதரத்துவத்தை உணர்த்தும், ரட்சாபந்தன் விழா, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும், ஆவணி மாத பவுர்ணமி நாளில், சகோதரத்துவத்தை உணர்த்தும், ரட்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. நேற்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, வடமாநிலத்தவர்கள் அதிகம் வாழும், வேப்பேரி, எம்.கே.பி.,நகர், சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில், கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது.பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.சவுகார்பேட்டை பகுதிகளில் நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., மம்தா பானர்ஜி உருவங்கள் பொறிக்கப்பட்ட ராக்கி கயிறுகள், பரபரப்பாக விற்பனையாகின.அவற்றிலும், நரேந்திர மோடி, ஜெயலலிதா படங்களுடன் கூடிய ராக்கி கயிறுகள் அதிகம் விற்பனையானதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். கி.பி.,1303ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள சித்துார்கர் நகரை, டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க சென்றபோது, சித்துார்கர் ராணி, பத்மினி, அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி கயிறுகள் அனுப்பியதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதையடுத்து, அந்த மன்னர்கள், தங்கள் சகோதரியான பத்மினியை காக்க, படைகளை அனுப்பினர்.