பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
குன்னூர் : குன்னூரில் கொட்டும் மழையில், கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. குன்னூர் மாடல்ஹவுஸ் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர பெருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. மழை வேண்டியும், நீர்நிலை ஆதாரங்கள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர்கள் ஏற்படாமல் இருக்கவும் விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் 9.30 மணிக்கு கலச வேள்வி பூஜை, 1008 மந்திரங்கள் முழங்க சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு தந்திமாரியம்மன் கோவில் அருகே, மேலதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட அம்மன் பவனியுடன், கஞ்சி கலய ஊர்வலம் துவங்கியது.பா.ஜ., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் துவங்கிய நேரத்தில் மழை பெய்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விநாயகர் கோவில், மவுன்ட்ரோடு, ஐயப்பன் கோவில், மாசானியம்மன் கோவில் வழியாக ரேலிகாம்பவுண்ட் வார வழிபாட்டு மன்றத்தை நிறைவு பெற்றது. பிரசாத வினியோகம் நடந்தது.ஏற்பாடுகளை மன்ற தலைவி பிரபாவதி மோகன், துணை தலைவி இந்து, மன்ற பொறுப்பாளர்கள் ஆஞ்சலின், இளைஞரணி தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் செய்திருந்தனர். நூற்றுக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் மேற்பட்டோர் பங்கேற்றனர்.