பதிவு செய்த நாள்
24
மே
2011
05:05
இதை கடைப்பிடிப்பவர்கள் மாத்வர். கடவுள், இயற்கை, ஜீவர்கள் தனித்தனி தத்துவங்கள். ஒரே கடவுள் ஸ்ரீஹரி. அவரைப்பக்தி செய்வதே நலம் பெறும் வழி என்பதுவே முக்கியப்பொருள். இதை விளக்குவதே துவைத வழி.
உலகின் எந்தப் பகுதியிலும் இந்தியாவில் போன்று அதிக அளவு ஞானிகள், யோகிகள், ஆசிரியர்கள் குருமார்கள் தோன்றவும் இல்லை. ஏனெனில், இங்கேயே அதிக அளவு ஆன்மிக இலக்கியமும், மதத்தலைவர்களும் உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் மாத்வாச்சாரியார் ஒருவர். இவர் பரவச் செய்ததே துவைத மதம். துவைதம் என்றால் கருமை என்று பொருள். அதாவது பிரிவு இருக்கிறது என்று கருத்து. இது வைதீக மதமே. வேதக் கருத்துகளின்படி உண்டாக்கப்பட்ட மதம். நமது சநாதன, வைதீக மதத்தின் முக்கியமான நூல்கள் எனப்படுபவை மூன்று. அவை பகவத்கீதை, உபநிஷத்து, பிரும்ம சூத்ரம் ஆகும். இந்த மூன்றையும் இணைத்து பிரஸ்தானத்ரயம் என்பர். இதில் பகவத்கீதை மஹாபாரத நடுவில் ஸ்ரீகிருஷ்ணர் அருச்சுனனுக்குச் செய்த உபதேசமாக வருவது. உபநிஷத்துகள் வேதத்தின் கடைசிப் பகுதியான ஞானத்தைப் போதிப்பனவாகும். இவை உண்மையை நேருக்கு நேர் தரிசித்த ரிஷிகளின் அனுபவங்கள். பெரியதான வேதக்கருத்தை மறந்து விடாதிருக்கவும், யாராவது பொருள் மாற்றி உரைத்துவிடாதிருக்கவும், சுருக்கமாக வியாசரால் செய்து வைக்கப்பட்ட சூத்திர நூல் தான் பிரும்ம சூத்திரம். இதுதான் வேதப்படியான மதவழி என்று ஒரு கொள்கையை நிலைநாட்ட வேண்டியவர் இந்த மூன்று நூல்களுக்கும் தமது கொள்கைக்கும் விரோதம் இல்லை என்று பொருளும், விரிவுரையும் எழுதி நிறுவ வேண்டும். அதன்படி தத்தமக்கு ஏற்ற கொள்கையை பிரஸ்தானத்திரயத்திற்கு விளக்கவுரை எழுதிப் பரப்பியவரே மாத்வாச்சாரியார். ஸ்ரீ மாத்வாச்சாரியாரின் மொத்த வேதாந்த தத்துவமும் பேதம் அல்லது பிரிவுக் கொள்கையின் மீதே எழுந்துள்ளது. ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு உள்ள வித்தியாசம் வேறுபாடே இந்தப் பிரிவு. அதனால் பொருள்களுக்குள், உயிர்களுக்குள் அனுபவங்களுள் அவரவர் இருக்கும் நிலைகளும் என்று எங்கும் எதிலும் பிரிவு பேதம் உள்ளது என்பதே அன்னாரின் தத்துவக் கொள்கை. இம்மாதிரி போதங்களை ஐந்து வகைகளில் அடக்கிச் சொல்லுகிறார். அவை.
1. தனி ஜீவாத்மாக்களிலிருந்து கடவுள் வேறுபட்டவர்.
2. ஜடப்பொருளிலிருந்தும் கடவுள் வித்தியாசமானவர். அறிவில்லாதது, வாழ்க்கை நடத்த முடியாதது ஜடப்பொருள்.
3. ஒரு ஜீவாத்மாவிலிருந்து இன்னொரு ஜீவாத்மாவிற்கு வேறுபாடு உள்ளது.
4. ஜீவாத்மாக்கள் ஜடப்பொருளான பிரக்ருதியிலிருந்து வேறுபட்டு உள்ளவை ஆகும்.
5. பிரக்ருதிக்குள்ளும் அது பகுக்கப்படும் போது, பல பகுதிகளாகின்ற சமயத்தில் ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் வேறுபாடு இருக்கிறது.
இவருடைய தத்துவ அடிப்படையாக, அறிவோனும் அறியப்படும் பொருளும் உண்மையான சமாச்சாரங்கள், இல்லையானால் அறிவு உண்டாக முடியாது என்பது இருக்கின்றது. அறிவு உண்மையான இருக்குமானானல் அதற்கு விளக்கமாகும் பொருள்களும் உண்மையாக இருந்தாக வேண்டும். அறிவு என்பது அதற்குப் பொருளாகும் சமாச்சாரங்களை நிச்சயிக்கின்றது. தொடர்பே ஞானமாக உள்ளது. தனிஞானம், தாண்டிய ஞானம், அறிவோன்-அறியப்படும் பொருள்-அறிவது மூன்றும் போய்விடும் ஒரு கடந்த ஞானம்-அப்பாற்பட்ட அறிவு என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதில்லை. ஸ்ரீ சங்கரர் கூறும் யோகத்தில் கூறப்படும் தனித்த ஞானம் தள்ளப்படவேண்டியது. அறிவோனும், அறியப்படும் பொருளும் இன்றி எப்படிப்பட்ட அறிவும் சாத்தியமில்லை என்பது ஸ்ரீமாத்வாச்சாரியாரின் தெளிவு. ஆகவே இந்த உலகம் உண்மை. ஏனெனில், இந்த உலகம் உண்மை என்றே அறியப்படுகிறது. ஐம்புலன்களாலும் உணரப்படும் இந்த நம்மைச் சுற்றிய உலகிலுள்ள பொருள் மாறுவதாகவோ, மாறாததாகவோ அறியப்படலாம். ஒருபொருள் மாறக்கூடியது என்பதோ நிரந்தரமற்றது என்பதோ, அதை உண்மையில்லாததாகக் கருதச் செய்ய முடியாது. நாம் உண்மையில் பேதங்களையே அனுபவப்பூர்வமாகக் காண்கிறோம். பொருள்களையும் மக்களையும், ஒன்றுக்கொன்று ஒருவருக்கொருவர் வேறுபாட்டுடனேயே அறிகிறோம். அறிவுற்ற பொருள்களிடையேயும் வித்தியாசங்களுள்ளன. அறிவுள்ள உயிர்களிடையேயும் பேதங்களைப் பார்க்கிறோம். இவற்றிலிருந்து மாறுபட்ட இயற்கை உடையவரே கடவுள். அவரே உலகைத் தம் கட்டளையால் நியமித்து நடத்துகிறார். அவருக்கடுத்தபடியாக பிரக்ருதியை விடக்குறைந்த தளை கட்டுப்பாடு உள்ளவரான ஜீவர்கள், அறிவிலும் சக்தியிலும் துன்பத்தை சமாளித்துக் கொள்ளுபவராக உள்ளனர்.
கடவுள் சிருஷ்டி செய்வது போல இந்த ஜீவர்களும் தம்மால் முடிந்த அளவல் சிருஷ்டி செய்கின்றனர். இந்த ஜீவர்களின் சிருஷ்டியே செயற்கை எனப்படுகிறது. ஜீவர்கள் உலக பந்தங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைய இறைவனை பக்தி செய்ய வேண்டும். தங்களை கடவுளிடம் அர்ப்பணித்துக் கொண்டு சரணாகதி செய்துவிட வேண்டும் என்கிறார். ஆகவே இவரது கருத்துப்படி ஜீவர்கள், உலகம், கடவுள் என்ற மூன்று தத்துவங்களும் உண்மையாகும். இந்த மூன்று சமாச்சாரங்களுக்குள் வேறுபாடு உண்மையாக இருக்கின்றது. உலகில் இரண்டு செய்திகள் உண்மை.
1. ஜீவர்களையும் கடவுளையும் விட வேறொரு உலக ஜடப்பொருள் (பிரக்ருதி) சுயேச்சையற்றதாக உள்ளது.
2. நிரந்தரமான உண்மையான பிரபஞ்சத்தை ஆளும் இறைவன் எதற்கும் கட்டுப்படாத சுதந்தரமானவனாக இருக்கிறான்.
இயற்கையில் ஜீவர்கள் ஞானமுடையவர்களே அவர்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவர் வேறுபட்டவர்கள். இப்படியே எல்லா ஜீவர்களுமே கடவுளிடமிருந்து வேறானவர்களாவர். இருந்தாலும் தங்களை விட மேலான கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அடங்கி இருக்க வேண்டியவர்கள். எதிர்பார்த்திருப்பவர்கள். ஐம்புலன்களுடன் ஓர் உடலைப் பெற்று உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பந்தப்பட்டவனே. கட்டுப்பட்டவனே. இந்த பந்தத்திலிருந்து மோட்சம், விடுதலை பெறப் பற்பல பிறவிகளிலும் ஜீவன் உழைத்துப் போராடி கடைசியில் அந்த விடுதலையைப் பெறுகிறான். இவ்வாறு உலகில் சுதந்திரமானவர்கள்-சுதந்திரமில்லாதவர்கள் என்ற இரண்டு விதங்கள் உள்ளன. கடவும் மட்டுமே சுதந்திரமானவர். ஜீவர்களும், பிரக்ருதியும் அவருக்குக் கட்டுப்பட்டவர்கள். காலம்-இடம் போன்றவை ஜீவர்களையும், பிரக்ருதியையும் கட்டுப்படுத்துகையில் கடவுளிடம் அவை வேலை செய்வதில்லை. இதனால் கடவுள், எங்கும் இருப்பவராக, எல்லாம் அறிபவராக, எப்போதும் இருப்பவராக விளங்குகிறார்.
துவைத விளக்கம்
இந்த துவைத தத்துவ விளக்கமாக ஒரு சமஸ்கிருத பாடல்
ஸ்ரீமந் மத்வ மதே ஹரிஹி பரதரஹ
ஸ்த்யம் ஜகத் தத்வதோ
பிந்நா ஜீவகணா ஹரோ நுசரா
நீ சோச்ச பாவம் கதா ஹ
முக்திர் நைஜ ஸுகாநுபூதி ஹி
அமலா பக்திச்ச தத் ஸாதனம்
ஹ்யக்ஷõதி த்ரிதயம் ப்ரமாணமகில
ஆம்நாயக வேத்யோ ஹரி ஹி
இந்த ஒரு செய்யுளிலேயே துவைதப் பொருள் முழுவதும் வந்திருக்கிறது. இந்த சுருக்கமான செய்யுளின் பொருள்: ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமானுஜரைப் போலவே ஸ்ரீமத் மாத்வரும் ஹரியான மஹாவிஷ்ணுவையே பரமாத்மாவாகக் கொள்கிறார். அவருடைய மேலான உலகம் வைகுந்தம். ஜீவர்கள் மஹாவிஷ்ணுவைப் பக்தி செய்வதாலேயே வைகுந்தம் போக முடியும். முக்தியடைய முடியும். முக்தி என்பது அங்கேதான் இருக்கிறது. அங்கே பலவகைப்பட்ட ஜீவாத்மாக்கள் உள்ளனர். முக்தியிலும் பலவிதம் உள்ளது. வைகுண்டத்தில் சென்று மஹாவிஷ்ணுவை அடைந்து அவடைய துணையைப் பெறுவதே ஐக்கியம் கொள்ளுவதே மோட்சமாகும். மாத்வ கொள்கைப்படி அனைத்து ஜீவர்களும் முக்தியடைய முடியாது. சிலருக்கு முக்தியே கிடையாது. அவர்கள் என்றென்றும் துன்ப சம்சார சமுத்திரத்திலே கிடந்துழல வேண்டியதுதான். இது பிற ஆச்சாரியார்களின் இந்திய தத்துவ சிந்தனைகளுக்கு முரண்பட்ட புதிய கருத்தாக உள்ளது. இதனாலேயே, இவர் மாத்வாச்சாரியார் காலத்தில் இந்தியாவிற்குள்ளே நுழைந்திருக்கலாம் எனக் கருதப்படும் கிறிஸ்துவ மதக் கருத்துக்களினால் அவர் கவரப்பட்டிருக்கலாம் என நினைக்கிறார். அப்படி முடிவு செய்து விடுதல் எளிதில்லை. ஏனெனில் இந்திய தத்துவச் சிந்தனைகள் கிறித்துவ மதத்தில் நிறைய உள்ளன. தற்செயலாக, தத்துவ ஒற்றுமைகள் இரண்டு இடங்களில் தோன்றக் கூடியவை தான்.
மேலும், கீதையில் கண்ணபிரான் அருச்சுனனிடம்,
16-ஆவது அத்தியாயத்தில், தைவாசுர சம்பத் விபாக யோகத்தில் 19-ஆவது செய்யுளில் கூறுவது :
தானஹம் த்விஷ்த: க்ரூரான் ஸம்ராரேஷு நராதமான்
க்ஷியாமி அஜஸ்ரம் அகபான் ஆசுரீஷ் வேவ யோனிஷு
மனிதர்களில் பொறாமையும், குறும்பும் கொண்ட இழிந்த தீய மூடர்களை ஜட உலகில் மீண்டும் மீண்டும் அரசு யோனிகளில் பிறக்கும்படி கீழான கதியில் நானே தள்ளுகிறேன் என்கிறான் கண்ணன். இது போன்ற இந்திய தத்துவ நூல்களின் கருத்தை மாத்வர், தமது கருத்துக்கு சாதகமாகக் காட்டி இருக்கிறார். மேலும் ஜீவ ஆன்மாக்களுள் பல வகைகளையும் ஆன்மாக்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
1. நல்லதையே செய்து கடவுளை மட்டுமே தொழுது நல்லவராக இருக்கும் ஆன்மாக்கள். இவர்கள் மட்டுமே மோட்சத்தில் நிரந்தரமாகத் தங்கி கடவுளுடன் ஆனந்த்ம் அனுபவிப்போர்.
2. மீண்டும் மீண்டும் உலகில் பிறவிகளை எடுத்து சுக துக்கம் என்று மாறி மாறி கலந்து அனுபவிப்போர் இவர்களுக்கு ஒரு போதும் மோட்சமில்லை. அதாவது வைகுந்தப் பதவி இல்லையாம்.
3. விஷ்ணுவைப் பழித்து, அவரது அடியாரை இம்சித்து பாவங்களே செய்து துன்பமான நரகத்திலேயே உழலுபவர்கள். இவர்களுக்கும் சொர்க்கம் இல்லை அதாவது வைகுந்தம் இல்லை.
வேதங்களில் மூன்றுவிதமான ஆன்மாக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
1. நித்ய ஸுரிகள்
2. முக்தாத்மாக்கள்
3. பந்தாத்மாக்கள்
இவற்றையே முன் சொன்ன தமது கொள்கைக்கு மாத்வர் ஆதாரமாகக் கொண்டு தம் பாணியில் பொருள் கொண்டிருக்க வேண்டும். அனந்தமேயான நிரந்தர சொர்க்கமே சிலருக்குத் தான். சுகமும் துக்கமும் கலந்துண்டாகும் உலக வாழ்க்கை சிலருக்கு. துக்கமேயான கொடிய நகரம் சிலருக்கு என்று மூவகையில் ஆன்மாக்கள் இருப்பதாக நிலை நிறுத்துகிறார்கள்.
பிரமானங்கள்
இம்மாதிரி ஜீவர்களுக்கு அறிவு உண்டாகும் வழிகள், அதாவது அறிவைத் தரும் அளவைகள் மூன்றை ஒப்புக்கொள்கிறார், அவை
1. பிரத்யட்சம் (டேரக்ட் பெர்செப்ஷன்) ஐம்புலன்கள் மூலம் நேரடியனுபவமாகக் கண்டறிதல்.
2. அனுமானம் (இன்டர்வேஸ்) ஒன்றை வைத்து ஒன்றை ஊகித்து உணர்ந்து அறிதல்.
3. ஆகமம் ( ஸ்கிரிப்சுரல் டெக்ஸ்ட்ஸ்) சான்றோர்களின் அனுபவமாகிய என்றும் உள்ள வேத நூல்கள்.
இந்த மூன்று வழிகளினாலேயும் துவைதமே சித்திக்கின்றது என்று பிரமான பிரமேயங்களால் ஸ்ரீமாத்வாச்சாரியார் காட்டுகிறார். இதற்காகப் புராண, இதிஹாசங்களின் கருத்துக்களையும் உபநிஷதங்கள், பகவத்கீதை, பிரும்ம சூத்திரக் கருத்துரைகளையும் மேற்கோள்களாகக் காட்டுகிறார்.
துவைதத்தில் இறைவன்
ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஹரி. அவரே எல்லாவற்றைக் காட்டிலும் பெரியவர். தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர். காலமும் இடமும் இவரைக் கட்டுப்படுத்துவதில்லை. இவரிடத்தில் குறைகள் எதுவும் இல்லை. அறியாமைக் குற்றமும் இல்லை. எல்லாவற்றையும் எப்போதும் அறிந்திருப்பவர். அவருடைய அறிவை மறைக்க எதுவுமில்லை. ஆகவே இவரே ஸர்வோத்தமர். புரு÷ஷாத்தமர். இவரிடத்தில் எல்லாப் புனிதமான குணங்களும் உள்ளன. இவற்றை கலியாண குணங்கள் என்பர். இவரே பரப்ரஹ்மம் பரமாத்மா. எங்கும் பரவியுள்ள பிருஹ்மம் ஆவார். இவர் இல்லாத இடமே இல்லை என்பர். அதே போல் இப்போது, இருக்கிறார் அப்புறம் இருக்கமாட்டார் என்றோ இப்போது இல்லை, அப்புறம் இருப்பார் என்றோ கூற வழியின்றி எப்போதும் இருப்பவர்.
முத்தொழில்
இவரே ஜெகம் எனப்படும் உலகத்திற்கே இறைவன். தனக்குவமை இல்லாத தலைவன். இவரே பிரக்ருதியின் மேல் ஆளுகை செய்து ஜீவர்களுக்காக, படைத்தல், காத்தல், அழித்தல், நியமித்தல், ஞானம் தருதல், பந்தம் விடுதலை இவற்றை வழங்குதல், தடுத்தல் முதலிய எட்டு வேலைகளைச் செய்கிறார். பிரக்ருதியைப் பகுதிகளாக்கி உலகங்களைப் படைக்கின்றார். அப்போது பிரக்ருதியுள் ஐந்து பூதங்கள் வருகின்றன. சத்துவ, ரஜஸ், தமோ குணங்கள் பிரிகின்றன. இவற்றுள் வித்தியாசங்கள் உண்மையாகின்றன. ஐந்து பூதங்களிலும் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் என ஒன்றிலிருந்து ஒன்று வேறுபாடுள்ளதாக வருகின்றன. சமமாக இருந்தது மூன்றாகப் பிரியும் போது முக்குணங்களும் வித்தியாசங்களுடன் விரிகின்றன. பொருள்கள் குறிப்பிட்ட காலம் பெயர் வடிவங்களுடன் நிலைபெற்று இருப்பைப் பெறச் செய்வதே ஸ்திதி காத்தலாகும். உலகில் சாதுக்களையும், தருமத்தையும் காத்து நிலை நிறுத்த அதருமத்தையும் அசுரர்களையும் தண்டிப்பதும் காத்தல் தொழிலே. காலநியமப்படி பொருள்கள் மறைவதும், பிரபஞ்சம் பிரளயத்திற்கு உட்படுவதும் அழித்தல் வேலையே. பிரபஞ்சத்தில் இருப்புக்கு வரும் எல்லாப் பொருளுக்குமே, தோன்றுதல், குறிப்பிட்ட காலம் இருத்தல், மறைதல் என்ற மூன்று மாறுதல் உண்டு. இதுவே படைப்பு, காத்தல், அழித்தல் எனும் முத்தொழில். இந்த பிரபஞ்ச மாறுதல்களுக்கு இறைவன் பிரக்ருதியில் உண்டாக்கும் மாறுதலே காரணம்.
நியமனம்
நியமனம் என்பது பிரக்ருதியை இன்ன பொருளாக இருக்கச் செய்வதும், படைத்தலுக்கும், காத்தலுக்கும் அழித்தலுக்கும் உட்படுத்துவதே. இப்படிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே நியமனம். இந்தப் பிரக்ருதியில் சேர்ந்து கரும வினைப்படி ஜீவர்களை அந்தந்த நிலையில் அந்தந்த சக்தி உள்ளவர்களாக வாழவைப்பது நியமனம் ஆகும். இதே போல ஞானமளிப்பதும், பந்தம் விலக்குவதும், விடுதலை அளிப்பதும் இறைவனே. வணங்கிப் பணிபவருக்கு ஞானமளிக்கிறார். பிரக்ருதியின் மாறுதல்களுக்குக் காரணமாகி ஜீவர்களுக்குத் தரவேண்டியதைத் தந்து இரண்டு பேரையும் தமது கட்டுப்பாட்டில் தம்மை எதிர்பார்ப்பவர்களாக வைத்துள்ளார். ஆகவே, அனைத்தும் செய்பவர் கடவுளே என்னும் பொருளில் ஸர்வஜ்ஞன் எனப்படுகிறார்.
திவ்யமூர்த்தி
இவருக்கு பிரக்ருதமில்லாத பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட ஞான உடல் ஒன்று உண்டு. அது என்றென்றும் இருப்பது. அதற்கு அழிவில்லை. இதை இறைவனின் திவ்யமங்கள விக்ரஹம் என்பர். இதில் பாதங்கள், தலை மற்ற உறுப்புகள் எல்லாமே ஞானம், ஆனந்தம் உடைய ஆத்மாவாகவே உள்ளது. அந்தத் திருமேனியில் கண், காது, மூக்கு முதலிய எல்லாப் புலன்களும் உண்டு. அவை நிரந்தரமாகவே உண்டு. அவை ஒவ்வொன்றுமே தனித்தனியாக ஐந்து புலனறிவுகளான வடிவம், மணம், சுவை, தொடுகை, ஒலி முதலிய அனைத்தையுமே அறியக் கூடியன. இத்தகைய புனித மங்கலத் திருமேனி அதன் உறுப்புகளுடன் இறைவனின் ஸ்வரூபமே, தவிர வேறு பொருளில்லை. இவர் மட்டுமே எப்போதும், எங்கும் சுதந்தரமானவர். இவருக்கு மகாயோக விருத்தி உண்டு. அதாவது, ஒலியின் முழுமையான உறுப்பு, சக்தி சிறப்பு ஆகும்.
இறைவனின் நிலைகள்
இவர் இருக்கும் நிலை பலவாகச் சொல்லப்படுகிறது. பரம், வியூகம், விபவம், முதலியவை பாஞ்சராத்ர ஆகம கருத்துகளாகும். அதாவது இறைவன் ஹரி பரவடிவில் வாசுதேவனாக இருக்கிறார். வியூக வடிவில், பிரத்யும்னன் என்று இருந்து படைக்கிறார். அநிருத்தனாக இருந்து அளித்துக் காக்கிறார். சங்கர்ஷணனாக இருந்து அனைத்தையும் அழிக்கிறார். ஆகவே முத்தொழிலையும் முன் நின்று செய்ய வியூக வடிவில் இருக்கிறார். உலகில் கீதையில் பகவான் விஷ்ணு, கிருஷ்ணனாக இருந்து அருளியபடி தருமத்தை நிலைநாட்ட அதருமத்தை அழிக்க சாதுக்களைக் காக்க யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன் என்ற கருத்திற்கிணங்க, அவதாரங்கள் பல எடுத்து வருகிறார். அவதாரம் என்ற பதம், தன் நிலை விட்டு இறங்கி வருதல் எனப் பொருள்படும். அப்படி பரவாசுதேவன், வியூக வடிவம் போலவே, விபவ வடிவங்களைத் தரிக்கிறார். அவையே மீன், ஆமை, வராகம், நரசிம்மம், வாமனம், கபிலர், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், பலராமர் ஆகிய அவதாரங்கள், கல்கி இனிமேல் வரப்போகும் அவதாரம் ஆனதால் பத்து அவதாரத்தில் ஆவேசவதாரமான பரசுராமர் சேர்க்கப்பட்டது. இன்னும் புத்தரையும் மஹாவிஷ்ணுவின் அவதாரமாகவேச் சொல்வர்.
அந்தர்யாமி என்று உள்ளுறைபவனாக அனைத்து ஜீவர்களுள்ளும் அவரே இருக்கிறார். அர்ச்சாவதாரம் என்று ஐம்பொன், பொன், கல் செம்பு ஆகிய உலோகம் முதலியவற்றால் ஆன மூர்த்தங்களில் முழுமையாக உள்ளார். இப்படி ஐந்து வடிவங்களாக நிலைகளாக இறைவனுள்ளார். இவை அனைத்துமே ஆனந்தம், சக்தி, ஞானம், வீர்யம், செல்வம், கருணை, அழகு, எளிமை என்ற எட்டு குணங்களையும் கொண்டு நிறைந்தவை. இவற்றிலிருந்தே எண்ணற்ற குணங்களும் உண்டாவதால் எல்லா கலியாண குணங்களும் உள்ளவராகக் கூறப்படுகிறார். அவருடைய விளையாட்டுக்கள், வடிவம், சுவை எல்லாமே அவரைத் தவிர வேறில்லை. அதாவது அவரது ஸ்வரூபமே!
இலக்குமி
ஜீவர்களை விட உயர்ந்த பரமாத்மாவை விடத் தாழ்ந்த நிலையில் லக்ஷ்மி என்பவள் இருக்கிறாள். இவள் நித்ய சூரி ஆவாள். அதாவது மஹாவிஷ்ணுவைப் போலவே என்றும் பந்தத்தில் சிக்காதவள். மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாரும் சம்சாரத்தில் சிக்குபவர்கள் சிலர் பிறகு மோட்சத்தை அடைந்தவர்கள். பரமாத்மாவைப் போலே இவளுக்கு ஞானம், ஆனந்தம் ஆகிய வடிவில் அழியாத பௌதிகமில்லாத உடல் உண்டு. அதாவது பஞ்ச பூதங்களால் ஆகாத அதற்கு அப்பாற்பட்ட தூய உடல் உள்ளவள். அநேக வடிவங்களும் உண்டு. இவளிடம் அறியாமை என்ற குறை இல்லை. இவளுக்கும் இறைவனைப் போலவே மகா யோக விருத்தி உண்டு. எல்லா ஒலிகளாலும் குறிப்பிடப்படுகிறாள். எங்கும் எப்போதும் பரவியுமுள்ளாள். இதனாலெல்லாம் ஜீவாத்மாக்களை விட உயர்ந்தவளாக இருக்கிறாள். பின் ஏன் இவளையும் இன்னொரு பரமாத்மா என்று சொல்லக் கூடாது என்றால், லக்ஷ்மி மஹாவிஷ்ணுவின் பத்தினியாவாள். அவருக்குப் பிரியமானவள். அதனால் வேறுபட்டவள் ஆகிறாள். அதோடு, அவரால் மட்டுமே ஆளப்படுகிறவளாயிருக்கிறாள். இறைவனைக் காட்டிலும் ஞானத்திலும், ஆனந்தத்திலும் குறைந்தவள். இதனால் இவளை இறைவனுக்கு அடுத்தவளாகவே சொல்கிறார்கள். இவ்வளவு பெருமையும் சிறப்பும் இல்லாததால் ஜீவாத்மாக்களெல்லாம் இவளை விடத் தாழ்ந்தவர்களாவர். மேலும் ஜீவர்களில் எவரும் சம்சார பந்தத்திலேயே சிக்காத நித்ய முக்தர்கள் இல்லை. லக்ஷ்மியும் பகவானுமே நித்ய சூரிகளாவர். மோட்ச உலகில் இடம்பெறும், மற்றவரெல்லாரும் சம்சாரத்திலிருந்து விடுதலை பெற்று வந்தவர்களாவர். முன்பே செய்யுளில், ஜீவாத்மாக்களையும் விட லக்ஷ்மி தலைசிறந்தவள் என்றும், லக்ஷ்மியை விட மஹாவிஷ்ணு மிக உயர்ந்தவர் என்றும், ஹரிஹி என்ற பதத்தாலும் பரதரஹ என்ற வித்தாலும் குறிப்பிட்டுக் காட்டப்டுகிறது. அசைவனவும், அசையாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களாலும் ஆகி இருக்கும் பிரபஞ்சங்கள் எல்லாம் பொய்யாக இல்லாமல் உண்மையாகவே உள்ளன.
ஜீவவகை
பரமாத்மாவை விட ஜீவாத்மாக்கள் தாழ்ந்த தகுதியினால் வேறுபட்டவர்கள். இவர்களுக்குள்ளும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள். இவர்கள் ஆண் என்றும், பெண் என்றும் இருவகைப்பட்டவர்கள். அதாவது உடலைப் பெற்று பிறவி எடுக்கும் முன்பே ஜீவாத்மாக்களுள் ஆண், பெண் பேதமுண்டு என்கிறார். ஆண் வகையைச் சேர்ந்த ஆத்மாக்கள் பந்தப்பட்ட கரும தசையில் சம்சார உலகில் பெண் உடலைப் பெற்று பெண் பிறவிக்குள்ள வாழ்க்கையைப் பெறுகிறார்கள். ஆனாலும் நல்ல செயல்களாலும், பக்தியாலும் பரமனை பணிந்து விடுதலைப் பெற்று மோட்ச உலகில் புகும்பொழுது ஆண் வகை ஆன்மாக்களாகவே இருப்பர். அதே போல பெண் வகை ஆன்மாக்கள் கர்ம பலனால் உலகில் பிறவி பெறும் பொழுது ஆண் உடலைப் பெற்றிருக்கலாம். ஆனாலும் மஹாவிஷ்ணுவைப் பணிந்து வைகுண்டம் அடைந்தபொழுது பெண் வகை ஆன்மாக்களாகவே இருப்பர். ஜீவான்மாக்களில் மேலும் பல வகையினரை துவைதம் நமக்குச் சொல்கிறது. இவர்கள் முக்தி அல்லது மோட்சம் பெறத் தகுதிவாய்ந்த முக்தியோக்யர்.ஒருபோதும் முக்தியையே அடையாமல் என்றென்றும் உலக வாழ்விலேயே கிடந்துழலும் நித்திய சம்சாரிகள். என்றும் நரக வாழ்வில் உழலும், தீயவழியிலேயே செல்லும் தமோயோக்யர் என்று மூன்று பிரிவாக இருக்கிறார்கள். இவர்களுக்குள்ளே முக்தி யோக்யர் என்ற முதல் வகை ஆன்மாக்கள் தேவகணம், ரிஷிகணம், பித்ருகணம், சக்ரவர்த்தி கணம், உத்தம மனுஷ கணம் என்று ஐந்து வகையில் பிரிவுபடுவர். அந்தந்த கணத்தைச் சேர்ந்த ஆன்மாக்கள் அந்தந்த இடத்தையே இறுதி நிலையாக அடைவர். பிற நிலைகளை முயன்றாலும் அவர்களால் அடைய முடியாது.
1. நான்முகரான பிரும்மா, அக்னி, வாயு, வருணன் ஆகிய தேவர்கள் இந்திரனுடன் தேவகணங்களாவர்.
2. சப்தரிஷிகள், நாரதர் போன்றவர்கள் ரிஷிகணங்கள் ஆவர்.
3. சிரா, அரியமா ஆகியவர்கள் பித்ருகணங்கள் ஆவர்.
4. ரகு, பரதன், அம்பரிஷன், புரு, சிபி முதலானோர் சக்ரவர்த்தி கணங்களாவர்.
5. மனுஷ்யோத்தமர்களில் த்ருணஜீவர், தத்வ்ய திரிக்கஜீவர் என்று இருவகை உண்டு. இவர்களில் முதல் வகையானவர் பிரும்மத்தில் ஆன்ம குணத்தை தியானிக்கிறவர்கள். நேரடியாக அந்த ஞானத்தை உணர்ந்ததும் (அபரோட்ச ஞானம்) உடலை விட்டுப் பிரிந்ததும் அவரை விட மாறுபட்ட இரண்டாவது வகையினர் பிரும்மத்தின் உண்மை, அறிவு, ஆனந்தம், ஆன்மா ஆகிய நான்கு விதமான குணங்களை தியானிப்பவர்கள். இப்படி முக்தி பெற தகுதியான ஆன்மாக்கள் விடுதலைக்கான வழிகளைக் கடைப்பிடித்து மேலான மோட்சத்தை அடைவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இவர்களிடம் நல்லொழுக்கம், இறைவனிடம் பக்தி முதலிய உயர்ந்த குணங்கள் இருக்கும். இவர்களிலும் சிலர் சில சமயம் தீய இயல்பு கொள்ளுவது அசுரத்தனம் புகுவதாலேயே. இனி அடுத்து சுகத்திலும், துக்கத்திலும் மாறி மாறி விழும் உலக வாழ்வில் உழலும் நித்திய சம்சாரிகள் வருகிறார்கள். இவர்கள் உலகில் செய்யும் நல்ல காரியங்களின் பயனாக இன்பானுவமே வாழ்க்கையாகும். சொர்க்க உலகத்திற்குச் செல்கிறார்கள். நற்செயலின் பயனை சுகங்களாக அனுபவித்து முடித்த பின் அவை தீர்ந்து விடவே மீண்டும் உலகில் பிறக்க வருகிறார்கள். இந்த உலகிலே பாவச்செயல்களை அவர்கள் செய்திருந்தால் துன்பானுபவமே தொடரும். நரகத்தை அடைகிறார்கள். அங்கே தீச்செயல்களின் பயன் தீர்ந்தவுடன் மீண்டும் உலகில் ஏதாவதொரு இனத்தில் பிறக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் சொர்க்கத்திற்கு போவதும், உலகிற்கு திரும்புவதும், நரகத்துக்குப் போவதும், உலகத்திற்கே மீண்டும் திரும்புவதுமாக சம்சாரச் சூழலிலேயே என்றென்றும் சிக்கிச் சுற்றுகிறார்கள். இவர்களுக்கு ஒருபோதும் விடுதலையில்லை.
தமோயோக்யர் என்பவர்கள் 1. தைத்யர் 2. அசுரர் 3. பைசாசர், 4. அதம மனுஷ்யர் என்று நான்கு வகைப்படுவர். இவர்களுக்கு ஒருபோதும் விடுதலை கிடையாது என்பதுடன் சுகவாழ்வு தரும் சொர்க்கமும் கிடையாது. என்றென்றும் துன்பம் தருகம் நரகத்திலே அழிந்து விடுவார்கள். இவர்களுக்கு பக்தர்களிடத்தும், பகவானிடத்திலும் பக்தி வராது. வெறுப்புத்தான் வளரும். தீயொழுக்கமும், அசிங்க ஆச்சாரமும் கேடான எண்ணங்களுமே கொண்டிருப்பர். மேற்படி ஜீவான்மாக்கள் அனைவரும் ஞானம், ஆனந்தம் உடைய வடிவினரே, அளவில் மிகவும் சிறியவர்கள் அணுவின் அளவு என்று சொல்லப்படுகின்றனர். அனுப்பரிமாணம் என்பது, ஒரு தலைமுடி நுனியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு ஆகும். இந்த ஜீவர்கள் எல்லாருமே இறைவனின் ஏவலர்கள் தான். ஜீவர்களுக்குள் உள்ள ஆனந்தத்திலும், அறிவிலும் கூட ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. முக்தி அடையும் தகுதியுள்ள ஜீவர்கள் இவ்வாறு ஆனந்தத்தில் ஏற்றத்தாழ்வு உடையவர்களாக இருக்கிறார்கள். ஸ்தாவரமாக அதாவது செடி, கொடி முதலிய பயிர் வகைகளாக அசையாமல் ஒரே இடத்தில் இருப்பவற்றை விட பசு, பறவைகள் அதாவது நடந்து செல்லும் விலங்கினமும், வானில் பறந்து செல்லும் பறவையினமும் உள்ளிட்ட நகரும் ஜீவர்கள் அடையும் ஆனந்தம் அதிகம். அதே போல இறைவனிடம் பக்தி கொள்ளுதல், சேவை செய்தல் ஆகியவற்றால் இன்னும் அதிக ஆனந்தத்தை அடைகின்றனர். இடம் விட்டு இடம் நகராத தாவரங்கள் சுற்றுப்புறத்தில் இழைக்கப்படும் அநீதிகளால் துக்கமடைகின்றன. பலர் வெட்டுவதாலும், ஆடு மாடுகள் மேய்வதாலும் இன்னும் பல கெடுதிகளாலும் துன்பமுற வழி உண்டு. அத்துன்பங்களிலிருந்து மீள அனுகரணங்கள் அவற்றிற்குக் குறைவு. ஆனால் நகரக்கூடிய உயிரினங்கள் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அதிக வழிகள் உண்டு. மேலும் ஆடு, மாடுகள் மற்ற விலங்குகளும், இதர ஓடும் உயிரினங்களும் தாவரங்களின் தயவில் வாழ முடிகிறது. தாவரங்களை உண்டும் அவற்றில், அவற்றின் அடியில் தங்கியும் பிற விதங்களில் அனுபவித்தும் அதிக ஆனந்தம் பெறுகின்றன. இதைத்தான் துவைதம் சுருக்கமாக நகராத் தாவரங்களை விட நகரக்கூடிய ஜீவர்கள் அறிவிலும், ஆனந்தத்திலும் அதிகமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறது.
இவர்களை விட மனித ஜீவர்களுக்கு அறிவும், ஆனந்தமும் அதிகம். அவர்களிலும் பிராம்மண மனிதர் சிறந்தவர். பிராம்மண மனிதரைக் காட்டிலும் அரசர்களான சக்கரவர்த்திகள் நூறு பங்கு அதிகம் சிறந்தவராவர். மனிதருக்கு தாவரத்தையும், மிருகங்களையும் விட பரிணாம வளர்ச்சியாக அறிவும், உணர்வும் அதிகரித்துள்ளது. மிருகங்களுக்கு ஐந்தறிவு வரை தான் உள்ளன. மனிதனுக்கோ ஆறாவதாக மனம் வாய்த்துள்ளது. அதனால் மற்றைய உயிரினத்தை விட சுதந்திரம் அதிகம். இதை மனித இனம் உலகத்தை ஆள்வதை வைத்து உணரலாம். ஆகவே தனது அறிவினால் விஞ்ஞானத்தை வளர்த்து விதவிதமான அனுபவங்களால் ஆனந்தப்படுகிறான். இத்தகைய மனிதரில் நாட்டை ஆளும் மன்னாதி மன்னர்கள் அனுபவிக்கும் ஆனந்தம் அதிகமே. இப்படிப்பட்ட மாமன்னர்களைக் காட்டிலும் கந்தர்வ மனிதர்களின் ஆனந்தம் அதிகமெனப்படுகிறது. கந்தர்வர் எனப்படுபவர் கலைகளில் சிறந்தவராவர். ஆடல், பாடல், கவிதை, சிற்பம் முதலிய மனத்திற்கினிய கலைகளால் மனத்தில் ஆனந்தம் பொங்குவது இயற்கை. இது நாட்டை ஆளும் அரசியலிலும் பிற உலக அனுபவங்களிலும் உண்டாவதை விட அதிகம். அதனால் கந்தர்வரின் ஆனந்தம் அதிகமெனப்பட்டது. இப்படியே மேலே நான்முகனான பிரும்மாவின் ஆனந்தம், அறிவு வரையில் வித்தியாச நிலைகள் உள்ளன. இறுதியாக சிறந்தது முக்தியில் கிட்டும் ஆனந்தமே. முக்தியில் கிட்டுவது, தன்னுடைய ஆன்மாவின் அனுபவமான ஆனந்தமே. இந்த அனுபவம் ஒருவனுக்கு உலக வாழ்க்கையில் சம்சார நிலையில் கிட்டுவதில்லை. காரணம், அவனைச் சூழ்ந்திருக்கும் கர்மாக்களின் தொகுதியும், அதன் பலனுமே. இக்கர்ம தொகுதியால் அவனுக்குப் பிறவியில் உடல் உண்டாகிறது. அந்த உடலோ, ஐம்புலன்களால் ஆனது. அந்நமயம், ப்ராண மயம், மனோ மயம், விக்ஞான மயம், ஆனந்த மயம், என்று ஐந்து உறைகளாக ஆன்மாவிற்கு உடல் வாய்க்கின்றது. அது ஆன்ம ஒளியை அதாவது, அறிவையும், ஆன்ம ஆனந்தத்தையும், ப்ரக்ருதித் தொடர்பாக இருந்து தடுக்கின்றது. இதனாலேயே, ஒருவன் ஜீவான்மாவாக இருந்தாலும் தன்னுடைய ஆன்மாவின் ஆனந்தத்தையே, சாதாரண உலக வாழ்க்கையில் முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் இருக்கிறான். காரணம், கர்மாவின் தடை, அது தளையாக ஓர் உடலை, தந்து விடுகின்றது.
மோட்ச பேதம்
நல்லொழுக்கத்தாலும், இறைவனின் மீது கொள்ளும் பக்தியாலும், இறைவனுடைய கருணையைப் பெற்று, கர்ம பலன் தீர்ந்து உடல் தடை நீங்கி முக்தியை வைகுந்த உலகில் அனுபவிக்கிறான். அப்போது அவனுக்குத் தடையின்றி தன் ஆன்ம அனுபவம் ஆனந்தமாகக் கிட்டுகின்றது. அப்போது தான் ஜீவன் முழு ஆனந்தத்தையும் அனுபவிக்கிறான். இந்த மோட்ச அனுபவத்திலும், பல பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை நான்காக வகுத்திருக்கின்றனர். அவையாவன :
1. ஸாலோக்கியம் : அதாவது, கடவுளின் உலகமாக ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட வைகுந்த உலகில் முக்தி தசையில் இடம் பெறுவது. கடவுள் இருக்கும் உலகில் எங்காவது ஓர் இடத்தில் இருந்தபடி ஆனந்த போகத்தை அனுபவிப்பது, கடவுளின் உலகையே தானும் அடைகிற படியால் ஸாலோக்கியம் எனப்பட்டது.
2. ஸாமீப்பியம் : கடவுளின் உலகிலேயே அவரின் அருகிலேயே இடம்பெற்று ஆனந்தத்தை இச்சைப்படி அனுபவிப்பது.
3. ஸாருப்பியம் : கடவுளின் உலகத்தில் அவரைப் போலவே நான்கு கைகள் பெறுவது. இரண்டு கைகளில் அவரைப் போலவே சங்கு, சக்கரம் முதலியவற்றை ஏந்தியிருப்பது. இன்னும், பிறவற்றிலும் கடவுளின் ஒத்த வடிவமாக அடைந்து விடுவது. இவ்வாறு, கடவுளின் உலகில், கடவுளின் அருகில், கடவுளைப் போன்ற வடிவில், என்றென்றும் ஆனந்தம் அனுபவித்து கொண்டிருப்பது.
4. ஸாயுஜ்யம் : கடவுளைப் போன்றே வடிவு பெற்றும், அவருடைய உடலிலேயே புகுந்து, கலந்து இச்சைப்படி குறையாத ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது. இப்படி விடுதலை அடைபவரும், வேறு வேறு விதமாக முக்தியில் பலப் படித்தளங்களான ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். இதுவே முக்தி தசையிலும் முக்தர்களான ஜீவர்களுக்குள்ளேயும் இருக்கும் ஆனந்தத்தின் ஏற்றத் தாழ்வுகள். விடுதலைக்கு, வைகுந்த உலக வாசத்திற்கு. மஹா விஷ்ணுவின் மீது உயர்ந்த பக்தியோடு சேர்ந்த இறைவனின் தியானமே வழியாகும், உபாயமாகும். இந்த தியானம் உத்தம மனுஷ கணமுதல், பிரும்ம கணம் வரையில் ஒரே குண வழிபாடு ஆகும். நான்கு குணத்தியானம், அநேக குணத் தியானம் என்ற வழியும், அதாவது மோட்சத்திற்கான உபாயமும் பலவாக வித்தியாசப்பட்டு இருக்கும்.
கடவுளுக்கு அநேக கலியாண குணங்கள் இருப்பதை பாவிப்பது அநேக குணத்தியானமாகும். இறைவன் கருணை வள்ளல் என்று தியானிப்பது ஏக குண வழிபாடு ஆகும். நான்கு குண வழிபாடு என்று ஏற்கனவே பார்த்தபடி சத், சித், ஆனந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை எண்ணித் தியானிப்பது ஆகும். இப்படி சாதனா வழிகள் பலவாக வேறுபட்டிருக்கின்றன. ஏற்கனவே உள்ளபடி ப்ரக்த்யட்சம், அனுமானம், ஆகமம் என்பன மூன்றும் சமாச்சாரங்களை அறிவதற்கு கருவியான, வழியான பிரமாணங்கள் ஆகும். எல்லா வேதங்களுக்கும் பொருள் ஆவது பரமாத்மாவே. அவர் ஸ்ரீஹரியே. மஹாவிஷ்ணுவே, என்று துவைதம் ஒப்புக்கொள்கிறது. இந்த தத்துவத்தில் மதவழியில் ஜீவர்கள் பலர்; ப்ரக்ருதி ஒன்று பரபிரும்மம் ஒன்று. இம்மூன்று தத்துவங்களும் ஸ்வரூபப்படி பேதம் உள்ளவை. ஜீவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேறுபாடுகள் உள்ளவர். அவர்களிலிருந்து அறிவற்ற ஜடமான ப்ரக்ருதி வேறாக இருக்கிறது. ஆத்மாக்களில் பலவகையுள்ளன. ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப, நிலைகளுக்கேற்ப, அவரவர் அடையும் இறுதி நிலை வித்தியாசப்படுகின்றது. அதாவது, ஒரு ஜீவன் மோட்சத்திற்கு தகுதியுடையவனாக இருக்கும் போது, இன்னொரு ஜீவன், உலக வாழ்க்கை சுக, துக்கங்களுக்கே தகுதியுள்ளவனாக இருக்கிறான். மற்றொரு ஜீவன் நரகத்திற்கே பொருத்தமானவனாக இருக்கிறான். ஜீவர்களுள் ஆண், பெண் என்ற வகையிருக்கின்றது. இப்படி வகைப்பிரிவு விடுதலை நிலையில் வைகுந்தத்திலும் இருக்கின்றது. ஜீவர்கள் உலக வாழ்விலும், மோட்சத்திலும் அடையும் ஆனந்தத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. விடுதலையனுபவமும், நான்கு விதமானதாக இருக்கின்றன. விடுதலைக்கான சாதனையிலும் வேறுபாடு உள்ளது. ஜீவர்கள், பரமாத்மா, ப்ரக்ருதி முதலிய மூன்று தத்துவங்களிலும், வேறான லக்ஷ்மி, மஹாவிஷ்ணுவின் பத்தினியாகச் சொல்லப்படுகிறாள். இறைவன் இருக்கும் நிலைகளிலும் பிரிவுகள் உள்ளன.
இவ்வாறு, ஒவ்வொரு செய்தியிலும் பேதங்களே இருப்பதாக காட்டப்படுவது தான் நோக்கம். இதற்கு துவைத சித்தாந்தம் என்றும் பெயர். முக்கியமாக, பிரும்மத்திற்கும், ஜீவனுக்கும் சுயவடிவ வேறுபாடு சொல்லுகிறபடியால் துவைதம் எனப்பெயர் பெற்றது. ஆத்மாக்களில் ஆண், பெண் வகையைச் சொல்லுவதும், ஆண் ஆன்மாக்கள் கரும வசத்தால் பெண்ணுடலுடன் உலகில் பிறக்கும் என்பதும், அதே போல பெண் ஆன்மாக்கள் ஆணுடலில் பிறக்கலாம் என்பதும் மாத்வ மதத்தில் புதுமை. சமத்துவம் பேசும் இக்காலத்தில் ஆன்மாக்களுள் சிலர் மோட்சம் பெறத் தகுதி உள்ளவர். சிலர் சொர்க்கத்திற்கும், சிலர் நரகத்திற்குமே தகுதியானவர் எனத் தரம் பிரித்துக் கூறுவதை எல்லாரும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். சிலரை நல்ல ஆத்மா என்றும், இன்னும் சிலரை துராத்மா என்றும் நல்ல கெட்ட தன்மையை ஆன்மாவில் ஏற்றிய கருத்து வழக்கு துவைதக் கொள்கை பரவியதையே காட்டுகிறது. முக்தி பெறத் தகுதியானோரில் பல கணங்கள், கூறப்பட்டுள்ளன. அவரவர் எந்த கணத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பஞ்சாங்கத்தில் பார்க்கலாம். திருமணப் பொருத்தம் இந்த கணப்பொருத்தத்தை பார்த்தும் முடிவு செய்கிறார்கள். அதாவது பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவரவர் எந்த கணத்தைச் சேர்ந்தவர் என முடிவு செய்யலாம். இம்மாதிரி ஆன்மாக்களை சத்வ, ரஜோ, தமோ குணங்களை வைத்து வகை பிரிப்பது போல இருக்கிறது. சத்வ ஆத்மாக்களே முக்தி பெறத் தகுதியானவர் என்றும், ராஜஸ ஆத்மாக்களே சுக-துக்க உலக வாழ்க்கைக்கு ஏற்றவர் என்றும், தாமஸ குண ஆன்மாக்கள் நரக வாழ்விற்கே தகுதியானவர் என்றும் பிரித்திருப்பது போலப்படுகின்றது.
ஜீவசிருஷ்டி : ஸ்ரீ மாத்வ சித்தாந்தத்தில் பிரும்ம சிருஷ்டி என்றும் ஜீவ சிருஷ்டி என்றும் கூறப்படுகிறது. பிரும்மமாகிய கடவுள் பிரக்ருதியினால் உலகங்களைப் படைத்தார். ஜீவர்களை அவற்றில் இணைத்து வாழச் செய்தார். ஜீவர்கள், தங்கள் அறிவிற்கேற்பவும் இறைவனால் அருளப்பட்ட சக்திக்கேற்பவும், குணத்தால் எழும் விருப்பங்களுக்கு ஏற்பவும் பலவற்றை உண்டாக்கிக் கொண்டனர். இது அவர்களது கர்மாவானது. இவர்களின் கர்ம விளைவே இன்ப துன்ப வாழ்க்கை ஆனது. இந்த விதத்திலேயே ஜீவர்கள் இயற்கையான உலகில் செயற்கையாகச் சிலவற்றைச் செய்து கொண்டனர். ஆடையின்றிப் பிறந்த மக்கள் ஆடையை செய்து கொண்டனர். வீடு இன்றி வெளியில் திரிந்த மனிதர் வீடுகளைக் கட்டிக் கொண்டனர். விஞ்ஞானம் வளர்ந்தது. கலைகளும், தொழில்களும், வான இயலும், புவியியலும் ஆராய்ந்து அறியப்பட்டன. வசதிகள் பெருகின. எந்திரங்களும் மனிதருடன் போட்டி போட்டுக் கொண்டு இயங்கலாயின! மனிதர் தங்கள் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டனர்.
கீதையில்
ஏழாவது அத்யாயத்தில் 14வது செய்யுளில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பௌதிக இயல்பின் மூன்று குணங்களும் வெற்றி கொள்ள முடியாதவை. என்னிடம் சரணடைந்தோர் மட்டுமே அவற்றைக் கடக்கலாம் என்றும், 15-ஆவது செய்யுளில் யார் யார் அவரது சக்தியான மாயையைக் கடக்க முடியாதவர் என்றும் காட்டுகிறார். அவர்கள் நான்கு விதமானவர்.
1. அறிவுள்ள முட்டாள்கள்
2. மனிதரில் கெட்ட குணம் படைத்த இழிவானவர்.
3. மாயையால் புத்தி குழம்பிய உலக வாழ்வை விரும்புபவர்கள்.
4. நாத்திக தன்மையான அசுரரின் இயல்பைக் கொண்டவர்கள்.
ஏனெனல் இவர்கள் முழுமுதல் கடவுளான கடவுளைப் பணியாததால் என்கிறார். கீதையை ஆதாரமாகக் கொண்டே, துவைதத்தில் தமோ யோக்யர் நான்கு விதம் என்றும், அவர்கள் என்றுமே கீழான நிலையை அடையும் தைத்யர், அஸுரர், பைசாசர், மட்டமான மனிதர் என்றும் சொல்லப்பட்டிருக்கலாம். அதே போலவே முக்தி யோக்யரும் ஐந்து விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றனர்.
கீதையில் நல்லோர் நான்கு விதம். அவர்கள்
1. துக்கமுடையவர்
2. பொருளை அடைய விரும்புபவர்
3. அறிவைத் தேடி அடைவோர்
4. விடுதலையை நாடுவோர்
எனப்படுபவர் என்று 16வது செய்யுளில் தெரிவிக்கிறார். இது 1. பித்ரு கணம், 2. சக்கரவர்த்தி கணம், 3. ரிஷிகணம், 4. தேவகணம், 5. மனுஷ்யோத்தமகணம் என்ற துவைதக் கருத்தான பிரிவுகளோடு ஒப்பிடக்கூடியதாகவே உள்ளது. அவர்களிலும், என்னிடம் தூய பக்தி கொண்டவனே முழு அறிவாளியும் எனக்குப் பிடித்தவனுமாவான் என்று 17வது செய்யுளில் ஸ்ரீகிருஷ்ணர் புகழ்வது, மனுஷியோத்தமர் பிரிவில் ஆனவர்களையாக இருக்கலாம். மாயையால் அறிவு மயக்கம் அடைந்தவர் என்று கூறப்பட்டவர், சுகமும் துக்கமும் மாறிவரும் உலகில் நித்திய ஸம்சாரிகளாக இருக்கலாம். துக்கம் பொறுக்காமலும், செல்வத்தை நாடியும் பரம்பொருளைப் பணிபவர், நற்காரியங்களைப் புரிபவராகி சொர்க்க நிலை எய்துபவராக இருக்கலாம் என்று பகவத்கீதைக் கருத்தை துவைதம் எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் என்று சிந்திப்பவருக்குப்படலாம்.
துவைதத்தில் உலகம் உண்மை, ஜீவர்கள் உண்மை. ஜீவர்களுள் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள் எனப்படுவோர் தங்களுக்கும் உலகத்திற்கும் வேறான உயர்ந்த தத்துவமான கடவுளைப் பணிந்து நடப்பவராவர். தீயவர் என்போர் கடவுளுக்கும் அவர் அடியார்களுக்கும் தீங்கு செய்பவர். இந்த கருத்தும் சொர்க்கம், நரகம் என்ற கருத்தும் மக்கள் நலம் புரிபவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் உலகிற்கு உதவி. எல்லாவற்றுக்கும் மேலான பிரும்மம் அவருக்கு உட்பட்ட, அவரால் அந்தந்த சக்தியுடன் அந்தந்த வேலைகளுக்காக நியமிக்கப்பட்ட பல தெய்வங்கள் கூறப்பட்டிருப்பது பலதரப்பட்ட மக்களின் வழிபாட்டிற்கு வசதியாகும். உதாரணமாக விடுதலையை விழைபவர் மேலான பரப்ரம்மமான ஹரி என்ற மஹாவிஷ்ணுவைப் பணிந்து குற்றவேல் புரிவர். மற்ற உலக வாழ்க்கைக்கு உதவியான பணம், படிப்பு, தொழில், வெற்றி, புகழ், ஆரோக்கியம் பிற இன்பங்கள் ஆகியவற்றை அனுபவிக்க வேண்டியவர்கள் அந்தந்த பயன்களை தர சக்தியுள்ள சின்ன சின்ன தெய்வங்களைத் தொழுவர். இது மக்களின் காரிய சித்திக்காக தேவதைகளை தொழுதல் ஆகும். அதாவது, படிப்பு வேண்டுமென்றால் சரஸ்வதியைத் தொழுவதும், பணம் வேண்டுமென்றால் லக்ஷ்மியைத் தொழுவதும், போரில் வெற்றி வேண்டுமென்றால் துர்க்கையையும், பிள்ளை குடும்ப சுகம் வேண்டுமெனில் சிவனையும், காரியங்கள் தடையின்றி நடக்க வேண்டுமெனில் கணபதியையும் வழிபடுதலும் ஆகும். ஆனாலும் எந்த தெய்வத்தை வணங்கி எந்த பலனை பெற்றாலும் அந்த தெய்வத்தின் மூலம் அந்த பலனைக் கொடுப்பதும் அந்தந்த தெய்வங்களின் மூலம் இயங்கும் பரமாத்மாவே.
வேதம் பலவிதமான சுருதிகளை உடையதாக இருக்கின்றது. அதில் ஒரே சுருதி வாக்கியத்திற்கே பலவிதங்களில் பொருள் காணும்படி இருக்கிறது. சாம வேதத்தில் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் ஒரு வாக்கியம் மிகவும் புகழடைந்தது. அதுவே தத் த்வமஸி என்பதாகும். இது ஒரு தந்தை தனது மகனுக்கு உபதேசித்தது ஆகும். உத்தாலகர் தனது மகனான சுவேத கேதுவைப் பார்த்து தத் த்வமஸி என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வாக்கியமே பலவிதமாகப் பொருள் கூறப்பட்டு மதப் பிரிவுகள் உண்டாயின. இதுவே துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்று மதங்களும் உண்டாக காரணமாயிற்று. தத் த்வமஸி என்ற வாக்கியத்திற்கு நீ அந்த பிரும்மம் தான் என்று பொருள். ஆனால் வேறு பல சுருதி வாக்கியங்கள் பிரும்மம் வேறு, ஜீவன் வேறு என்ற பொருளில் இருக்கின்றன. அப்போது இந்த இரண்டு விதமான சுருதி வாக்கியங்களுக்கும் முரண்பாடு வருகின்றது. ஒன்று பிரிவை மறுக்கும் அபேத வாக்கியம். மற்றவை பிரிவை ஒப்புக்கொள்ளும் பேத வாக்கியங்கள் ஆகும். ஆகவே துவைதிகள் வேத வாக்கியங்களுக்கேற்ப அபேத வாக்கியத்திற்கும் பொருள் கொள்கின்றனர்.
முன் சொன்ன சாந்தோக்ய உபநிஷத்தில் ஆத்மா என்ற சொல்லுக்குப் பிறகு தத் த்வமஸி வாக்கியம் வருகின்றது. அப்போது ஆத்மா எனும் வார்த்தையுடன் தத் என்பது சேர்ந்து ஆத்மா-தத் என்றாகிறது. இதை ஆத்மா-அதத் என்று துவைதிகள் பிரிக்கின்றனர். அப்பொழுது, அதத் த்வம் அஸி என்று சுருதி வாக்கியம் உண்டாகும். அதற்கு நீ அந்த பிரும்மம் அல்ல என்ற பொருள் உண்டாகும். இப்போது சுவேத கேது என்ற ஜீவனைப் பார்த்து நீ அந்த பிரும்மம் அல்ல என்று சொன்னதாக தெளிவாகிறது. இது துவைதப் பொருளுக்கு சாதகமாகும். இதை அதத் என்று சொல்லைப் பிரிப்பதால், முக்கியமான பொருளை விட்டு வேறு பொருள் சொல்வதாகுமே என்ற சுவை குறைவு உண்டாகலாம். ஆனாலும் ஆயிரக்கணக்கான பேதத்தை ஒப்புக்கொள்ளும் வேத வாக்கியங்களுக்கு முரணாகாமல் இருக்க, இதைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று துவைதிகள் சொல்லுகின்றனர். இன்னொரு வழியிலும் தத் த்வமஸிக்குப் பொருள் சொல்லுகின்றனர். ஓர் அரசனின் நாட்டில் உள்ளவையெல்லாம் அவனுக்குச் சொந்தம் என்று தெரிவிப்பதாக, இதெல்லாம் அரசன் என்று சொல்லுவது போல, நீ அந்த பிரும்மத்திற்கு உட்பட்டவன் என்று அறிவிப்பதற்காக, நீ அந்த பிரும்மம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே தத் த்வமஸி என்ற வாக்கியப் பொருள் என்கிறார்கள். இவ்வாறு தான் ஜீவர்களுக்கும், பிரும்மத்திற்கும் இடையே வேறுபாடு கூறுவதால் துவைத தத்துவம் என்று பெயர் வந்தது.
இந்த பேதக் கருத்தை வலியுறுத்தி பகவத்கீதை, உபநிஷத்துகள், பிரும்ம சூத்திரம் ஆகிய பிரஸ்தானத் திரயத்திற்கு விளக்கமெழுதி துவைத தத்துவத்தை ஸ்ரீமாத்வாசாரியார் நிலை நாட்டியுள்ளார். அவருக்கு முன்பே வேதத்திலும் சொல்லப்பட்டிருக்கும் துவைத கருத்தையே அவரும் நிலை நாட்டியிருப்பதாகவே துவைதிகள் கூறுவர். இந்திய வேதாந்தத்தில் உள்ள கருத்துகளையே மதாசாரியார்கள் நிறுவியிருப்பதால், அவர்களுக்கு முன்பே இருந்த தத்துவங்களையே வாதங்களாலும், விளக்கி எழுதப்பட்ட நூல்களாலும் அவர்கள் பரப்பியதாகக் கூறுவர். ஸ்ரீ மாத்வாசாரியாருக்கும் பின் வந்தவர்களில் அன்னாரின் கொள்கையைப் பரப்பி மாத்வ மதத்தைத் தூக்கி, புகழ்பெற்று நிறுத்தியவர் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ஆவார். அவரும் துவைதக் கொள்கையை விளக்கி நூல்கள் இயற்றியுள்ளார். வாதங்களால் பிறமதங்களை வென்றுள்ளார்.