காரைக்கால்; காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 39 மெகா சைஸ் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. காரைக்காலில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 39 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.மூன்று நாட்கள் பூஜைக்கு பின் நேற்று சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. முன்னதாக, புதிய பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஏழைமாரியம்மன் கோவில் முன்பு, பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கிளிஞ்சல்மேடு கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, பாலச்சந்தர், பால், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.