பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விநாயகரின் அவதார தினம் விநாயகர் சதுர்த்தி என உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விதவிதமான விநாயகர் சிலைகளை சதுர்த்தி அன்று அமைத்து, ஓரிரு தினங்கள் வழிபாடு செய்வர். பிறகு, சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச்சென்று, அருகில் உள்ள கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைத்து விட்டு வருவர். இந்த ஊர்வலத்திற்கு விசர்ஜன ஊர்வலம் என்று பெயர்.
பொள்ளாச்சி பகுதிகளில், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக 295 சிலைகள் போலீஸ் அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ௨௯ல் விநாயகர் சதுர்த்தி முடிந்து விட்ட நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக நிறுவப்பட்டிருந்த 65 சிலைகள், விசர்ஜன ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டன. பிறகு, அம்பராம்பளையம் ஆற்றில் கரைக்கப்பட்டன. மேலும் பொதுமக்களால் அமைக்கப்பட்டிருந்த சிலைகள், கிராம குளங்கள் மற்றும் வாய்கால்களில் இறக்கி கரைக்கப்பட்டன. ஊர்வலம், பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டைகள், பேண்டு வாத்தியங்கள் முழக்கியும் உற்சாகமாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு சிலையின் ஊர்வலத்திற்கும் போலீசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அவர்கள் கூறுகையில், போக்குவரத்தும், சட்ட ஒழுங்கும் பாதிக்காத வகையில், ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக ஊர்வலம் நடத்தும்படி பட்டியலிட்டு கொடுத்துள்ளோம். இத வரை எவ்வித பிரச்னையும் இல்லாமல் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. மீதமுள்ள சிலைகள் அடுத்தடுத்து வரும் நாட்களில்கொண்டு சென்று கரைக்கப்படும், என்றனர்.
வால்பாறை: வால்பாறையில் கொட்டும் மழையில் 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மாலையில் விசர்ஜனம் செய்யப்பட்டன. வால்பாறை தாலுகா இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியன்று வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.மூன்று நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின் , நேற்று காலை இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும், வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. மதியம் 1.30 மணிக்கு நடந்த 22ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். நகர பொதுச்செயலாளர் லோகநாதன் வரவேற்றார். பின் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், பா.ஜ.,மண்டல தலைவர் தங்கவேல், இந்துமுன்னனி பொதுச்செயலாளர் சபரீஸ்வரன் ஆகியோர் பேசினர். ஊர்வலத்தை, வள்ளிக்கண்ணு, தாமோதரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, வாழைத்தோட்டம், ஸ்டேன்மோர் சந்திப்பு வழியாக நடுமலை ஆற்றில் முடிவடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும், விசர்ஜனம் செய்யப்பட்டன. கொட்டும் மழையில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆனைமலை: ஆனைமலை ஒன்றியப்பகுதியில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத்மற்றும் உலக நல வேள்வி குழுவினர் சார்பில், பல்வேறு இடங்களில் 85க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று மாலையும், ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக நகரப்பகுதிக்குள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கடந்த இருநாட்களாக ஆனைமலை உப்பாற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, உலக நல வேள்வி குழுவினை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஏ.டி.ஏஸ்.பி ராமசந்திரன் தலைமையில், வால்பாறை டி.எஸ்.பி., சக்திவேல் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுப்பட்டனர்.
மழையில் பாதுகாப்பாக சென்ற விநாயகர் : வால்பாறையில் நேற்று நடந்த விசர்ஜன ஊர்வலத்தின் போது கன மழை பெய்ததால், பக்தர்கள் விநாயகர் மீது மழைத்துளி படாமல், குடையை பிடித்தவாறு சென்றனர். வில்லோனி நெடுங்குன்று, சங்கரன்குடி ஆகிய செட்டில்மென்ட் பகுதியிலிருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டன. விசர்ஜன ஊர்வலத்தையொட்டி டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.