மண் சிலை என நினைத்து முட்புதரில் வீசப்பட்ட ஐம்பொன்சிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2014 01:09
திருவாடானை : திருவாடானை அருகே கண்டுபிடிக்கபட்ட 150 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை மண் சிலை என, முட்புதரில் வீசப்பட்டு இரண்டு நாட்களாக கிடந்தது தெரியவந்துள்ளது. திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கண்மாய் தூர்வாரும் பணியின் போது மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மணலை அள்ளி கரையின் போட்ட போது, இரு அம்மன் சிலைகள், இரு பீடங்கள் கரையிலிருந்து உருண்டு வந்து விழுந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் களிமன் சிலை என நினைத்து அருகில் உள்ள காட்டுகருவேல மரத்தின் அடியில் விட்டுவிட்டு சென்றனர். மறுநாள் வேடிக்கை பார்க்க வந்த சிலர், சிலையின் மீது சூரிய ஒளிபட்டவுடன் மின்னுவதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு நகை வியாபாரியை வரவழைத்து சோதனை செய்ததில் ஐம்பொன் என தெரியவந்தது. 150 கிலோ எடையுள்ள இந்த ஐம்பொன் சிலையில் சுமார் 25 கிலோ தங்கம் சேர்க்கபட்டிருக்கும் என்று நகைவியபாரி போலீசாரிடம் தெரிவித்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இச் சிலைகள் இரு நாட்களாக காட்டுகருவேல மரத்தின் அடியில் கிடந்தது குறித்து பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தளிர்மருங்கூர் கிராம மக்கள் கூறியதாவது: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தின் ஒரு பகுதி மண்ணுக்குள் புதைந்து விட்டிருக்கலாம். அப்போது இருந்த கோயில்களும் பூமிக்குள் புதையுண்டு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே இப்பகுதியை தொல்பொருள் ஆய்வுதுறையினர் ஆய்வு செய்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கவாய்ப்புள்ளது, என்றனர். சிலைகள் தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது.