பதிவு செய்த நாள்
26
செப்
2014
12:09
ராமேஸ்வரம் : ஆன்மிக மரபுக்கு எதிராக ராமேஸ்வரம் கோயிலுக்குள் வெளி நபர்கள் புனித ‘கோடி தீர்த்தம்’ வழங்கி பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்திவருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல், 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீராடி, தரிசித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டது. இதில், 21 தீர்த்தங்களையும் உள்அடக்கிய 22 வது தீர்த்தமான ‘கோடி தீர்த்தம்’ ராமநாசுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜிப்பதால், இதனை பக்தர்கள் நீராடினால் பாவங்கள் நீங்கி கோடி புண்ணியம் சேருவதாகவும், இதே தீர்த்தத்தை கிருஷ்ண பகவான் நீராடியதால், கம்ஸனை கொன்ற பாவம் நீங்கியதாக கோயில் வரலாற்றில் கூறப்படுகிறது.
பல மகிமை உள்ள கோடி தீர்த்தம், சுவாமி சன்னதி அருகே முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளதால், இந்த தீர்த்தத்தை சைவ சமயம் அறிவு, ஆன்மிக மரபு அறிந்தவர் மட்டுமே பல நூறு ஆண்டுகளாக ஊற்றி வந்தனர். மீதமுள்ள 21 தீர்த்தங்களை யாத்திரை பணியாளர் குழுவினர் பக்தர்களுக்கு ஊற்றுகின்றனர். காலபோக்கில் ஆன்மிக மரபுகளை மீறிய கோயில் நிர்வாகம், தற்போது கோயிலில் ஒப்பந்த சுகாதார ஊழியர்கள், கோயில் நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத வெளிநபர்கள் ‘கோடி தீர்த்தம்’ ஊற்றி, வசூல் வேட்டை நடத்துவதை கண்டு பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
வசூல் வேட்டை: அமாவாசையன்று நீராட வந்த பக்தர்களிடம் கோடி தீர்த்தம் ஊற்றிய வெளி நபர்கள் ரூ. 10 முதல் 100 ரூபாய் வரை வசூலித்தனர். கோயில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள், வசூல் வேட்டை நடத்துவதை தடுக்க கோயில் நிர்வாகம் முன்வரவில்லை. மேலும், 20 ரூபாய்க்கு விற்க வேண்டி கோடி தீர்த்தம் பாட்டில் (அரை லிட்டர்), பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 25 ரூபாய்க்கு கோயில் ஊழியர்களே விற்றனர். திருவண்ணாமலை பக்தர் என். தாமோதரன் கூறியதாவது: 22 வது கோடி தீர்த்தத்தில் இருந்த நபர்கள், தீர்த்தத்திற்கு பணம் போடுங்கள், உங்களுக்கு புண்ணியம் சேரும் எனவும், சில பக்தர் கையில் வைத்திருந்த சிறிய கேனில் தீர்த்தம் ஊற்றவும் பணம் கேட்டனர். மேலும் கோடி தீர்த்தம் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வைத்து விற்றனர். கோயிலுக்குள் எங்கு சென்றாலும் பணம் பிடுங்குவதையே சிலர் குறிக்கோளாக வைத்திருப்பதை தடுக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.