பதிவு செய்த நாள்
29
செப்
2014
02:09
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.7 கோடியில் நடக்கும் திருப்பணிகள் முடிவடையாமல் உள்ளதால் 2015 ல் கும்பாபிஷேகம் நடப்பது தாமதமாகும் என தெரியவந்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் 2015 ல் கும்பாபிஷேகம் நடத்திட இந்து அறநிலைத்துறை முடிவு செய்து, 13 வது நிதி ஆணைய நிதியின் கீழ் ரூ.1.97 கோடி, திருக்கோயில் நிதி ரூ.77 லட்சம் ஒதுக்கீடு செய்தது. நன்கொடையாளர்கள் நிதியாக ரூ.4.26 கோடி சேர்த்து ரூ.7 கோடியில் கோயில் கிழக்கு, மேற்கு ராஜகோபுரம் மராமத்து செய்து இரு கோபுரத்திற்கும் "சில்வர் கிரே கலரில் வர்ணம் பூசப்படஉள்ளது. மூன்றாம் பிரகாரம், சேதுபதி திருக்கல்யாண மண்டபம் தூண்கள், சிலைகள் மராமத்து செய்து பல வண்ண கலரில் வர்ணம் தீட்டும் பணி, கோயில் முதல் பிரகார தூண்கள், சுதைகள் பழமை மாறாமல் இருக்க வாட்டர் வாஷ் செய்து, வார்னிஷ் பூசும் பணி நடந்து வருகிறது. முழுமையடையாத பணிகள்: சுவாமி, அம்மன், விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட 15 சன்னதி விமானங்கள், மங்கள கோபுரம் மராமத்து இதுவரை திருப்பணிகள் துவங்காமல் உள்ளது. இந்த பணிகளை விரைவில் துவக்கினால் தான் சில மாதங்களில் முடிவடையும். நன்கொடையாளர்கள் நிதியில் கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு, வடக்கு புதிய ராஜகோபுரம் அமைக்கும் பணியில், 70 சதவீதம் முடிந்துள்ளது. இரு கோபுரமும் கோயில் மூன்றாம் பிரகாரத்துடன் இணைக்க, கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி துவங்கவில்லை. 2015 பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்திட கோயில் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தாததால், நன்கொடையாளர்கள் இன்றி மேற்கு ராஜகோபுரம், மங்கள கோபுரம் திருப்பணி இதுநாள் வரை துவங்கப்படவில்லை.
கும்பாபிஷேகம் எப்போது: புதிய இரு கோபுரம் பணி முடிய மேலும் 5 மாதம் நீடிக்கும் என்பதால் இதனை தவிர்த்து, கிழக்கு, மேற்கு ராஜகோபுரம், 15 விமானங்கள் திருப்பணியை அவசர கதியில் முடித்து, 2015 துவக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்திட கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து சிருங்கேரி சாரத பீட சுவாமியிடம் 2015 ல் பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த தேதி தெரிவிக்குமாறு கோரியது. ஆனால் சிருங்கேரி சுவாமிகள், ஜன., பிப்., மார்ச்சில் கும்பாபிஷேகம் நடத்த உகந்த தேதி இல்லை எனவும், வடக்கு, தெற்கு ராஜகோபுரம் பணி பூர்த்தியானதும், 2015 ம் ஆண்டு வைகாசியில் கும்பாபிஷேகம் நடத்தினால் நல்லது என தெரிவித்துள்ளாக தெரிகிறது. மேற்கு கோபுரம், விமானங்கள் திருப்பணி துவங்காத நிலையில், திட்டமிட்டபடி 2015 ல் கும்பாபிஷேகம் நடைபெறுமா என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் திருமடம், திருகோயில் பாதுகாப்பு மாநில நிர்வாகி பக்ஷி சிவராசன் கூறியதாவது: 2015 ல் தை முதல் சித்திரை வரை குரு உக்கிரத்தில் இருப்பதால், சிவ ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது உகந்ததல்ல. மேலும், ராமேஸ்வரம் கோயிலில் 400 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த தெற்கு, வடக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி 100 சதவீதம் முடிந்த பிறகு, கும்பாபிஷேகம் நடத்தினால் நல்லது என, சிருங்கேரி சுவாமிகள் கூறியது சரியே. அவசர கதியில் திருப்பணி முடித்து கும்பாபிஷேகம் நடத்தினால் ஆட்சியாளர்கள், ஊர் மக்களுக்கு தீமை ஏற்படும், என்றார். ராமேஸ்வரம் கோயில் அதிகாரி கூறுகையில், ""வடக்கு, தெற்கு புதிய கோபுரங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து திருப்பணிகளும் விரைவில் முடிவடையும். இதன் பின் 2015 மத்தியில் (வைகாசி, ஆவணி) கும்பாபிஷேகம் நடத்திட இந்து அறநிலைத்துறை ஆணையரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது, என்றார்.